யோகிபாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ”போட்” திரைப்படத்தின் விமர்சனம்
கதைக்களம்:
ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா அடிமைபட்டுக் கிடந்த காலத்தில், 2ம் உலகப் போர் நடைப்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் கதை தொடங்குகிறது. ஹிட்லரின் ஜெர்மனி படைகளின் ஆதரவோடு இந்தியாவில் ஜப்பான் குண்டு மழை பொழிந்து தாக்கிக்கொண்டிருக்க, மதராஸ் மாகாணத்தில் உள்ள முகாம் மீது தீடீரென குண்டு வீசப்போகிறார்கள் என்ற தகவல் பரவ மக்கள் சிதறி ஓட ஆரம்பிக்கிறார்கள்.
அந்த முகாமில் கைதியாக உள்ள தனது தம்பியை விடுவித்து அழைத்துச் செல்லும் மீனவர் குமரனும் (யோகிபாபு) அவனது பாட்டியும், இந்த தகவல் அறிந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள அவர்களது படகில் கடலுக்குள் தப்பிச் செல்கின்றனர். அவர்களோடு சேர்ந்து மேலும் 7 பேர் படகில் ஏறிக்கொள்ள பயணம் தொடங்குகிறது.
வழியில் ஒரு ஆங்கிலேய அதிகாரியும் படகில் ஏற, பாரம் தாங்க முடியாமல் படகு உடைய ஆரம்பிக்கிறது. 10 பேரில் 3 பேர் கடலில் குதித்தால் தான் உயிருடன் கரை சேர முடியும் என்ற நிலை ஏற்பட அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் மீதி கதை.
நடிகர்களின் நடிப்பு:
வழக்கமான காமெடியனாக இல்லாமல் கதையின் நாயகனாக தன் யதார்த்த நடிப்பால் நம்மை கவர்கிறார் யோகி பாபு. காமெடி மட்டும் இல்லாமல் எமோஷனலாகவும் தன்னால் ஈர்க்க முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். சஸ்பென்ஸான எம்.எஸ். பாஸ்கரின் கதாப்பாத்திரமும் கவனம் பெறுகிறது. மேலும் ஷா ரா, சாம்ஸ், மதுமிதா, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த் ஆகியோரின் நடிப்பும் படத்திற்கு பலம்.
இயக்கம் மற்றும் இசை
எப்போதுமே வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் இயக்குனர் சிம்பு தேவன் இப்படத்தில் உயிரை காப்பாற்றிக் கொள்ள நடுக்கடலில் தத்தளிக்கும் 10 பேரின் பயணத்தை சுவாரஸ்யம் கலந்த யதார்த்தத்தோடு படமாக்கியுள்ளார். இப்படத்தில் பேசப்பட்டுள்ள அரசியலும் அதற்கு உறுதுனையாக இருக்கும் கூர்மையான வசனங்களும் கைத்தட்டல்களை பெறுகிறது. இன்றைய காலத்தில் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை அலசியிருக்கும் விதமும் சிறப்பு. மனிதர்களிடையே நோயாய் பரவியுள்ள சாதி, மத ஏற்றத்தாழ்வுகளை பற்றிய வசனங்கள் இன்றைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருப்பது சிறப்பு.
படத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது ஜிப்ரானின் அட்டகாசமான இசை. கதையோடு ஒன்றினைந்து வரும் பாடல்களும் ரசிக்கும் வண்ணம் உள்ளது. குறிப்பாக கர்நாடிக் கானா பாடல் துள்ளல் ரகம்.
படத்தின் ப்ளஸ்
⦿ யோகிபாபுவின் நடிப்பு
⦿ சுவாரசியமான இரண்டாம் பாதி
⦿ அழுத்தமான வசனங்கள்
⦿ அமர்க்களமான ஒளிப்பதிவு
⦿ அட்டகாசமான இசை
படத்தின் மைனஸ்
⦿ சற்று தொய்வான முதல் பாதி
⦿ கதாபாத்திரங்கள் பேசிக்கொன்டே இருப்பது சில இடங்களில் பொறுமையை சோதிக்கிறது
⦿ அழுத்தமில்லாத கதாபாத்திரங்கள்
⦿ ஒட்டாத எமோஷனல் காட்சிகள்
மொத்தத்தில் கண்கவர் கடலின் அழகை ரசித்துகொண்டே பயணிக்கும் வித்தியாசமான பீல் குட் படமாக முடிகிறது இந்த "போட்."
விமர்சனம்: நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.