4 million global Covid-19 deaths : உலகம் முழுவதும் கொரோனா நோய்தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்து புதிய மைல்ஸ்டோனை புதன்கிழமை அன்று எட்டியது. இது ஒரு சாதாரண வருடத்தில் இந்தியாவில் இறக்கும் நபர்களின் எண்ணிக்கையை காட்டிலும் நான்கு மடங்கு அதிகமானது.
ஒரு நாளில் பதிவாகும் கொரோனா மரணங்களும் அதிகரித்து 6000 முதல் 8000 வரையில் பதிவாகி வருகிறது. இந்தியாவில் மட்டும் நாள் ஒன்றுக்கு 800 முதல் 900 நபர்கள் கொரோனாவுக்கு பலியாகின்றனர்.
6 லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. இறப்புகள் அதிகமாக பதிவு செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் பிரேசில் நாடும் (5 லட்சம்), 4 லட்சம் இறப்புகளை பதிவு செய்து இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது. உலகளாவிய இறப்பு எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு இப்போது பல மாதங்களாக சுமார் 10% ஆக உள்ளது.
லத்தீன் அமெரிக்காவில் அதிகரிக்கும் மரணங்கள்
பிரேசில் நாட்டில் அதிக அளவு மரணங்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. மெக்ஸிகோவிலும் இதே நிலைமை நீடிக்கிறது. கடந்த சில மாதங்களாக பெரு, கொலாம்பியா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளிலும் கொரோனா மரணங்கள் அதிக அளவில் பதிவாகி வருகிறது. உண்மையில், பெரு நாட்டில், ஒரு மில்லியன் மக்கள் தொகையில் அதிக உயிரிழப்புகளை பதிவு செய்யும் முதல் நாடாக உள்ளது. உலக சராசரி 51 என்ற எண்ணிக்கையில் இருக்க, இந்நாட்டில் ஒரு மில்லியனுக்கு 6000 நபர்கள் கொரோனாவால் பலியாகின்றனர்.
இந்தியாவில் 10 லட்சத்திற்கு 300 மரணங்கள் என்று பதிவாகிறது. அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 1800 ஆக பதிவாகியுள்ளது. கொலாம்பியா மற்றும் பிரேசில் நாடுகள் 2000க்கும் அதிகமாக மரணங்களை பதிவு செய்து வருகின்றன.
பெரு மற்றும் கொலாம்பியா நாடுகளில் பதிவாகும் மரணங்கள் லாம்ப்டா மாறுபாட்டின் மீது உலகளாவிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. லத்தீன் அமெரிக்காவில் அதிகமான நோய் தொற்றை ஏற்படுத்தும் வைரஸாக இது உள்ளது. பெரு நாட்டில் 80%க்கும் அதிகமானோர் இந்த மாறுபாட்டின் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். அதிகப்படியான மரணங்களுடன் இந்த மாறுபாடு தொடர்பு படுத்தப்படவில்லை. ஆனால் இந்த மாறுபாடு குறித்து அதிக அளவில் ஆராய்ச்சிகள் நடத்தப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தடுப்பூசிகள் மரணங்களை தடுக்கின்றன
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளும் நாடுகளில் இறப்பு விகிதங்கள் குறைவாக பதிவாகின்றன. அமெரிக்கா மற்றும் தடுப்பூசிகளுக்கான அணுகல் அதிகம் உள்ள ஐரோப்பிய நாடுகளில், தொற்று அதிகமாக இருந்தாலும், தொற்றால் ஏற்படும் மரணங்கள் குறைந்து வருகின்றன. இங்கிலாந்தில், மே மாத இறுதியில் இருந்த தொற்று எண்ணிக்கையைக் காட்டிலும் தற்போதைய தொற்று 10 மடங்கு அதிகமாக உள்ளது. இருப்பினும் இறப்பு விகிதங்கள் அன்று இருந்தது போலவே இப்போதும் உள்ளது. அல்லது குறைவாக உள்ளது. 20 முதல் 30 வரை அல்லது அதற்கும் குறைவாகவே பதிவாகிறது. ஃபிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனியில் இறப்பு விகிதங்கள் நிலையாக குறைந்து வருகிறது.
அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக ஏற்படும் தொற்று மற்றும் மரணங்கள் குறைந்துள்ளன. தற்போது 10 முதல் 15 ஆயிரம் வரையில் தொற்று நாள் ஒன்றுக்கு ஏற்படுகிறது. மரணங்கள் 300 முதல் 400 ஆக பதிவு செய்யப்படுகிறது.
மொத்தமாக மரணங்கள் குறைந்து வருகின்றன
இந்தியாவில் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில், இரண்டாம் அலையில் ஏற்பட்ட உச்சத்திற்கு பிறகு கடந்த ஒரு மாதத்தில் மொத்தமாக மரணங்கள் குறைந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் அப்போது 15 ஆயிரம் மரணங்கள் பதிவு செய்யப்பட்டது. இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் மரணங்கள் பதிவானது. ஜூன் மத்திய வாரத்தில் இருந்து, உலக அளவில் கொரொனா தொற்றால் ஏற்படும் மரணங்கள் 10 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது. சில நாட்களில் 5000க்கும் குறைவாக பதிவாகியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, பிரேசிலில் இருந்து அதிகபட்ச இறப்புகள் பதிவாகின்றன, அங்கு ஒவ்வொரு நாளும் 1,500 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகின்றன. இந்தோனேசியா இந்த நாட்களில் இந்தியாவைப் போலவே அதிகமான இறப்புகளைப் பதிவு செய்து வருகிறது. ரஷ்யாவும் அதே வரம்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.