Advertisment

அரசு பணியாளர் நியமன விவகாரம்: என்ன நடக்கிறது உத்தர பிரதேசத்தில்?

உத்தர பிரதேச அரசு பணியாளர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில், ஊழலுக்கு சற்றும் குறைவின்றி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
UP issue

செய்தி - ஷ்யாம்லால் யாதவ்

Advertisment

உத்தர பிரதேச மாநிலத்தில் அரசு பணியாளர் நியமனத்தில் நடந்துள்ள முறைகேடுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அதிர்ச்சியளிக்கக் கூடிய ஊழல் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனை சிபிஐ விசாரிக்க வேண்டுமெனவும் கூறப்படுகிறது.

உத்தர பிரதேசத்தின் சட்டமன்றம் மற்றும் மேலவை நிர்வாக பணிகளை நிரப்ப கடந்த 2020-2021-ல் நடத்தப்பட்ட தேர்வில், ஐந்தில் ஒரு பங்கு அதிகாரிகளின் உறவினர்களால் நிரப்பப்பட்டுள்ளது. குறிப்பாக அதே அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இத்தேர்வுகள் நடந்ததாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுமார் 2.5 லட்சம் பேர் இப்பணிகளுக்காக விண்ணப்பித்திருந்தனர்.

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: After exam for jobs in UP House, a fifth go to VVIP kin: Ex-Speaker staff, kids of Principal Secretaries

 

இதில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில், அப்போதைய உத்தர பிரதேச சபாநாயகரின் பி.ஆர்.ஓ மற்றும் அவரது சகோதரர், அமைச்சரின் மருமகன், சட்டமன்ற செயலகப் பொறுப்பாளரின் மகன், நாடாளுமன்ற விவகாரத் துறை பொறுப்பாளரின் மகன் மற்றும் மகள் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுடன், இரண்டு தனியார் பெருநிறுவன உரிமையாளர்களின் உறவினர்கள் குறைந்தது 5 பேர் நியமிக்கப்பட்டனர்.

இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள், உத்தர பிரதேசத்தை நிர்வகிக்கும் இரண்டு செயலகங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டனர். தேர்வில் தோல்வியடைந்த சுஷில் குமார், அஜய் திரிபாதி மற்றும் அம்ரிஷ் குமார் ஆகிய மூன்று பேர் தாக்கல் மனுக்கள் மீது, கடந்த  செப்டம்பர் 18, 2023 அன்று, சிபிஐ விசாரணைக்கு அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வாறு நடைபெற்ற நியமனம் அதிர்ச்சியளிப்பதாகவும், ஊழல் குற்றச்சாட்டுக்கு குறைந்தது இல்லை எனவும் நீதிமன்றம் கூறியது. சட்டத்திற்கு புறம்பானதாக நியமனம் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதில், சட்ட மேலவையின் மேல்முறையீட்டில், உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது. அடுத்த விசாரணை ஜனவரி 6, 2025 அன்று நடைபெறவுள்ளது.

இந்த நியமனங்கள் குறைந்தபட்சம் 15 மதிப்பாய்வு அதிகாரிகளின் பதவிகளுக்கு தொடர்புடையவை; இதில் ஊதியமாக ரூ. 47,600- ரூ. 1,51,100 மற்றும் ரூ. 44,900-ரூ. 1,42,400 வரை வழங்கப்படுகிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ், இரண்டு செயலகங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 38 அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்டவர்களைக் கண்டறியும் வகையில் ஆராய்ந்து, சம்பந்தப்பட்டவர்களை நேர்காணல் செய்தது.

📌 இதில் நடைபெற்ற நியமனத்திற்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என திக்‌ஷித் தெரிவித்துள்ளார். 2017-2022 வரை சபாநாயகராக இருந்த முன்னாள் பாஜக எம்.எல்.ஏ திக்‌ஷித், அவரது கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட்ட ஆட்சேர்ப்பு குறித்து கேட்டதற்கு, “இது எங்களால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் நடத்தப்பட்டது. ஆனால் எனது பங்களிப்பு குறைவாகவே இருந்தது, இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளது. எனது நெருங்கிய உறவினர்கள் யாரும் எந்தப் பதவியிலும் நியமிக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

📌தனது மகன் மற்றும் மகள் ஆகியோர் தகுதியின் அடிப்படையில் தேர்வானதாக, உத்தர பிரதேச நாடாளுமன்ற விவகார முதன்மை செயலர் ஜெய் பிரகஷ் சிங் தெரிவித்துள்ளார்.

📌 இப்பிரச்சனை தற்போது உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், அது குறித்து கருத்து தெரிவிப்பது சரியானதாக இருக்காது என சட்டமன்ற முதன்மை செயலாளர் பிரதீப் துபே கூறியுள்ளார்.

📌 முன்னாள் அமைச்சர் மகேந்திர சிங்கின் மருமகன் உதவி ஆய்வு அலுவலராக சட்ட மேலவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது குறித்து அவரிடம் கருத்து கேட்க முயன்ற போது, அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால், இதில் அவருக்கு தொடர்பு இல்லையென அவரது உறவினர் கூறியுள்ளார்.

இதேபோல் பலரிடம் கேள்வி எழுப்பிய போது, நியமனத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை எனவும், தேர்ச்சி அடிப்படையில் நியமனம் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அதிர்ச்சியளிக்கும் நியமனங்கள்'

2021 முதல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நியமனம் தொடர்பாக பல மனுக்களுக்கு தாக்கல் செய்யப்பட்டது. செப்டம்பர் 18, 2023 அன்று, இரண்டு மனுக்களைத் தொகுத்து, இந்த விவகாரத்தை பொதுநல வழக்காக மாற்றி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, இரு நீதிபதிகள் கொண்ட அவர்வு உத்தரவிட்டது. இரண்டு தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்களும் மற்றொரு ஆட்சேர்ப்பில் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஒருமுறை சிறையில் அடைக்கப்பட்டனர், மேலும், இந்த விவகாரம் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் ஜாமினில் இருப்பதாக நீதிமன்றப் பதிவுகள் காட்டுகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்றம் கடுமையான கருத்துக்களை "தேர்வு முகமையை வெளியேற்றுவதன் மூலம் விதிகள் ஏன் திருத்தப்பட்டன என்பதைக் கவனிக்க ஆச்சரியமாக இருந்தது... தேர்வுக் குழுவின் விதியை மீறி வெளி நிறுவனத்திற்கான முடிவு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது." எனக் கூறியிருந்தது.

"வெளி நிறுவனங்களை அடையாளம் காண்பதற்கான நடைமுறை சந்தேகத்தை ஏற்படுத்தியது. சில விவரிக்க முடியாத விவரங்களை நாங்கள் கண்டோம். பொதுச் சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதை, எங்கள் உறுதியான பார்வையில் நேர்மையின் அடையாளத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 3, 2023 அன்று, சட்ட மேலவை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. "இந்த நீதிமன்றம் அசல் பதிவுகளை ஆராய்ந்து, ஏற்கனவே முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அதன் முதன்மையான முடிவை பதிவு செய்துள்ளது சட்டத்திற்கு புறம்பாக ஆட்சேர்ப்பு நடந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சிபிஐயின் விசாரணைக்கு அக்டோபர் 13, 2023 உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

முன்னதாக உத்தர பிரதேச கவுன்சில் செயலகத்தில், 99 பதவிகளுக்கான விளம்பரம், 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 17 மற்றும் 27 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டன. முதல்நிலை தேர்வு நவம்பர் 22, 2020 அன்றும், கோரக்பூர் பகுதியில் மறுதேர்வு நவம்பர் 29, 2020 அன்றும் நடத்தப்பட்டது. முதன்மை தேர்வு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள், மார்ச் 11, 2021 அன்று வெளியிடப்பட்டன.

உத்தர பிரதேச சட்டமன்ற செயலகத்திற்கான 87 பதவிகளுக்கு முதல்நிலை தேர்வு ஜனவரி 24, 2021 அன்று நடத்தப்பட்டது,  முதன்மை தேர்வு பிப்ரவரி 27, 2021 அன்றும், தட்டச்சு தேர்வு மார்ச் 14, 2021 அன்றும் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் மார்ச் 26, 2021 அன்று வெளியிடப்பட்டன. 

இத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களின் மொத்த விவரங்கள் கண்டறியப்படவில்லை. சுமார் 2.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கலாம் என அதிகாரிகள் வட்டாரம் கூறுகிறது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான பிராட்காஸ்டிங் இன்ஜினியரிங் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் (BECIL) க்கு சட்டசபை ஆட்சேர்ப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக நீதிமன்ற பதிவுகள் காட்டுகின்றன. 

தேர்வுச் செயல்முறையின் ரகசியத்தன்மையைக் காரணம் காட்டி, செயலகம் நீதிமன்றத்தில் நிறுவனத்தின் பெயரை வெளியிடவில்லை. எனினும், அதன் ஆட்சேர்ப்பை நடத்துவதற்கு ராபவ், கவுன்சிலால் பணிக்கப்பட்டார் என்பதை ஆதாரங்கள் உறுதிப்படுத்தின.

சட்டமன்றச் செயலகத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை மற்றொரு மனுதாரரான விபின் குமார் சிங் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதில் மதிப்பெண்களில் குளறுபடி நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

“முடிவுகள் ஒருபோதும் பொது மக்களுக்கு திறந்த வெளியில் அறிவிக்கப்படவில்லை. முடிவுகளின் தேதியோ அல்லது இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியலோ வெளியிடப்படவில்லை” என விபின் குமார் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்..

"இறுதி முடிவு அதிகாரப்பூர்வ இணையதளமான uplegiassemblyrecruitment.in இல் பதிவேற்றப்பட்டது... உதவி ஆய்வு அலுவலர் பதவிக்கான இறுதிப் பட்டியல் சட்டமன்றச் செயலக அலுவலக அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது" என சட்டசபை செயலகம் நீதிமன்றத்தில் வாதிட்டது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட இணையதளத்தை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பார்த்த போது, அதில் முடிவுகள் காணப்படவில்லை.

 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs Uttar Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment