Advertisment

அதிபருக்கு கடிவாளம்... 21-வது அரசியலமைப்பு திருத்தத்தை கையிலெடுக்கும் ரணில்

இந்த திருத்தமானது அதிபரின் அதிகார அளவை குறைக்கக்கூடியது. முப்படைகளின் அதிகாரம் அதிபரிடம் இருந்தாலும், ஆளுமை மற்றும் அமைச்சரவை தொடர்பான அனைத்து விவகாரங்களின் அதிகாரமும் பிரதமருக்கு சென்றடையும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அதிபருக்கு கடிவாளம்... 21-வது அரசியலமைப்பு திருத்தத்தை கையிலெடுக்கும் ரணில்

அதிபரின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் குறித்து அட்டார்னி ஜெனரல் துறையுடன் திங்கட்கிழமை கலந்துரையாடி, அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமர்பிக்கப்படும் என இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 21ஆவது சட்டத்திருத்தம், முந்தைய 20ஆவது திருத்தத்தை ரத்து செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 20ஆவது திருத்தம் என்பது, 19 ஆவது அரசியலமைப்பு சட்டத்திருத்ததை அதிபர் கோட்டாபய ராஜபக்ச நீக்கிய பிறகு, அவருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியது.

Advertisment

21வது திருத்தம் சொல்வது என்ன?

இந்த திருத்தமானது அதிபரின் அதிகாரத்தை குறிப்பிட்ட அளவிற்கு குறைக்கக்கூடியது. அதாவது, முப்படைகளின் அதிகாரம் அதிபரிடம் இருந்தாலும், ஆளுமை மற்றும் மத்திய அமைச்சரவை தொடர்பான அனைத்து விவகாரங்களின் அதிகாரம் பிரதமருக்கு சென்றடையும்.

தனியார் சட்டமூலங்கள் வடிவில் இரண்டு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உள்ளன. ஒன்று சமகி ஜன பலவேகய (SJB), மற்றொன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) எம்.பி.க்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மசோதாக்களும் அதிபரிடமிருந்து முக்கிய நியமனங்களை மேற்கொள்ளும் அதிகாரங்களை அரசியலமைப்புச் சபைக்கு மாற்றுவதை கூறுகின்றன. இந்த மசோதக்கள், அரசியலமைப்புச் சபையில் எம்.பி.க்கள் மற்றும் கட்சியை சாராத குடிமக்கள் இருந்திட வேண்டும் என்கிற கோரிக்கையை ஒப்புக்கொள்கின்றன.

மேலும், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களை நியமிப்பதற்கும் அமைச்சகங்களின் நோக்கம் மற்றும் செயற்பாடுகளை தீர்மானிப்பதற்கும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் அதிபர் செயல்பட வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது.

எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தின் மீது அதிபர் வைத்திருக்கும் அதிகாரத்தில் இரண்டு முன்மொழிவுகளும் வேறுபடுகின்றன. SJB முன்மொழிவில், அதிபர் ஐந்து வருட காலத்திற்கு நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் நீக்கப்படலாம். நாடாளுமன்ற கூட்டத்தொடரை விருப்பப்படி கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு கிடையாது போன்ற கூற்றுகள் இடம்பெற்றுள்ளன.

ஆனால், 2ஆவது முன்மொழிவில், நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நடைபெற்று இரண்டரை ஆண்டுகளுக்கு பிறது, அதனை கலைக்கவோ அல்லது ஒத்திவைக்கவோ அதிபருக்கு முழு அதிகாரம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

எஸ்ஜேபி முன்மொழிவு, தேசிய பாதுகாப்பு தொடர்பான கொள்கையை உருவாக்குவதற்கும், கொள்கையை செயல்படுத்துவதை கண்காணிப்பதற்கும் ஒரு தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த கவுன்சிலுக்கு பிரதமர் தலைமை தாங்குவார்.

மேலும், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே, நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான தீர்மானங்களை பெரும்பான்மை வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்றம் நிறைவேற்றும் வகையில் 70வது சட்டத்தில் திருத்தம் செய்ய மசோதா முன்மொழிகிறது.

21வது திருத்தத்திற்கு முந்திய திருத்தங்கள் என்னென்ன?

19வது திருத்தச் சட்டம் 2015 ஏப்ரலில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அவசரமாக நிறைவேற்றப்பட்டது. அது, பிரதமரை தனது விருப்பப்படி பதவி நீக்கம் செய்யும் அதிபரின் அதிகாரத்தை நீக்கியது.

மரணம், ராஜினாமா அல்லது வேறுவிதமாக பிரதமர் பதவியில் இருந்து விலகினால் அல்லது அரசாங்கக் கொள்கை அறிக்கையை நாடாளுமன்றம் நிராகரித்தால் அல்லது நாளுமன்றம் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நிறைவேற்றினால் மட்டுமே அமைச்சரவை கலைக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கை அரசியலமைப்பின் 46 (2) மற்றும் 48 வது பிரிவுகள் திருத்தப்பட்டன. மேலும், பிரதமரின் ஆலோசனை பேரிலே அதிபர் நடைபெறவேண்டும் என்பதா், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் அதிபரின் அதிகாரமும் நீக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். பிரதமர் இருக்கையில் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ச வந்ததையடுத்து, அனைத்து நிகழ்வுகளும் தலைகீழாக மாறியும். 19 ஆவது சட்டத்திருத்தம் நீக்கப்பட்டது.

2020 பொதுத் தேர்தலில் அமோக வெற்றியைப் பதிவு செய்ததையடுத்து, அதிபரின் அதிகாரத்தை கூட்டும் வகையில் 20வது திருத்தத்தை கொண்டு வந்தனர். இந்த திருத்தம் மூலம் சுயாதீன நிறுவனங்களுக்கு முக்கிய நியமனங்களை வழங்குவதற்கான அதிகாரமும் அதிபருக்கு வழங்கப்படுகிறது. இச்சட்டம் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, ராஜபக்ச சகோதரர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டனர்

புதிய முன்மொழிவு அறிமுகமாகும் நேரம்

1948இல் சுதந்திரம் கிடைத்த பிறகு, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வரும் நிலையில், புதிய முன்மொழிவு அமலுக்கு வரவுள்ளது. எரிபொருள், சிலிண்டர் உட்பட அத்தியாவசிய பொருள்களுக்கு ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக அதிக நேர மின்சார துண்டிப்பையும், பொருள்களின் விலை உயர்வையும் மக்கள் சந்தித்து வருகின்றனர்.

கொழும்பில் உள்ள செயலகத்திற்கு வெளியே குவிந்திருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக வலியுறுத்தி வருகின்றனர். கடந்த வாரம் ஏற்பட்ட வன்முறையில் 9 பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, பிரதமர் பதவியை மகிந்த ராஜினாமா செய்தார்.

மக்களிடையே போராட்டம் தீவிரமடைய, அதிபர் தனது அமைச்சரவையை நீக்கிவிட்டு இளைய அமைச்சரவையை நியமித்தார். 73 வயதான ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இலங்கையின் மோசமான நிலையை சமாளிக்க, தலைவர்கள் தனது கட்சி எல்லையை தாண்டியும் உதவி கோருகின்றனர். கடந்த அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளின் தலைவர்களையும் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாட வருமாறு, விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி (SLPP) விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை வழங்கியுள்ளது. 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் விக்கிரமசிங்க கட்சி உறுப்பினர்கள் குறைவு என்றாலும், இலங்கை நெருக்கடி தடுப்பதற்கான முயற்சிக்கு ஆதரவு அளிப்பதாக அனைத்து உறுப்பினர்களும் கூறியுள்ளனர். நாட்டில் நிலவும் ஆட்சி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment