/indian-express-tamil/media/media_files/2025/07/15/ar-rahman-2025-07-15-14-36-24.jpg)
இசை உலகில் 'கடவுள்' எனப் போற்றப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் மீது தனக்குள்ள அளவில்லா அன்பை வெளிப்படுத்தும் விதமாக, பிரபல இசையமைப்பாளர் யோ யோ ஹனி சிங், ஒரே இரவில் மூன்றாவது டாட்டூவை குத்தி தனது அன்பைத் தெரிவித்துள்ளார்.
யோ யோ ஹனி சிங் ஒரு இந்திய ராப்பர், பாடகர், இசை தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவரது உண்மையான பெயர் ஹிர்தேஷ் சிங். இந்திய ஹிப்-ஹாப் மற்றும் ராப் இசையை வெகுஜன மக்களிடையே பிரபலப்படுத்தியதில் இவர் ஒரு முக்கிய பங்கை வகித்துள்ளார்.
இவரது இசைப் பாணி பெரும்பாலும் பாங்கரா, ஹிப்-ஹாப் மற்றும் R&B கலவையாக இருக்கும். பிரவுன் ரங், ஹை ஹீல்ஸ், சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் வரும் லுங்கி டான்ஸ் பாடலை பாடியதுடன், அந்த பாடலுக்கு நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் உடன் நடனமும் ஆடியிருப்பார். லுங்கி டான்ஸ் பாடல் இந்த பாடல் இவரை மிகவும் பிரபலமாக்கியது.
2011-ல் வெளியான இவரது இன்டர்நேஷனல் வில்லேஜர் என்ற பஞ்சாபி ஆல்பம் அவருக்கு பெரும் புகழைத் தேடித்தந்தது. இந்நிலையில் தனது இசையால் உலகம் முழுவதும் பல ரசிகர்களைக் கவர்ந்துள்ள ஹனி சிங், ஏ.ஆர்.ரஹ்னின் தீவிர ரசிகர்களில் ஒருவராவார். ரஹ்மான் மீதுள்ள தனது அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தும் விதமாகவே அவர் ரஹ்மானின் கையெழுத்தைப் பச்சை குத்தியுள்ளார்.
இந்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் "என் அன்பான வாழும் ஜாம்பவான் ரஹ்மான் சார் க்காக ஒரே இரவில் என் மூன்றாவது டாட்டூ!! ஐ லவ் யூ சார் எல்லாவற்றிற்கும் நன்றி, என் இரண்டாவது டாட்டூவை நான் வெளியிட மாட்டேன், ஏனெனில் அது மிகவும் தனிப்பட்டது" என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஹனி சிங் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இசைக் கலைஞர்கள் பலருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனாக திகழும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையின் மீது யோ யோ ஹனி சிங் கொண்டிருக்கும் அன்பும், மரியாதையும் இந்த டாட்டூ மூலம் வெளிப்பட்டுள்ளது. ஹனி சிங் தனது டாட்டூவைப் போடும்போது ஏ.ஆர்.ரஹ்மானின் பிரபலமான "து ஹி ரே" பாடலைப் பாடியது, ரஹ்மானின் இசை அவர் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.
இந்த டாட்டூ, ரஹ்மானுக்கு ஒரு அஞ்சலியாக மட்டுமின்றி, ஹனி சிங் தனது இசைப் பயணத்தில் ரஹ்மானின் தாக்கத்தை ஏற்றுக்கொண்டதற்கான அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இது ரஹ்மானின் இசை உலகளாவிய அளவில் எந்த அளவுக்கு கலைஞர்களை ஈர்க்கிறது என்பதையும், ஒரு கலைஞர் மற்றொரு கலைஞரால் எந்த அளவுக்கு ஈர்க்கப்பட முடியும் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.