குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை, பழங்குடியின சமூகத்திற்காக பா.ஜ.க மற்றும் அதன் சித்தாந்தமான ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்தும் ‘வனவாசி’ என்ற சொல்லை, காங்கிரஸால் பயன்படுத்தப்படும் ‘ஆதிவாசி’ என்ற சொல்லுடன் வேறுபடுத்தி கேள்வி எழுப்பினார்.
“பா.ஜ.க.,வினர் உங்களை ஆதிவாசி என்று அழைப்பதில்லை. அவர்கள் உங்களை எப்படி அழைக்கிறார்கள்? வனவாசி. நீங்கள் ஹிந்துஸ்தானின் முதல் உரிமையாளர்கள் என்று அவர்கள் சொல்லவில்லை. நீங்கள் காட்டில் வாழ்கிறீர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள், அதாவது நீங்கள் நகரங்களில் வாழ வேண்டும், உங்கள் குழந்தைகள் பொறியாளர்களாக, மருத்துவர்களாக வேண்டும், விமானத்தில் பறக்க வேண்டும், ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று அவர்கள் விரும்ப மாட்டார்கள்,” என்று பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மஹுவா தொகுதியில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி கூறினார்.
இதையும் படியுங்கள்: மக்கள் தொகையில் சீனாவை முந்தும் இந்தியா; பலன்களும் பாதிப்புகளும்
ஆதிவாசியா அல்லது வனவாசியா?
பழங்குடியினரை விவரிக்க இந்திய அரசியலமைப்பு பட்டியல் பழங்குடியினர் அல்லது “அனுசுசித் ஜன்ஜாதி” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. பல பழங்குடியினர் தங்களை ‘ஆதிவாசி’ என்று குறிப்பிடுகின்றனர், அதாவது ‘முதல் குடிமக்கள்’. இது பொது சொற்பொழிவுகளில், ஆவணங்கள், பாடப் புத்தகங்கள் மற்றும் ஊடகங்களில் பயன்படுத்தப்படுகிறது.
காட்டுவாசிகள் என்று பொருள்படும் ‘வனவாசி’ என்பது சங் பரிவாரால் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும், இந்த சங் பரிவார் அமைப்புகள் பழங்குடியினர் பகுதிகளில் “கிறிஸ்தவ மிஷனரிகளின் பிடியில் இருந்து அவர்களைப் பாதுகாக்க” பரவலாக செயல்படுகிறது. ஓரங்கட்டப்பட்ட பழங்குடி சமூகம் பாரம்பரியமாக பிரதான சாதிக் கட்டமைப்பிற்கு வெளியே ஒரு அலகாகக் கருதப்படுவதால், அவர்களின் தனித்துவமான அடையாளத்தை வெளிப்படுத்த ‘வனவாசி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
பழங்குடி சமூகங்களின் மாறிவரும் கலாச்சாரம் மற்றும் இந்து மதத்திலிருந்து அவர்கள் விலகியிருப்பதால் பீதியடைந்த ராமகாந்த் கேசவ் தேஷ்பாண்டே, இரண்டாவது சர்சங்சாலக் எம்.எஸ் கோல்வால்கருடன் கலந்தாலோசித்து, டிசம்பர் 26, 1952 அன்று சத்தீஸ்கரின் ஜாஷ்பூரில் அகில பாரதிய வனவாசி கல்யாண் ஆசிரமத்தை (ABVKA) நிறுவினார். பழங்குடியினரின் ‘இந்துமயமாக்கலில்’ சங் பரிவார் முதன்மை கவனம் செலுத்தியது, தேசிய ஒருமைப்பாட்டிற்கு இது அவசியம் என்று கூறியது மற்றும் அவர்களின் அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்பட்டாலும், சமூகத்தின் மத்தியில் சங்கத்தின் செயல்பாடுகள் எப்போதும் பா.ஜ.க.,வுக்கு தேர்தல் வெற்றிகளைப் பெற உதவியது.
“நாங்கள் அவர்களை வனவாசிகள் என்று அழைக்கிறோம். நாங்கள் அவர்களை ஆதிவாசிகள் என்று அழைப்பதில்லை, ஏனென்றால் ஆதிவாசி என்றால் அசல் குடிமக்கள் அல்லது பழங்குடியினர், மற்றவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்று அர்த்தம். ஆனால் நாம் அனைவரும் இந்த கண்டத்தின் பூர்வீக குடிமக்கள் என்று சங்கம் நம்புகிறது,” என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராம் மாதவ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
ஆரியர்கள் மத்திய ஆசியாவில் எங்கிருந்தோ இருந்து ஏற்கனவே மக்கள் வாழ்ந்து வந்த இந்திய துணைக்கண்டத்திற்கு குடிபெயர்ந்தனர் என்ற ஆரியப் படையெடுப்பு கோட்பாடு, ஆர்.எஸ்.எஸ்.,ஸால் எப்போதும் நிராகரிக்கப்பட்டது என்று ராம் மாதவ் கூறினார். மேலும், “பழங்குடியினருக்கான அரசியலமைப்புச் சொல்லான அனுசுசித் ஜன்ஜாதி அல்லது பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.
பல ஆண்டுகளாக பழங்குடியினர் மத்தியில் பணியாற்றிய சங் பரிவார் தலைவரும், பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவருமான ஹர்ஷ் சௌகான், வனவாசி என்ற சொல் 1952 இல் நிறுவப்பட்டது என்று விளக்கினார்.
“காடுகளில் வசிப்பவர்கள் பாரம்பரியமாக வனவாசிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். ராமாயணத்தில் கூட, காடுகளில் வாழும் சமூகங்களை அடையாளம் காண இந்தக் குறிப்பு உள்ளது. வனவாசி என்ற பதம் காட்டுவாசிகளைப் பற்றிய சரியான கருத்தை வெளிப்படுத்துகிறது, மேலும் இது பெருமைக்குரிய வார்த்தையாகும், ”என்று ஹர்ஷ் சௌஹான் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
ஆதிவாசிகள் அல்லது பழங்குடியினர் என்ற வார்த்தை அமெரிக்க சூழலுக்கு மிகவும் பொருத்தமானது என்று ஹர்ஷ் சௌகான் கூறினார்.
“ஆதிவாசிகள் என்ற சொல் 1930களில் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டது. ஆதிவாசி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் எந்தத் தீங்கும் இல்லை. ஆனால் இந்தியாவின் சூழலில் அது தவறு. அமெரிக்காவில் பழங்குடியினர் என்ற சொல் பழங்குடியினருக்கு அவர்களின் அடையாளத்தைப் பெற பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் அவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். ஆனால் வனவாசி எளிமையான வார்த்தை அவர்கள் வனவாசிகள் என்பதை உணர்த்துகிறது” என்று ஹர்ஷ் சௌகான் விளக்கினார்.
இந்த வார்த்தை அவர்கள் “காடுகளில் வாழ வேண்டும்” என்பதைக் குறிக்கிறது என்று ராகுல் காந்தி கூறியது பற்றி, “நீங்கள் பாரதவாசி என்று அழைக்கப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் இந்தியாவில் மட்டும் வாழ வேண்டும் என்று அர்த்தம் இல்லை. இது ஒரு அரசியல் கதையாக ராகுல் காந்தி அடியெடுத்து வைக்க முயற்சிக்கிறார்” என்று ஹர்ஷ் சௌகான் கூறினார்.
காடுகளில் வாழும் மக்களை பண்படுத்த முடியாது என்ற கருத்து “மேற்கத்திய எண்ணம்” என்று ஹர்ஷ் சௌகான் கூறினார்.
“காடுகளிலோ அல்லது வனங்களிலோ வாழ்பவர்களுக்கு கலாச்சாரம் இருக்க முடியாது என்பது மேற்கத்திய கதை. இந்தியாவில் அப்படி இருந்ததில்லை. நமது கலாச்சாரம் வனவாசிகளிடமிருந்து உருவானது என்று நாங்கள் நம்புகிறோம். முற்காலத்தில் கிராமங்களில் வசிப்பவர்கள் கிராமவாசிகள் என்றும், நகரங்களில் வசிப்பவர்கள் நகரவாசிகள் என்றும், காடுகளில் இருப்பவர்கள் வனவாசிகள் என்றும் அழைக்கப்பட்டனர்,” என்று ஹர்ஷ் சௌகான் கூறினார்.
வனவாசி கல்யாண் ஆசிரமத்தை சங் பரிவார் அமைத்தது வனவாசிகளின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும், அவர்களை நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கச் செய்யவும், வெறுமனே “மதமாற்ற செயல்முறையை நிறுத்த” அல்ல என்றும் ஹர்ஷ் சௌஹான் வாதிட்டார்.
சர்ச்சை புதியதா?
பழங்குடி சமூகங்கள் காடுகளில் வாழ வேண்டிய அவசியமில்லை என்று பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசியல் நிர்ணய சபை விவாதங்களின் போது, ஹாக்கி வீரர் ஜெய்பால் சிங் முண்டா, “ஆதிபாசி” என்ற வார்த்தையைப் பயன்படுத்த வலியுறுத்தினார், மேலும் ‘பழங்குடியினர்’ என்ற வார்த்தை ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டபோது “பஞ்சாதி” ஆனது ஏன் என்று கேள்வி எழுப்பினார். ஜெய்பால் சிங் முண்டா பின்னர் அரசியல் நிர்ணய சபையில் பழங்குடியின பிரதிநிதியாக ஆனார்.
“பல கமிட்டிகள் செய்த எந்த மொழிபெயர்ப்பிலும் ‘ஆதிபாசி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. இது எப்படி நடந்தது? ஏன் என்று கேட்கிறேன், அது செய்யப்படவில்லை. ‘ஆதிபாசி’ என்ற சொல் ஏன் பயன்படுத்தப்படவில்லை, ‘பஞ்சாதி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது ஏன்? நமது பழங்குடியினரில் பெரும்பாலானோர் காடுகளில் வாழ்வதில்லை. பட்டியல் பழங்குடியினரின் மொழி பெயர்ப்பு ‘ஆதிபாசி’யாக இருக்க வேண்டும் என்று உங்கள் மொழிபெயர்ப்புக் குழுவுக்கு நீங்கள் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆதிபாசி என்ற சொல்லுக்கு அருள் உண்டு. பஞ்ஜாதி என்ற இந்த பழைய தவறான அடைமொழி ஏன் பயன்படுத்தப்படுகிறது என்று எனக்குப் புரியவில்லை, ஏனெனில் சமீப காலம் வரை அது ஒரு நாகரீகமற்ற காட்டுமிராண்டித்தனத்தைக் குறிக்கிறது, ”என்று ஜெய்பால் சிங் முண்டா கூறினார்.
ஆர்.எஸ்.எஸ்.,ஸில் கூட வனவாசி என்ற சொல்லை வழக்கொழிந்ததாகக் கருதும் ஒரு பிரிவினர் இருப்பதாகத் தெரிகிறது.
“உண்மையில், பல ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் வனவாசி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர், எங்கள் ஆசிரமங்கள் இப்போது கல்யாண் ஆசிரமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. முக்கியமாக எங்கள் பணி கடலோர பழங்குடியினரையும் உள்ளடக்கியது. பழங்குடியினர் மத்தியில், சிலர் வனவாசி என்று அழைக்கப்படுவதை விரும்பவில்லை, இந்த வார்த்தை “காட்டுவாசிகள்” போல் தெரிகிறது,” என்று மத்திய இந்தியாவில் பழங்குடியினர் மத்தியில் பணியாற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் கூறினார்.
எவ்வாறாயினும், வனவாசியை மறுபரிசீலனை செய்ய திட்டமிடப்படவில்லை என்று ராம் மாதவ் கூறினார், ஆனால் அரசியலமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள ஜன்ஜாதி என்ற வார்த்தையை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக்கொள்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil