அக்ஷய் குமாரின் புதிய திரைப்படமான ராம் சேதுவின் டீஸர் செப்டம்பர் 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது. ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கைக்கான பாலம் என்று பலர் நம்பும் இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள மணல் மேடு சங்கிலியைச் சுற்றி மீண்டும் ஒரு சலசலப்பை உருவாக்கியுள்ளது.
ராமர் சேது என்றால் என்ன, அது ஏன் பல சர்ச்சைகள் மற்றும் சட்ட வழக்குகளின் மையமாக உள்ளது, அதன் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் என்ன?
ராமர் சேது
ராமர் சேது பாலம் ஆதாமின் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் வடமேற்கு கடற்கரைக்கு அருகில் உள்ள மன்னார் தீவு இடையே 48 கிமீ நீளமுள்ள சுண்ணாம்புக் கற்களின் சங்கிலிதான் இந்த ராமர் சேது.
இந்து மற்றும் முஸ்லீம் தொன்மங்களில் இந்த அமைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது - இலங்கைக்கு சென்று ராவணனை எதிர்த்துப் போரிட ராமரும் அவருடைய படைகளும் கட்டிய பாலம்தான் ராமர் சேது என்று இந்துக்கள் நம்புகிறார்கள். இஸ்லாமிய தொன்மத்தின்படி, ஆதாம் இலங்கையில் உள்ள ஆதாமின் சிகரத்தை அடைய இந்த பாலத்தைப் பயன்படுத்தினார், அங்கு அவர் 1,000 ஆண்டுகள் தவம் இருந்தார்.
புவியின் டெக்டானிக் தட்டுகளின் இயக்கம் மற்றும் பவளப்பாறைகளில் மணல் சிக்கியதால் உருவான இயற்கை அமைப்புதான் ராமர் சேது என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இருப்பினும், பல ஆண்டுகளாக, இந்த பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது என்று கூறுவதற்கு சான்றுகள் தரப்படுகின்றன. இந்த பாலம் முற்றிலும் இயற்கையானது அல்ல என்று இந்து வலதுசாரி அமைப்புகள் வாதிடுகின்றன. அது உண்மையில் ராமரால் கட்டப்பட்டது என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி முதல் அரசாங்கத்தின் ஆட்சியில் தொடங்கப்பட்ட சேதுசமுத்திரத் திட்டம், வலதுசாரி அமைப்புகள் மற்றும் அப்போதைய எதிர்கட்சியான பா.ஜ.க இந்து உணர்வுகளின் மீதான தாக்குதல் என்று கூறி, சேதுவைச் சுற்றிலும் தூர்வார முன்வந்தபோது, ராமர் சேது விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
ராமர் சேது பற்றிய பல்வேறு ஆய்வுகள் முன்மொழியப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில் அதன் உருவாக்கத்தைக் கண்டறிய நீருக்கடியில் மேற்கொள்ள ஒரு ஆராய்ச்சித் திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.
சேது சமுத்திரத் திட்டம்
சேதுசமுத்திரம் திட்டம் என்பது கப்பல் கால்வாய் திட்டம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே 83 கிமீ நீளம் ஆழமான நீர் வழித்தடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. இது இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளுக்கு இடையிலான பயண நேரத்தை குறைக்கும். ஏனென்றல், கப்பல்கள் வங்காள விரிகுடாவிற்கும் அரபிக்கடலுக்கும் இடையில் பயணிக்க இனி இலங்கையை சுற்றி வர வேண்டியதில்லை. இந்த திட்டம் முதலில் 1860-களில் இருந்தே முன்மொழியப்பட்டது.
தற்போதைய திட்டம் தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல் ஐந்தாண்டு ஆட்சியின் கீழ் தொடங்கியது. வாஜ்பாய் அரசு 2004-இல் ரூ. 3,500 கோடி பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்தது. இருப்பினும், அது 2005 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டதால் சர்ச்சையை அதிகரித்தது.
இந்திய தொல்லியல் துறை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ராமர் சேது இருத்தலை நிராகரித்து. “…வால்மீகி ராமாயணத்தின் உள்ளடக்கங்கள், துளசிதாஸ் எழுதிய ராமசரிதமனஸ் மற்றும் பிற புராண நூல்கள், பண்டைய இந்திய இலக்கியத்தின் முக்கிய அங்கமாக ஒப்புக் கொள்ளப்படுகின்றன. அதில் சித்தரிக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களின் இருப்பையோ அல்லது சம்பம் நடந்த இடங்களையோ மறுக்கமுடியாத வகையில் நிரூபிக்கும் வரலாற்றுப் பதிவு என்று கூற முடியாது.
இந்த பிரமாணப்பத்திரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், அது திரும்பப் பெறப்பட்டது மட்டுமின்றி, இரண்டு இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அப்போதிருந்து, இந்த திட்டம் ஒரு வகுப்புவாத நிறத்தை அடைந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ஆர்கனைசர் 2007-இல் கௌதம் சென் எழுதிய கட்டுரையில், “ராமர் பாலமோ அல்லது வரலாற்றுப் பாலமோ இல்லை என்றலும் ராமர் சேது கால்வாயைத் தோண்டுவது மூர்க்கத்தனமானது. அதன் அடித்தளத்தில் உள்ள கிணறுகளை மறுப்பதன் மூலம் ஒரு முழு நாகரிகத்தையும் அனாதையாக்குவதற்குச் சமம்.” என்று எழுதினார்.
2008ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் வாதிடுகையில், “பாபர் மசூதி இடிப்பு ஆழமான வடுவை ஏற்படுத்தியுள்ளது. காயம் ஆறிவிட்டது. ஆனால், வடு இருக்கிறது. இந்த இயற்கையின் வடு தவிர்க்கப்பட வேண்டும். பல இந்துக்களின் மனதில் மீண்டும் ஒரு காயத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார்.
சூழலியல் வாதங்கள்
சேதுசமுத்திரத் திட்டம் சுற்றுச்சூழல் காரணங்களுக்காகவும் எதிர்க்கப்பட்டது. சிலர் இது கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், கரையோரங்களைத் தோண்டுவது இந்தியாவின் கடற்கரையை சுனாமியால் அதிகம் பாதிக்கக்கூடியதாக மாற்றும் என்றும் கூறுகிறார்கள்.
இந்த திட்டத்தின் தற்போதைய நிலை
சேதுசமுத்திரம் கப்பல் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவதில் ராமர் சேதுவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மார்ச், 2018-இல் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
ராமர் சேதுவை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மற்றொரு மனு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.
நாசா படங்கள் மற்றும் பிற ஆதாரங்கள்
நாசாவால் படம் பிடிக்கப்பட்ட ராமர் சேதுவின் படங்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் இருப்பதை நிரூபிப்பதாக கூறுவதற்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கருத்துடன் தாம் உடன்படவில்லை என்று நாசா பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது.
2002 ஆம் ஆண்டில், நாசா அதிகாரி மார்க் ஹெஸ் கூறியதாவது: “தொலைவட்டப் பாதையில் இருந்து தொலை உணர்திறன் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் அல்லது புகைப்படங்கள் தீவுகளின் தோற்றம் அல்லது அதன் வயது பற்றிய நேரடி தகவலை வழங்க முடியாது. மேலும், மனிதர்கள் தாங்கள் பார்த்த வடிவங்களில் ஏதேனும் ஒன்றை உற்பத்தி செய்வதில் மனிதர்கள் ஈடுபட்டார்களா என்பதை நிச்சயமாக தீர்மானிக்க முடியாது.” என்று கூறினார்.
பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு, 2013-இல், நாசா செய்தித் தொடர்பாளர் மைக்கேல் ப்ராக்கஸ் மீண்டும் தெளிவுபடுத்தினார், “சிலர் தங்களுடைய வாதங்களை முன்வைக்க எங்களுடைய வின்வெளி வீரர்கள் எடுத்த புகைப்படங்களை எடுத்துக்கொள்கிறார்கள். இந்த புகைப்படங்களின் அடிப்படையில் எந்த சூழ்நிலையிலும் எந்த நிலையையும் எடுக்க முடியாது. பால்க் ஜலசந்தியில் உள்ள கடல் படுக்கையின் வயது, அடியில் உள்ள மூலக்கூறு, புவியியல் அமைப்பு அல்லது மானுடவியல் நிலையை விண்வெளி வீரர்களின் புகைப்படங்களால் தீர்மானிக்க முடியாது. எனவே, இந்தக் கருத்துகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.