Yogi Babu's Zombie Review: தமிழ் சினிமாவில் ஏற்கனவே ’ஜாம்பி’யை கதைகளமாக வைத்து, ஜெயம் ரவி நடிப்பில், ‘மிருதன்’ வெளியானது. இந்நிலையில் கடந்த வாரம் ‘ஜாம்பி’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. தற்போது யோகி பாபு இல்லாத படம் என்பது அரிதாகிவிட்ட நிலையில், இந்தப் படத்திலும் அவர் தான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் இனைந்து யாஷிகா ஆனந்த், யூ ட்யூப்பின் அன்பு தாசன், கோபி, சுதாகர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இயக்கம் புவன் நுல்லன்.
பொண்டாட்டி கொடுமை, மாமியார் கொடுமை, அப்பா டார்ச்சர் என்ற காரணங்களுக்காக நண்பர்கள் குடிக்க செல்கிறார்கள், அப்போது அங்கு ஒரு சண்டை வருகிறது, அதிலிருந்து எஸ்கேப் ஆகி ஒரு ரெசார்ட் செல்கிறார்கள். அந்த ரெசார்ட்டில், மருத்துவக் கல்லூரி மாணவி யாஷிகா ஆனந்த் தனது தோழிகளுடன் தங்கி இருக்கிறார். தவிர, அங்கு ஜாம்பி தாக்குதலுக்கு சிலர் ஆளாகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிப் பிழைக்க அந்த நண்பர்கள் குழு ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பது தான் மீதிக் கதை.
காமெடிப் படம் என்ற ஒன்றில் காமெடியை கொஞ்சமாவது சேர்த்திருக்கலாம். அந்த ஜாம்பி நம்மையே கடித்திருக்கலாம் என யோசிக்குமளவுக்கு நம் பொறுமையை சோதிக்கிறது இந்த ஜாம்பி. ஒன்லைனை மட்டும் வைத்துக் கொண்டு, சரியான திட்டமிடல் இல்லாமல், இந்தப் படத்தை எடுத்துவிட்டார்களோ என நினைக்கத் தோன்றுகிறது. பெரிய பில்டப்களுடன் உடைக்கப்பட்ட யோகிபாபுவின் கதாபாத்திரமாவது நம்மை காப்பாற்றுமா என்று பார்த்தால், அவரும் தன் பங்குக்கு கடித்து வைக்கிறார். யாஷிகா தன்னால் என்ன முடியுமோ அதனை செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ஜாம்பி படத்துக்கு, நிஜ ஜாம்பியே தேவலம்!
இதற்கிடையே இந்தப் படத்தை தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனின் லீக் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.