இந்திய நேரப்படி தீபாவளி அன்று காலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “மிகப்பெரிய ஒரு விஷயம் நடந்துள்ளது” என்று பீடிகையுடன் ஒரு டுவிட் செய்தார். முன்னதாக சனிக்கிழமை வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் சனிக்கிழமை காலை 9 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு அமெரிக்க அதிபர் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறினார்.
எந்தவொரு விவரங்களும் அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை என்றாலும், பல ஊடக நிறுவனங்கள் அமெரிக்க சிறப்பு அதிரடிப்படை கமாண்டோக்கள் வடமேற்கு சிரியாவில் ஒரு பயங்கரவாத தலைவருக்கு எதிராக வெற்றிகரமான தாக்குதலை நடத்தியதாக செய்தியை வெளியிட்டன.
நியூஸ் வீக், சி.என்.என் செய்தி நிறுவனங்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி குறிவைக்கப்பட்டதாக செய்திகளை வெளியிட்டன. மேலும், தாக்குதலில் தற்கொலை குண்டுகலை வெடிக்கச் செய்ததில் அபுபக்கர் அல் பாக்தாதி பலியானதாக என்.ஒய்.டி செய்தி வெளியிட்டது.
டி.என்.ஏ சோதனை மற்றும் அடையாளம் காணும் பிற முறைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டால், அபுபக்கர் அல்-பாக்தாதியின் கொலை அமெரிக்காவின் உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் மிகப்பெரிய வெற்றியாகும். மே 2, 2011-இல் கடற்படை சீல் கமாண்டோக்கள் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் ஒரு வளாகத்தில் நடத்திய தாக்குதலில் கொன்றனர்.
யார் இந்த அபுபக்கர் அல் பாக்தாதி
இஸ்லாமிய அரசு என்ற ஐ.எஸ். அமைப்பின் தலைவர் உலகில் மிகவும் தேடப்படும் நபராக கூறப்படுகிறார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா இவரை பயங்கரவாதியாக அறிவித்தது. அதுமட்டுமில்லாமல், அவரது தலைக்கு 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.70 கோடிக்கு மேல்) பரிசுத்தொகை அறிவித்தது.
1971 -இல் ஈராக்கில் பிறந்ததாக கூறப்படும் அல் பாக்தாதி, 2013 -இல் தன்னை இஸ்லாமிய அரசின் கலிஃப் என்று அறிவித்தார். அதற்கு அடுத்த ஆண்டில் அவர் தனது தோற்றத்தை பொதுவில் வெளிப்படுத்தினார். பின்னர், வடக்கு ஈராக்கில் மொசூலில் உள்ள அல்-நூரி என்ற பெரிய மசூதியில் ஒரு ரமலான் பிரசங்கத்தை நிகழ்த்தினார். அதில் இஸ்லாமிய அரசு தன்னை ஒரு உலகளாவிய கலிபாவாகவும் அல் பாக்தாதி அதன் தலைவராகவும் அறிவித்தது. ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவரின் பொதுவில் கிடைக்கக்கூடிய சில படங்களில் அல்-நூரி மசூதி பிரசங்க வீடியோவில் இருந்துதான் அறியப்பட்டது.
பாக்தாதி எப்போது, எப்படி உலகின் மிகவும் அச்சுறுத்தும் பயங்கரவாதியானார்?
2014 ஆம் ஆண்டின் முற்பகுதியில், அல்-பாக்தாடியின் போராளிகள் மேற்கு ஈராக்கின் மீது தங்கள் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தனர். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், இஸ்லாமிய அரசு ஈராக் மற்றும் சிரியாவில் பரந்த அளவில் மூர்க்கத்தனமான பயங்கரவாத பிரசாரத்தை நடத்தியது. அது தலை துண்டித்தல் போன்ற பயங்கரமான வீடியோக்களால் உலகை அச்சுறுத்தியது. எல்லா இடங்களிலும் அரசாங்கங்களை நடுங்கச் செய்தது.
2015 ஆம் ஆண்டின் இறுதியில், ஐ.எஸ் 8-12 மில்லியன் மக்கள் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது. அது ஷரியத் சட்டத்தின் மூலம் மன்னிப்பே இல்லாத தண்டனையை விதித்தது. மேலும், அது இந்தியாவில் இருந்து ஒரு சிலர் உட்பட உலகெங்கிலும் உள்ள ஜிஹாதிகளை ஈர்த்தது.
அல் பாக்தாதி தலைமையிலான பயங்கரவாத அமைப்பின் சாம்ராஜ்யம் கிரேட் பிரிட்டனின் அளவு இருந்ததாக அந்த நேரத்தில் மதிப்பிடப்பட்டது. அதனுடைய ஆண்டு பட்ஜெட் ஒரு பில்லியன் டாலர்களுக்கும் மேல் என்றும் 30,000 -க்கும் மேற்பட்ட ஜிஹாதிகள் இராணுவம் கொண்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டது.
ஐ.எஸ்.ஐ.எஸ் சர்வதேச கூட்டணியாக 2016 முதல் பலவீனமடையத் தொடங்கியது. சிரிய குர்திஷ் பெஷ்மேர்கா போராளிகள் உட்பட பிராந்திய நட்பு நாடுகளின் ஆதரவுடன், சிரியா மற்றும் ஈராக்கில் நிலத்தைப் பெற்றது.
ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்-பாக்தாதி என்ற பெயரில் உள்ளூர் குழுக்கள் உலகெங்கிலும் தனிமைப்படுத்தப்பட்டு பயங்கரவாத சம்பவங்களைத் தொடர்ந்தாலும், ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸின் முறையான கட்டமைப்பு நொறுங்கியதால், அதன் ஆயிரக்கணக்கான போராளிகள் அதள பாதாளத்திற்குச் சென்றனர்.
அல் பாக்தாதி கடைசியாக எப்போது காணப்பட்டார்?
இந்த ஆண்டு கோடையின் தொடக்கத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் ஊடகப் பிரிவான அல்-ஃபுர்கான் இணையத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். இது ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் பிற ஜிஹாதி குழுக்களின் ஆன்லைன் செயல்பாட்டைக் கண்காணிக்கும் தள புலனாய்வுக் குழுவின் வார்த்தைகளில் பாக்தாதியை விடீயோவில் நினைவுகூர்ந்தது. ஜூலை 2014 இல் அவரது முதல் வீடியோ தோற்றத்திற்குப் பிறகு பாக்தாதியின் இந்த வீடியோவில் மீண்டும் தோன்றினார்.
வீடியோ வெளியீட்டிற்கு முன்னதாக ஐ.எஸ்.ஐ.எஸ்-இணைக்கப்பட்ட சேனல்கள் உருவாக்கப்பட்டன. இது 2016 லிருந்து அல்-ஃபுர்கான் மீடியா அறக்கட்டளையின் முதல் வீடியோ எதுவானாலும் அதை புரமோட் செய்கிறது.
18 நிமிட வீடியோவில், பாக்தாதி வலதுபுறத்தில் துப்பாக்கியுடன் ஒரு தரையில் சம்மனமிட்டு உட்கார்ந்து மெத்தை மீது சாய்ந்து காணப்பட்டார்.
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கின் மொசூலில் உள்ள அல்-நூரியின் பெரிய மசூதியில் பிரசங்கம் செய்தபோது இருந்ததைவிட சற்று எடை கூடியிருந்தார். அவரது தாடி 2014 வீடியோவில் காணப்பட்டதை விட மிகவும் சாம்பல் நிறமாக மாறி இருந்தது. மேலும், பாதி மருதானி சாயம் பூசப்பட்டிருந்தது.
ஈஸ்டர் பண்டிகையன்று இலங்கையில் நடந்த தாக்குதல்கள் சிரியாவில் அல்-பாகுஸ் பவ்கானியின் தோல்விக்கான பழிவாங்கல் என்று அல்-பாக்தாதி விவரித்தார். இது மார்ச் மாத இறுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸிலிருந்து எடுக்கப்பட்டது.
ஐ.எஸ்.ஐ.எஸ் 2019 ஆம் ஆண்டு வீடியோவை ஏன் வெளியிட்டது?
பல ஊடக அறிக்கைகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள நிபுணர்களின் கூற்றுப்படி, அல்-பாக்தாதிக்கு இராணுவத் தோல்வி இருந்தபோதிலும், ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து இருந்துவருகிறது. அவர் அதன் தலைவராக இருந்தார் என்பதையும், அதன் போராளிகள் காலவரையின்றி தாக்குதல்களை நடத்துவார்கள் என்று எச்சரிப்பதற்கும் தன்னை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தி நியூயார்க் டைம்ஸிற்கான ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸை கவர் செய்யும் ருக்மிணி கலிமாச்சி, பயங்கரவாத அமைப்பைப் பற்றி தகவல்கள்தெரிந்தத பத்திரிகையாளர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்: “பாக்தாதி எப்போதுமே ஒரு தீவிர பாதுகாப்பு நெறிமுறையை பராமரித்து வந்தார். அவர் ஈராக் இஸ்லாமிய அரசின் அமீர் (தலைவர்) ஆனபோது 2010 முதல் அவர் உயிருடன் இருந்ததை இந்த வீடியோ விளக்குகிறது.”
அவர் தம்மைப் பின்பற்றுபவர்களை அணிதிரட்டுவதற்காக தனது தற்போதைய தோற்றத்தைக் காண்பிக்கும் மிகப்பெரிய ஆபத்தை எடுத்துக் கொண்டார். மேலும், அவர் வழிநடத்தும் பயங்கரவாத அமைப்பு ஒரு ஊடுருவல் கட்டத்தில் இருப்பதால் தோற்றத்தை வெளிப்படுத்தி இருக்கலாம் என்று அந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
அந்த தளத்தில் வெளியான வீடியோ மொழிபெயர்ப்பின் படி, பாக்தாதி கூறியது: “இன்று எங்கள் போர் ஒரு வலிமையான போர். நாங்கள் அதை எதிரிக்காக நீட்டிப்போம்; தீர்ப்பு நாள் வரை ஜிஹாத் தொடரும் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.” என்றார்.
அமெரிக்காவால் பாக்தாதி கொலைசெய்யப்படுவதற்கு என்ன அர்த்தம்?
அவர் உண்மையில் இறந்துவிட்டார் என்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும். அதிபர் டிரம்பின் அறிவிப்பு - அது பாக்தாதியை பற்றியதுதானா என்பது ஊகங்களுக்கு முடிவு கட்டும்.
இருப்பினும், அவரது மரணம் குறித்து இதற்கு முன்னர் பலமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூன் 2017 இல், சிரியாவின் ரக்கா அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக ரஷ்யா கூறியது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அல்-பாக்தாதி இறந்துவிட்டதாக "உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை" சிரிய மனித உரிமைகள் ஆய்வகம் தெரிவித்தது.
இருப்பினும், அவர் இறந்தவரோ அல்லது தாக்குதலில் காயமற்றவரோ இல்லை என்பதை 2019 வீடியோ நிரூபித்தது.
கடைசி வீடியோவில் பாக்தாதியின் இருப்பிடம் தெரியவில்லை. அவர் 2018 இல் ஒரு ஆடியோ செய்தியை வெளியிட்டார். ஆனால், அப்போது அதில் அவரது இருப்பிடம் தெளிவாக இல்லை.
பல அமெரிக்க ஏஜென்சிகள் அவரை தேடி வந்தன. சில ஆய்வாளர்கள் அவர் ஈராக்-சிரியா எல்லையில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட பாலைவனத்தில் மறைந்திருப்பதாக நம்பினர். அவர் எந்தவொரு மின்னணு சாதனங்களையும் பயன்படுத்தாமல் அவற்றை தவிர்த்திடுவார். வடமேற்கு சிரியாவில் அமெரிக்க சிறப்புப் படைகள் அவரைக் கண்டுபிடித்ததாக ஞாயிற்றுக்கிழமை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாக்தாதியின் கொலை உறுதிப்படுத்தப்பட்டிருக்குமானால், அது நவீன காலத்தின் மிகப் பெரிய பயங்கரவாதக் கொலையாளிகளில் ஒருவரை நீதியின் முன்பு கொண்டுவந்திருக்கிறது என்பதை குறிக்கும். மேலும், இது சர்வதேச மிகப்பெரிய வெற்றிகரமான வேட்டை ஆகும்.
இருப்பினும், கலிமாச்சி போன்ற வல்லுநர்கள் பலமுறை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளதால், அதை ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸின் முடிவு என்று குறிபிப்பிட வேண்டிய அவசியமில்லை.
கலிமாச்சி பாகுஸில் தனது ரிப்போர்ட்டிங் பணியை முடித்தவுடனேயே தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “…ஐ.எஸ்.ஐ.எஸ் இன்றும் இருக்கிறது. அது 2011 ல் இருந்ததை விட மிகவும் வலுவாக இருக்கிறது. அமெரிக்க துருப்புக்கள் ஈராக்கிலிருந்து வெளியேறியதாகவும் அதனுடைய குழு தோற்கடிக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது. அந்த நேரத்தில், குழுவில் 700 போராளிகள் மட்டுமே இருப்பதாக சிஐஏ மதிப்பிட்டுள்ளது. இப்போது ஜெனரல் ஜோசப் வோட்டலின் கூற்றுப்படி, <மத்திய கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்காவின் உயர்மட்ட ஜெனரல்>, இது பல்லாயிரக்கணக்கான போராளிகளைக் கொண்டுள்ளது. மேலும் ஈராக்கிலும் சிரியாவிலும் ஸ்தூலமான கிளர்ச்சியாக உள்ளது. அது பயங்கரவாத சக்திகளைப் போலவே கொடியதாகவும் அழிவுகரமானதாகவும் உள்ளது” என்று கூறினார்.
ஈராக்கிலும் சிரியாவிலும் ஆயிரக்கணக்கான போராளிகளைத் தவிர, ஐ.எஸ்.ஐ.எஸ் கொரசன் மாகாணத்தையும் பிலிப்பைன்ஸில் ஒரு மாகாணத்தையும் மேற்கு ஆபிரிக்காவில் ஒரு மாகாணத்தையும் கொண்டுள்ளது. மேலும், ஆஃப்கானிஸ்தானில் அது வலுவாக உள்ளதோடு இன்னும் வளர்ந்து வருவதாகவும் வகலிமாச்சி கூறினார்.
“களத்தில் வலுவான குழுக்கள் இருக்கின்றன. அதனால், ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள துணை நிறுவனங்களுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸின் முக்கிய குழுவிற்கும் இடையே இணைப்புகள் உள்ளன என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன.” என்று காலிமாச்சி கூறினார்.
பாக்தாதி மரணமடைந்திருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், அவருடைய பயங்கரவாதம் இன்னும் உயியிருடன் இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.