மார்ச் 25 அன்று காபூலில் உள்ள குருத்வாரா ஹர் ராய் சாஹிப்பில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதல் 25 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த, தாக்குதல் சம்பவம் ஒரு நீண்ட நெடிய வரலாற்று பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சீக்கியர்களும், இந்துக்களும் (மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் வாழ்கின்றனர்) உடனடியாக தங்களை இந்தியாவுக்கு அழைத்து செல்லுமாறு அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை வைத்து வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் இந்து/ சீக்கிய சமயங்களின் வரலாற்றை இங்கே பாப்போம்:
இந்து சமயம் எப்போது ஆப்கானிஸ்தானை அடைந்தது?
‘ஆப்கான் இந்துக்கள், சீக்கியர்கள்: ஆயிரம் ஆண்டுகளின் வரலாறு’ எனும் புத்தகத்தை எழுதிய வரலாற்றாசிரியர் இந்தர்ஜீத் சிங் கருத்துப்படி, "ஒரு காலத்தில் காபூல் உட்பட கிழக்கு ஆப்கானிஸ்தானில் இந்து ஆட்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர்" என்று தெரிவித்தார்.
மேலும் , "இஸ்லாம் 7 ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானில் நுழைந்தது. கி.பி 600 முதல் 780 வரை ஜுன்பில் என்ற இந்து சமய வம்சம் ஆப்கானிஸ்தானின் காந்தஹார் முதல் கஸ்னி வரையிலான பகுதிகளை ஆட்சி செய்தது. அதன் பின்னர், இந்து சமய சாகி அரசு ஆட்சி செய்தது. 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்துப் படைகளை தக்கவைத்துக் கொண்ட கசானவித்து வம்சம் ஈரான், ஆப்கானித்தான், நடு ஆசியாவின் திரான்சாக்சியானா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளை ஆண்டனர். 1504 ஆம் ஆண்டில் தான் முகலாய பேரரசர் பாபர் காபூலைக் கைப்பற்றினார் ... காபூல் இந்துஸ்தானின் ஒரு அங்கம் ’என்று பாபர் குறிப்பிட்டார். காபூல் மாகாணம் 1738 வரை இந்துஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றாகவும் இருந்தது.” என்று இந்தர்ஜீத் சிங் தெரிவித்தார்.
சீக்கிய சமயம் ஆப்கானிஸ்தானை எப்போது அடைந்தது?
16 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில், சீக்கிய மதகுரு குருநானக் ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்த போது, சீக்கிய மதத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. குருநானக்கின் ஆரம்பகால ஜனம்சகிஸ் புத்தகத்தில் (வாழ்க்கை நிகழ்வுகள்) பதிவுசெய்யப்பட்ட பயண வரலாற்றின் படி, 1519-21 காலப்பகுதியில், குருநானக் தனது சீடரான பாய் மர்தானாவுடன் இன்றைய காபூல், காந்தஹார், ஜலாலாபாத், சுல்தான்பூர் போன்ற நகரங்களில் பயணம் செய்தனர். இந்த இடங்கள் அனைத்தும் தற்போது குருத்வாராக்களைக் கொண்டுள்ளன. அதன் பிறகு , காபூல் நகரம் பாபரின் ஆட்சியின் கீழ் வந்தது. காபூலில் இருந்த குருநானக்கின் சீடர்கள் இன்றைய பஞ்சாப் பகுதிக்கு வருகை தரத் தொடங்கினர். ஏழாவது சீக்கிய மதக் குருவான ஹர் ராய், சீக்கிய மிஷனரிகளையும் (மத ரீதியிலான செய்லபாடுகளுக்காக) காபூலுக்கு அனுப்புவதில் முக்கிய பங்கு வகித்தார்.
"ஆப்கானிய சமுதாயத்தில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் செழிப்பான வர்த்தகத்தை பல ஆவணங்கள் பதிவு செய்கின்றன, ஆனால் இன்று, அவர்களில் 99 சதவீதம் பேர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்களை தங்களின் பூர்வீக மக்கள் என்பதை ஏற்க ஆப்கானிய சமுதாயம் மறுக்கிறது. அவர்கள், தங்கள் தாய்நாட்டிற்கு செய்த பங்களிப்பு அளப்பரியது . ஆப்கானிஸ்தானில் ஒருவர் இந்து அல்லது சீக்கிய சமய அடையாளத்துடன் வாழ முடியும் என்பது தான் வரலாறு ” என்று சிங் தனது புத்தகத்தில் எழுதினார்.
வெளியேற்றம் எப்போது தொடங்கியது?
இந்தர்ஜீத் சிங் கூற்றுப்படி, 1970களில் ஆப்கானிஸ்தானில் குறைந்தது 3 லட்சம் சீக்கியர்களும், இந்துக்களும் (60:40 விகிதத்தில்) இருந்தனர்.
1988 ஆம் ஆண்டில், பைசாகி பண்டிகையின் முதல் தினத்தின் போது, ஏ.கே .47 உடன் ஜலாலாபாத் குருத்வாராவுக்குள் நுழைந்த ஒருவர் 13 சீக்கியர்களையும் நான்கு ஆப்கானிய வீரர்களையும் சுட்டுக் கொன்றார். 1989 ஆம் ஆண்டில், ஜலாலாபாத்தில் குருத்வாரா குரு தேக் பகதூர் சிங் மற்றும் 17 சீக்கியர்கள் முஜாஹிதீன்களால் கொல்லப்பட்டனர்.
1992 ஆம் ஆண்டில் முஜாஹிதீன் அமைப்புகள் காபூல் நகரை கைப்பற்றியவுடன் வெளியேற்றம் தொடங்கியது. "1979 இல் தொடங்கிய சோவியத் தலையீடு பத்தாண்டு காலம் நீடித்தது. (ஆப்கான் சோவியத் போர் என்பது சோவியத் ஒன்றியத்தின் உதவி பெற்ற ஆப்கானிஸ்தான் இடது சாரி அரசுக்கும், அமெரிக்க உதவி பெற்ற முகாசிதீன் எனப்படும் ஆப்கானிய கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கும் இடையே நடைபெற்ற போர் ஆகும் )
பனிப்போருக்கான போர்க்களமாக ஆப்கானிஸ்தான் மாறியது.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சோவியத் ஆக்கிரமிப்பிற்கு எதிரான மறைமுக போரில் முஜாஹிதீன்களுக்கு ஆயுதங்களை வழங்கத் தொடங்கின.
15 பிப்ரவரி 1989ல், மிக்கைல் கொர்பசோவ் தலைமையிலான சோவியத் ஒன்றிய அரசு தனது படைகளை முழுவதுமாகத் திரும்பப் பெற்றுக்கொண்டதன் மூலம் ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்த போர் முடிவுக்கு வந்தது. 1992 ல் முஜாஹிதீன் கிளர்ச்சி அமைப்புகள் காபூலைக் கைப்பற்றி ஜனாதிபதி நஜிபுல்லாவை பதவி நீக்கம் செய்தனர்… ஏராளமான ஆப்கானிய சீக்கியர்களும் இந்துக்களும் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கினர் ”என்று இந்தர்ஜீத் சிங் எழுதியுள்ளார்.
முஜாஹிதீன் ஆட்சியின் கீழ் நடைபெற்ற கடத்தல் சம்பவம், கொள்ளை, சொத்துக்கள் அபகரிப்பு, மத ரீதியான துன்புறுத்தல் இந்து மற்றும் சீக்கியர்கள் நாட்டை விட்டு வெளியேற தூண்டுதல்களாக அமைந்தது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், எஞ்சியவர்கள் தொடர்ந்து சித்ரவதைகளை எதிர்கொண்டனர்.
எங்கே குடியேறினார்கள்?
"அந்த நாட்களில், ஆப்கானிஸ்தானில் பாஸ்போர்ட் பெறுவது என்பது மிகக் கடினமான ஒன்று. இருப்பினும், அப்போதைய ஆப்கானிய அரசு (முஜாஹிதீன்கள் முழு காபூலையும் கைப்பற்றுவதற்கு சில மாதங்களில்) ஆப் கேங் யாத்திரை பாஸ்போர்ட் (ஆப் என்றால் தண்ணீர், கேங் என்றால் கங்கை நதி) என்ற திட்டத்தின் கீழ் விரைவான பாஸ்போர்ட்களை வழங்கியது. இந்துக்கள், சீக்கியர்களுக்கு விரைவாக விசா வழங்கும் நோக்கில் இந்திய தூதரகம் காபூலின் ஷோர் பஜாரில் உள்ள குருத்வாரா ஹர் ராய் சாஹிப்பில் விசா அலுவலகத்தை அமைத்தது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் 50,000 பேர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்தனர், ”என்று இந்தர்ஜீத் சிங் கூறினார்.
இந்தியாவுக்கு வந்த பிறகு, சீக்கியர்களும், இந்துக்களும் பிற நாடுகளுக்கு பயணப்பட்டனர். இங்கிலாந்து, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அவர்களின் இருத்தல் காணப்படுகிறது. “ஆப்கானிய இந்துக்களில் பெரும்பாலானோர் ஜெர்மனியிலும், சீக்கியர்களில் பெரும்பாலானோர் இங்கிலாந்திலும் குடியேறினர். ஆஸ்திரியா, பெல்ஜியம், ஹாலந்து, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் வசிக்கின்றனர், ”என்று மிஷன் ஆப்கானிஸ்தான் என்ற ஆவணப்படத்தின் இயக்குனர் பிரித்பால் சிங் தெரிவித்தனர்.
தற்போது, இந்தியாவில் எத்தனை ஆப்கானிய சீக்கியர்கள் வசிக்கின்றனர்?
டெல்லியில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானிய இந்து சீக்கிய நலச் சங்கத்தின் தலைவர் கஜீந்தர் சிங் கூறுகையில், “ஏறக்குறைய 18,000 ஆப்கானிய சீக்கியர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர், அவர்களில் 50-60% குடியுரிமை பெற்றவர்கள்.மீதமுள்ளவர்கள் அகதிகளாக அல்லது நீண்டகால விசாவில் இந்தியாவில் தங்கியுள்ளனர் . பெரும்பாலானவர்கள் டெல்லியில் வசிக்கின்றனர்” என்று தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் எத்தனை இந்துக்களும், சீக்கியர்களும் எஞ்சியுள்ளனர்?
700-க்கு மேல் இல்லை. காபூலில் உள்ள குருத்வாரா தஷ்மேஷ் பிடா ஸ்ரீ குரு கோபிந்த் சிங் ஜி சிங் சபா கார்தே பர்வான், நிர்வாக குழு உறுப்பினர் சபோல் சிங் கூறுகையில்,“சுமார் 650 சீக்கியர்களும் (90-100 குடும்பங்கள்), 50 இந்துக்களும் இங்கு எஞ்சியுள்ளனர்… காபூல் குருத்வாரா தாக்குதலுக்குப் பிறகு இங்கு யாரும் வாழ விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.
ஜூலை 1, 2018 அன்று, ஜலாலாபாத்தில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 19 சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி குருத்வாராவில் மூன்று ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடந்த தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 2020 தாக்குதல் ஆப்கானிய சீக்கியர்களுக்கு ஒருமுடிவை ஏற்படுத்தியது. ஏனெனில், குருத்வாராவிற்குள் அவர்கள் கொல்லப்பட்டனர். ”என்று கஜீந்தர் சிங் கூறினார்.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
குடியுரிமை திருத்தச் சட்டம் பயனளிக்குமா?
சுதந்திரத்திற்குப்பின், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்களும், சீக்கியர்களும், இதர சிறுபான்மையினரும் இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்கான நடைமுறைகள் இந்த சட்டத்தில் திருத்தப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் கீழ், மேற்கூறிய மூன்று நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், பார்சிகள், சமணர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லாமல், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்திருந்தால் (2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்குடியேறியவர்கள்) அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க சட்டம் வழிவகை செய்கிறது .
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.