இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), தேசிய பால் பாதுகாப்பு தர ஆய்வு அறிக்கை 2018ஐ வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இது 6,432 பால் மாதிரிகளிலிருந்து தரவுகளை பதிவு செய்தது. 50,000க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களிலிருந்து 40.5% பதப்படுத்தப்பட்ட மாதிரிகள் மற்றும் 59.5% மூல பால் மாதிரிகள் கொண்டு ஆய்வு செய்யப்பட்டன.
ஒட்டுமொத்தமாக, 93% க்கும் மேற்பட்ட மாதிரிகள் (6,432 இல் 5,976) மனித பயன்பாட்டுக்கு பாதுகாப்பானவை. இருப்பினும், சுமார் 41% மாதிரிகள் பாதுகாப்பானவை என்றாலும், ஒரு தர அளவில் அல்லது மற்றொன்றுக்கு குறைவாகவே இருந்தது.
பாதுகாப்பற்றதாகக் கண்டறியப்பட்ட மாதிரிகளில், 12 கலப்படம் செய்யப்பட்டவை (6 ஹைட்ரஜன் பெராக்சைடுடன், 3 டிடர்ஜென்ட்ஸுடன், 2 யூரியாவுடன், 1 நியூட்ராலைசர்களுடன் கண்டறியப்பட்டுள்ளது). ஒன்பது மாதிரிகள் தெலுங்கானாவிலிருந்தும், இரண்டு மத்திய பிரதேசத்திலிருந்தும், ஒன்று கேரளாவிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன.
368 மாதிரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி அஃப்லாடாக்சின் எம் 1 (நோய் மற்றும் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வகை மைக்கோடாக்சின்) ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அஃப்லாடாக்சின் எம் 1 க்கு பாலை பரிசோதனை செய்வது இந்தியாவில் இதுதான் முதன் முறையாகும்.
தமிழகம், டெல்லி, கேரள மாநிலங்களில் பயன்படுத்தப்படும் பாலில்தான் ‘அப்லாடாக்சின்- எம்1’ ரசாயனம் அதிகம் உள்ளது. தமிழகம் (551 மாதிரிகளில் 88), டெல்லி (262 இல் 38) மற்றும் கேரளா (187 இல் 37). பதப்படுத்தப்பட்ட பாலில் பெரும்பாலான இந்த ரசாயனம் காணப்பட்டன.
மொத்த பால் மாதிரிகளில் 1.2 சதவீதம் ஆண்டிபயாடிக் பொருட்களை கொண்டிருந்தன. இதில் மத்தியபிரதேசத்தில் 335 மாதிரிகளை ஆய்வு செய்ததில் 23, மகாராஷ்டிராவில் 678 மாதிரிகளில் 9, உத்தரபிரதேசத்தில் 729 மாதிரிகளில் 8 மாதிரிகள் அதிக அளவு வேதிப்பொருட்களை கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.