/indian-express-tamil/media/media_files/2025/09/14/subramaniyapuram-yuga-2025-09-14-22-40-53.jpg)
உங்க மாணவருக்கு நீங்க பண்ணுங்க, என்னை ஏன் சிக்க வச்சீங்க? சுப்பிரமணியபுரம் பாடல் எழுத கொந்தளித்த யுகபாரதி!
80-களின் காலக்கட்டத்தை அப்படியே நம் கண்முன் நிறுத்தியப் படம் ‘சுப்ரமணியபுரம்’ என்றால் மிகையாகாது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கியிருப்பார் அறிமுக இயக்குநரும், பாலா, அமீரின் சிஷ்யருமான சசிகுமார். மதுரை என்ற ஊரை ரசிகர்கள் தங்களது மனதுடன் கனெக்ட் செய்யும் வகையில், கதாநாயகனுக்கு அழகர் என்று பெயர் வைத்து கதையோடும், தென் மாவட்டங்களின் சொந்த பந்தங்களோடும் நம்மை ஒன்றிணைய வைத்திருப்பார் சசிகுமார்.
எதிரிகளை கூட மன்னித்து விடலாம், நம் கூடவே இருந்து நமக்கு துரோகம் செய்யும் துரோகிகளை விட்டுவிடவே கூடாது என்பது காலம் காலமாக சொல்லப்படும் விஷயம். ஏனெனில் ஒருவரின் நம்பிக்கை துரோகம் கொடுமையான மரண வேதனையை விட அதிகமானது. இதனை மிகவும் தனது உணர்ச்சிகள் மூலம், கிளைமேக்சில் சசிகுமார் தனது உணர்வுகளால் வெளிப்படுத்தியிருப்பார். கஞ்சா கருப்பை பார்த்து காசி! நீயுமாடா? என்று அவர் கேட்பது போன்ற அவரது முகபாவனை நம்மை கலங்க வைக்கும். கிட்டத்தட்ட அவரது உடல் மட்டுமே அங்கே இருக்கும். துரோகத்தால் அவரது உயிர் பிரிந்தது போன்று மிக அழகாக அக்காட்சி காட்டப்பட்டிருக்கும்.
சசிகுமார் இயக்கத்தில் வெளியான கல்ட்கிளாசிக் சுப்பிரமணியபுரம் படமும், அப்படத்தின் 'காதல் சிலுவையில் அறைந்தால்' பாடலும் நமக்கு நினைவிருக்கும். ஆனால், அந்தப் பாடல் எப்படி உருவானது என்பது பற்றி கவிஞர் யுகபாரதி சுவாரஸ்யமான கதையைப் பகிர்ந்துகொண்டார்.
படத்தின்போது ஓர் இரவு, சுப்பிரமணியபுரம் படத்தின் இயக்குநர் சசிகுமார், யுகபாரதியை சென்னை அடையாறில் உள்ள சிறிய ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே, படத்தின் பாடல் குறித்து பேச ஆரம்பித்தார் சசிகுமார். வழக்கமாகப் பாடல் எழுதும்போது விரிவான சூழலைச் சொல்வார்கள். ஆனால், சசிகுமார் சொன்னதோ 3 வார்த்தைகள் மட்டுமே. "காதல்... வலி... ஜெயில்".
இதைக் கேட்டதும் யுகபாரதிக்குத் தலையே சுற்றியது. வெறும் 3 வார்த்தைகளை வைத்து எப்படிப் பாடல் எழுதுவது? இயக்குநர் இன்னும் கொஞ்சம் விவரம் சொல்வார் என்று காத்திருந்திருக்கிறார். ஆனால், சசிகுமார் இதோடு நிறுத்திவிட்டாராம். அங்கே இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் இருந்திருக்கிறார். அங்கிருந்து யுகபாரதி வீட்டுக்குச் சென்ற பிறகுதான் உண்மையான கஷ்டம் ஆரம்பித்தது. அந்த 3 வார்த்தைகளை வைத்து எழுதவே முடியவில்லை. அப்போது அவர் அறையில் இருந்த சுவரில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் படம் இருந்திருக்கிறது. அதைப் பார்த்தபோதுதான், "காதல் சிலுவையில் அறைந்தால்" என்ற அற்புதமான வரி தோன்றியிருக்கிறது. இப்படி, வெறும் 3 வார்த்தைகளில் உருவான பாடல், இன்றுவரை பல ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருக்கிறது. இந்தச் சுவாரஸ்யமான நிகழ்வைத்தான் யுகபாரதி தனது பேச்சில் நகைச்சுவையுடன் விவரித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.