மக்கள் சேவை என்ற யூடியூப் சேனல் நடத்தி வரும் சித்ரா என்பவர் தன்னை பற்றி ஆதாரம் இன்றி அவதூறு பரப்பினார் என்று அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என யூடியூபர் உதயா சுமதி இன்று ஜனவரி 28 மதுரை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அன்மையில், யூடியூபர் சித்ரா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது பல யூடியூபர்கள் பற்றி பல்வேறு பாலியல் சர்ச்சையான விஷயங்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதில் யூடியூபர் உதயா சுமதி பற்றி பேசி இருந்தார்.
யூடியூபர் சித்ரா செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “பல யூடியூபர்களின் சம்பளத்தை சில யூடியூபர்கள் ஹேக் செய்து தங்களுடைய அக்கவுண்டுக்கு வருவது போல செய்து விடுகிறார்கள். என்னுடைய சம்பளம் யூடியூபர் திவ்யா கள்ளச்சி அக்கவுண்டுக்கு மாறி இருந்தது. அது பற்றி நான் அவரிடம் கேட்டேன். திவ்யா கள்ளச்சி எனக்கு சரியாக பதில் சொல்லவில்லை. அதனால், அவரை சந்தித்து என்னுடைய பணத்தை வாங்குவதற்காக நான் போயிருந்தேன். அங்கு சில குழந்தைகளை திவ்யா கள்ளச்சி அடைத்து வைத்திருந்தார். அந்த குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாவதாக என்னிடம் சொல்லி இருந்தார்கள்.
நான் திவ்யா கள்ளச்சியின் செல்போனில் சில வீடியோக்களையும் ஆடியோக்களையும் பார்த்தேன். அதில் பல யூடியூபர்கள் பணத்திற்காக பாலியல் தொழில் செய்வது தெரிந்தது. அதற்கான ஆதாரத்தை என் கண்ணால் நானே பார்த்தேன். யூடியூபர் உதயா சுமதியின் வீடியோவையும் நான் பார்த்தேன். அவர் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பணம் வாங்குகிறார்” என்றும் சித்ரா பேசியிருந்தார்.
இந்நிலையில், தன்னை பற்றி அவதூறாக பேசிய யூடியூபர் சித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயா சுமதி புகார் அளித்துள்ளார். மேலும், யூடியூபர் சித்ரா தன்னைப் பற்றி கூறிய பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் அளித்து நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் ஊடகங்களின் முன்பு பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
புகார் அளித்தபின், செய்தியாளர்களிடம் பேசிய யூடியூபர் உதயா சுமதி, “என்னுடைய கணவர் யூடியூபர் உதயா பலருக்கும் தெரிந்திருக்கும். அவர் இறந்து 5 வருடம் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு சிங்கிள் பேரண்டாக என்னுடைய மகனை நான் கஷ்டப்பட்டு வளர்த்துக் கொண்டு இருக்கிறேன். சமுதாயத்தில் கணவர் இல்லாமல் குழந்தையை வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுகும் தெரியும். நான் உதயா சுமதி என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறேன். அந்த சேனலில் எந்தவிதமான ஆபாசமான வீடியோக்களும் நான் போட்டது கிடையாது. யாரைப் பற்றியும் நான் தரகுறைவாக பேசியது கிடையாது. ஆனால், யூடியூபர் சித்ரா என்பவர் என்னை பற்றி பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருக்கிறார். நான் பணத்திற்காக போகிறேன் என்று அவர் குற்றச்சாட்டு சொல்லி இருக்கிறார். அது உண்மை என்றால் ஆதாரத்தை என்னிடம் காட்ட சொல்லுங்கள். இதுவரைக்கும் என் மீது ஒரு டாட் விழாமல் தான் நான் வாழ்ந்து இருக்கிறேன். நான் எந்த பெயர் எடுத்து விடக்கூடாது என்று நினைத்திருந்தேனோ அதே பழியை என் மீது அந்த சித்ரா போட்டு இருக்கிறார். அவருக்கும் எனக்கும் எந்த முன் விரோதமும் கிடையாது. நான் அவரை நேரில் பார்த்ததுகூட கிடையாது. அவருடைய வீடியோக்களைப் பார்ப்பதற்கு எனக்கு நேரமும் இல்லை. ஆனால். எதற்காக அவர் என்னை தவறாக பேசினார் என்று எனக்கு தெரியாது. நான் தப்பு செய்தால் அவரிடம் ஆதாரம் இருந்தால் அந்த ஆதாரத்தை காட்ட வேண்டும். இல்லை என்றால் என்னை அசிங்கப்படுத்திய இதே பொதுமக்கள் முன்பு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் காவல்துறையிடம் புகார் கொடுத்து இருக்கிறேன். எனக்கு என்னுடைய மகனை வளர்ப்பதற்கும், குடும்பத்தை கவனிப்பதற்குமே நேரம் சரியாக இருக்கிறது. நான் என்னுடைய வேலையை தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய கணவர் இருந்திருந்தால் இவர் இப்படி பேசியிருக்க முடியாது. என்னுடைய கணவர் இல்லை நான் தனியாக இருக்கிறேன் என்று தான் அந்தப் பெண் என் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். இதற்கு எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என்று யூடியூபர் உதயா சுமதி கூறினார்.