பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக, திமுக கட்சிகளுக்கு முன்பே தேர்தல் பரப்புரையை தொடங்கினார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன். மேலும், ரஜினிகாந் தொடங்க இருக்கும் கட்சியின் கொள்கைகள் ஒத்துப்போனால் கைகோர்ப்பதில் மகிழ்ச்சியடைவேன் என்றும், ரஜினி கேட்டுக் கொண்டால் முதல்வர் வேட்பாளாராக போட்டியிடுவேன் என்றும் கமல் தெரிவித்தார். ஆனால் ரஜினிகாந்த் ரசிகர்கள், இதை ஆகச்சிறந்த யோசனையாக கருதவில்லை.
கமல்ஹாசன் குறிப்பிட்டது என்ன?
ரஜினியுடனான கூட்டணி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என்னைப் போலவே, ரஜினியும் அரசியல் மாற்றத்திற்கு போராடுகிறார். ஆனால், கட்சியின் அரசியல் சித்தாந்தம் பற்றி இன்னும் விரிவாகப் பேசவில்லை. ரஜினி அதை வெளிப்படுத்தட்டும். ஒன்றாக வேலை செய்வது சாத்தியமானால், எந்தவொரு ஈகோவும் இல்லாமல் நாங்கள் நிச்சயமாக அதைக் கருத்தில் கொள்வோம், ”என்று கமல்ஹாசன் கூறினார்.
கமல்ஹாசனின் கட்சியின் சக்தி, மற்றும் ரஜினிகாந்தின் வாய்ப்புகள்
கமலின் மக்கள் நீதி மய்யம் தற்போது வரை தேர்தலுக்கு கூட்டணி அமைக்கவில்லை. 2019 மக்களவைத் தேர்தலில் அக்கட்சி 3.77 சதவீத வாக்குகளைப் பெற்றது. நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னர், திமுகவுடன் கூட்டணி வைப்பதற்கான கமலின் முயற்சிகள் தோல்வியடைந்தன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூலம் திமுகவுடன் கூட்டணி அமைக்க கமல் தீவிர முயற்சிகள் மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் தனக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை கமலுக்கு கொடுக்க வேண்டும் என்ற திமுகவின் அறிவிப்பால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.
கமல்ஹாசன் பாஜகவின் B டீமாக செயல்பட்டு வருகிறார் என்று வாதமும் அவ்வப்போது கூறப்பட்டு வருகிறது. ஏனெனில், ஆளும் கட்சியான அதிமுக எதிர்ப்பு வாக்குகளை கமல் தீவிரமாக திரட்டி வருகிறார். இது, திமுக வை மேலும் பலவீனப்படுத்தும் முயற்சியாக அமைகிறது.
இதற்கிடையே, ரஜினிகாந்த் தொடங்கவுள்ள அரசியல் கட்சி, தமிழகத்தில் இரண்டு இலக்க ஒட்டு சதவீதத்தை அடைய போராட வேண்டியிருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், கட்சி தொடங்குவதில் ஏற்பட்ட தாமதம் முக்கியமாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் இன்னும் தனது கட்சியின் பெயரையும், சின்னத்தையும் அறிவிக்கவில்லை. மேலும், கட்சித் தலைவர்களும், மாவட்ட செயலாளர்களும் இதுநாள் வரையில் ரசிகர் மன்ற நிர்வாகி என்றளவில் தான் செயல்பட்டு வருகின்றனர்.
எனவே, வரக்கூடிய சட்டமன்றத் தேர்தல் கமல், ரஜினி இருவரும் சேர்ந்து அதிகபட்சமாக 10 முதல்15 சதவீதம் வாக்குகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி-கமல்ஹாசன் கூட்டணியை பாஜக தலைவர்கள் ஏன் ஆதரிக்கின்றனர்?
ரஜினிகாந்த், ஒரு “மாஸ் ஹீரோ”. தமிழகத்தில், தனக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இருந்தாலும், ரஜினி பாஜக ஆதரவான நிலைப்படு கொண்டுள்ளார் என்ற கருத்து நிலவி வருவதால், தேர்தல் களத்தில் வாக்குகளாக மாற்றப்படுமா என்ற கேள்வி கோட்பாடு அளவில் தான் உள்ளது.
மறுபுறம், ஒப்பிட்டளவில் கமலுக்கு ரஜினியை போன்ற ரசிகர் பட்டாளம் இல்லை. ஆனால்,நாத்திகம், இடது சிந்தனை, திராவிட சித்தாந்தங்களை பேசும் பகுத்தறிவாளனாக கமல் தன்னை வெளிபடுத்தி வருகிறார்.
எனவே, இரு நடிகர்களும் கைகோர்த்தால், தமிழகத்தில் ஒரு சக்திவாய்ந்த மூன்றாவது முன்னணியை உருவாக்க முடியும் என்று பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
ஏனெனில், ரஜினிகாந்த் பெறப்போகும் 70 சதவீத வாக்குகள் அதிமுக-பாஜக கட்சி ஓட்டுகளாக இருக்கும். இருந்தாலும், 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழக பாஜகவின் தாக்கங்கள் குறைவுதான். அமித் ஷாவின் சென்னை பயணத்தின் போதும், இந்த நிலைப்பாடு தெளிவாக உணர்த்தப்பட்டது; 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பிரதான போட்டியாக பாஜக விளங்கும்” என்று தெரிவித்தார்.
மறுபுறம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவை மற்றும் சென்னையில் மூன்று தொகுதிகளில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் தலா ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. திராவிட, இடது சிந்தனை பிம்பம் இருந்தபோதிலும், உயர் வகுப்புப் பிரிவு இந்துக்களை உள்ளடக்கியதாக அறியப்பட்ட நகர்ப்பகுதி மக்களிடம் இருந்து கணிசமான வாக்குகளை கமல்ஹாசன் பெற்றார். இந்த கோணத்தில் கமலின் அரசியல் செல்வாக்கை பாஜக மதிப்பிட்டு வருகிறது.
ரசிகர்களின் கருத்து?
கமலின் ரசிகர்கள் இந்த அரசியல் கூட்டணியை ஏற்றுக் கொண்டாலும், சூப்பர் ஸ்டாரை விட கமல் குறைவானவர் என்று கருதும் ரஜினியின் அதிதீவிர ரசிகர்கள் இத்தகைய யோசனையை எதிர்க்கின்றனர்.
ரஜினி ரசிகர் மன்ற அலுவலக பொறுப்பாளர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசுகையில், " கூட்டணி குறித்த யோசனையை முன்வைப்பதன் மூலம், கமல் தனது பலவீனத்தை வெளிபடுத்தியுள்ளார். “எங்களது, தலைவர் அவருடன் ஏன் கைகோர்க்க வேண்டும்? நாங்கள் நாத்திகர், பெரியார் விரும்பி ( கமல்ஹாசன் ) என்ற அடையாளத்தை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை,”என்று அவர் கூறினார்.
ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் எஸ்.சங்கர், கமலின் கூட்டணி முன்மொழிவை கேள்வி எழுப்பினார். “இந்தத் தேர்தலில் ரஜினிகாந்த் என்ற பெரிய அலை இருக்கப் போவது நிச்சயம். கமலுக்கு ஏன் ரஜினி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்படியே, கூட்டணி குறித்து பேச்சு எழுந்தால், ஜி. கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கல் கட்சி (பி.எம்.கே) போன்ற கட்சிகளோடு கூட்டணி அமைக்கலாம்,”என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.