Miss Universe 2019: பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஸ்டீவ் ஹார்வி தொகுத்து வழங்கிய மிஸ் யுனிவர்ஸ் 2019, அழகிப் போட்டி அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடந்தது. இதில் மிஸ் தென்னாப்பிரிக்கா அழகி, மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டத்தை தட்டிச் சென்றார்.
சில்வர் மற்றும் நீல நிற கவுன் அணிந்திருந்த சோஸிபினி துன்சிக்கு 26 வயதாகிறது. போட்டியின் புதிய பிரிவான தனது இறுதி உரையில், நிற பேத ஸ்டீரியோடைப்களை உடைத்து, இளம் பெண்களை முன்னேற்றம் அடையச் செய்ய விரும்புவதாகக் கூறினார். ”என்னைப் போன்ற தோலுடன், என்னைப் போன்ற கூந்தலுடன் என்னைப் போல தோற்றமளிக்கும் பெண்கள் சூழ்ந்த உலகில் நான் வளர்ந்தேன். அவர்கள் தாங்கள் அழகாக இருப்பதாக நினைத்துக் கொள்ளவில்லை. இந்த மாதிரியான எண்ணங்கள் நிறுத்தப்படும் நேரம் இது என்று நான் நினைக்கிறேன். குழந்தைகள் என்னையும் என் முகத்தையும் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பின்னர் அவர்களின் முகங்கள் என்னுடைய பிரதிபலிப்பைக் காண வேண்டும்” என்று சோஸிபினி துன்சி மிஸ் யுனிவர்ஸ் பட்டம் அறிவிப்பதற்கு முன்னர் தனது உரையில் கூறினார்.
மேலும் இன்றைய கால கட்டத்தில் இருக்கும் இளம் பெண்கள் தங்களது தலைமைப் பண்பை இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், சமூகத்தில் தங்களுக்கென ஓரிடத்தை உருவாக்கிக் கொண்டு, அதனை மேலும் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சோஸிபினி தெரிவித்தார். அவரது இந்த பதில் சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது.