கார்த்தி
கதாநாயகன் ஒரு ரவுடியைக் கொலைவெறியோடு பின் தொடரும் காட்சியுடன் தொடங்கும் படம், நாயகனின் கோபத்துக்குக் காரணம் என்ன என்பதைச் சொல்வதாக விரிகிறது. ரவுடி கொல்லப்பட்டாலும் பிரச்சினை தீரவில்லை. காரணம் அந்த ரவுடி பெரியதொரு மோசடி வலைப்பின்னலின் ஒரு கண்ணி. அவ்வளவுதான்.
அந்த வலைப்பின்னல் எது என்பதுதான் ‘எய்தவன்’ கதையின் மையம். கல்விக் கூடங்களில் நடக்கும் அக்கிரமங்களுக்குக் காரணம் யார் என்பதைத் தேடிச் செல்லும் படம், கல்லூரியின் நிர்வாகம், ரவுடிகள், புரோக்கர்கள், அரசியல்வாதிகள் என விரியும் வலைப்பின்னலை அம்பலப்படுத்துகிறது.
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சிறு தொழிலதிபரான கிருஷ்ணா (கலையரசன்) குடும்பத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்துவருகிறான். அவன் தங்கைக்கு மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்பது ஆசை. போதிய மதிப்பெண்கள் இல்லாததால் அதிகப் பணத்தை நன்கொடையாகக் கொடுத்துத் தனியார் கல்லுரியில் தங்கையைச் சேர்க்கிறான் கிருஷ்ணா. அந்தக் கல்லூரியின் வண்டவாளம் விரைவிலேயே அம்பலமாக, குடும்பத்தினரின் மீது இடி விழுகிறது. இந்தப் பிரச்சினையை கிருஷ்ணா எப்படி எதிர்கொள்கிறான் என்பதே எய்தவனின் திரைக்கதை.
கல்வி வியாபாரத்திற்குப் பின் இருக்கும் குலை நடுங்கவைக்கும் பேராசைக் கும்பலும் அதற்குத் துணை நிற்கும் ரவுடிகள், புரோக்கர்களும் இன்றைய காலகட்டத்தின் சாபமாக இருப்பதை இயக்குநர் சக்தி ராஜசேகரன் வலுவாகச் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு கட்டத்திலும் பணம் கைமாறும் விதமும் பிரச்சினை ஏற்படும்போது ஒவ்வொரு தரப்பும் நடந்துகொள்ளும் விதமும் பதைபதைக்கும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கிடையே இருக்கும் உறவுகளும் முரண்களும் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன. கல்விக் கொள்ளை தொடர்பான படத்தை ஒரு த்ரில்லராகத் தர முனைந்து அதில் பெருமளவு வெற்றியும் பெறுகிறார். வில்லனுக்கும் நாயகனுக்கும் இடையிலான நிழல் யுத்தம் பரபரப்பாக உள்ளது.
சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணா ஆவேசம் கொண்டு கிரிமினல்களை எதிர்கொள்ளும்போது கிரிமினல்போலவே சிந்தித்துச் செயல்படுவது நம்பும்படி இல்லை. புத்திசாலித்தனத்துக்கும் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளுக்கும் இன்னும் அதிக இடம் அளித்திருக்கலாம். சில காட்சிகள் தேவைக்கு அதிகமாக நீளுகின்றன. வில்லனின் முக்கியமான உதவியாளராக வரும் நரேன் தொடர்பான காட்சிகளும் தேவைக்கதிகமாக உள்ளது. காவல் துறை அதிகாரியாக வரும் கதாநாயகிக்கு மேலும் வலுவான பங்கைக் கொடுத்திருக்க முடியும் என்றாலும் அவர் வெறும் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். கிளைமாக்ஸை இன்னும் கச்சிதமாக அமைத்திருக்கலாம்.
என்றாலும், வில்லன் முதலான பாத்திரப் படைப்புகள், விறுவிறுப்பான காட்சிகள், கல்விக் கொள்ளை குறித்த அம்பலங்கள் ஆகியவற்றால் படம் கவனத்தை ஈர்க்கிறது.
கலையரசன் நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் சண்டைக் காட்சிகளில் வேகம் போதாது. சாத்னா டைட்டஸுக்கு எந்த வேலையும் இல்லை. வில்லனாக வரும் கௌதம் உடல் மொழியாலேயே மிரட்டுகிறார். நரேனின் உணர்ச்சி நடிப்பு அருமை. வேல. ராமமூர்த்தியை வீணடித்திருக்கிறார்கள். தர்மன் என்ற ரவுடியாக வரும் கிருஷ்ணாவின் நடிப்பு மனதில் நிற்கிறது.
பார்த்தவ் இளங்கோவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சோபிக்கவில்லை. சி.பிரேம்குமாரின் ஒளிப்பதிவு வசீகரிக்கிறது. ராக் பிரபு வடிவமைத்திருக்கும் சண்டைக் காட்சிகள் நன்றாக உள்ளன.
காட்சிகளின் நீளம், இரண்டாம் பாதியின் தொய்வு, நம்ப முடியாத சில திருப்பங்கள் ஆகியவற்றைத் தாண்டியும் எய்தவனின் அம்பு இலக்கை எட்டுகிறது.
3 ஸ்டார்.