Yashika Anand latest Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். ‘கவலை வேண்டாம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் துருவங்கள் பதினாறு, ஜாம்பி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பெயரிட்டப்படாத சில படங்களிலும் நடித்து வருகிறார்.

யாஷிகா கடந்த மாதம் தனது நண்பர்களுடன் புதுச்சேரி சென்றுவிட்டு காரில் திரும்பிய போது, மாமல்லபுரம் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் பெரும் விபத்தில் சிக்கினார். இந்தச் சம்பவத்தில் யாஷிகா மற்றும் அவரது நண்பர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவரது தோழி வந்திரெட்டி பவானி (28) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்த வந்திரெட்டி பவானி விபத்து நடந்த ஒரு வாரதிற்கு முன்தான் சொந்த ஊரான ஹைதராபாத்துக்கு வந்துள்ளார் என்றும், அங்கிருந்து தனது தோழி யாஷிகாவை பார்ப்பதற்காகச் சென்னை வந்துள்ளார் என்றும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்தது.
யாஷிகா மற்றும் அவரது நண்பர்கள் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் யாஷிகா. இந்நிலையில், தனது தோழியின் மறைவுக்கு இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ள யாஷிகா, ‘வாழ்வில் இனி எப்போதும் இந்த குற்ற உணர்வை அனுபவிப்பேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
அந்த இன்ஸ்டா பதிவில், “நான் இப்போது என்ன செய்கிறேன் என்பதை என்னால் உண்மையில் வெளிப்படுத்த முடிவில்லை. இந்த குற்ற உணர்வை என் வாழ்நாள் முழுவதும் அனுபவிப்பேன். அந்த துயர விபத்தில் இருந்து என்னைக் காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டுமா அல்லது என் நல்ல தோழியை என்னிடமிருந்து பிரித்துச் சென்றதற்காக என் வாழ்நாள் முழுவதும் கடவுளைக் குற்றம் சொல்ல வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை.
ஒவ்வொரு நொடியும் நான் உன்னை மிகவும் மிஸ் பண்ணுகிறேன் பாவனி. நீ என்னை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். உனது குடும்பத்தை இவ்வளவு மோசமான சூழ்நிலையில் வைத்ததற்கு என்னை மன்னித்து விடு பவானி. உயிருடன் இருப்பதில் நான் எப்போதும் குற்ற உணர்வை அனுபவிப்பேன் என்று எனக்குத் தெரியும். உன் ஆன்மா சாந்தியடையும் என்று நம்புகிறேன்! நீ என்னிடம் திரும்பி வர பிரார்த்திக்கிறேன்! ஒரு நாள் உன் குடும்பம் என்னை மன்னிக்கும் என்று நம்புகிறேன். நம்முடைய நினைவுகளை வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன்.
நான் எனது பிறந்தநாளைக் கொண்டாட மாட்டேன். எனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என எனது அனைத்து ரசிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன்! தயவுசெய்து அவளுடைய குடும்பத்திற்காக ஜெபியுங்கள்! கடவுள் அவர்களுக்கு அதிக வலிமையைக் கொடுப்பார். என் வாழ்க்கையின் மிகப்பெரிய இழப்பு. தயவுசெய்து ஒருநாள் என்னை மன்னியுங்கள். நான் உன்னை ரொம்பவும் மிஸ் பண்ணுகிறேன் பவானி.” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவரது தோழி பவானியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள யாஷிகா ஆனந்த், “என் வாழ்க்கையில், இன்று நீ எங்களுடன் இல்லாததற்கு நான் ஒரு காரணமாக இருப்பேன் என்று நான் நினைத்ததில்லை! ரிப் என் அழகான தேவதையே! உன்னை அதிகமாக நேசிக்கிறேன் !!” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“