scorecardresearch

ஜேவரில் அமைய இருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம்; சிறப்பம்சங்கள் என்ன?

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 72 கி.மீ தொலைவிலும், நொய்டாவில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், தாத்ரியில் இருந்து 40 கி.மீ தொலைவிலும் இந்த சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளது.

Amil Bhatnagar

Noida International Airport at Jewar : உ.பி. மாநிலத்தில் உள்ள ஜேவரில் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கான அடிக்கல்லை வியாழக்கிழமை அன்று நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. இது கட்டிமுடிக்கப்பட்டால் இந்தியாவில் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமாக இது இருக்கும்.

திட்டம்

ஜேவரில் அமைய இருக்கும் நொய்டா சர்வதேச விமான நிலையம் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் விரிவாக அமைய உள்ளது. இதனை மேம்படுத்த உள்ள ஜூரிச் சர்வதேச விமான நிலைய ஏ.ஜி., இந்த விமான நிலையத்தைக் கட்ட ரூ. 29,590 கோடி ஆகும் என்று நிர்ணயம் செய்துள்ளது. சுவிஸ் விமான நிலைய நிறுவனம் நவம்பர் 2019 இல் ஏலத்தை வென்றது, அதைத் தொடர்ந்து மாநில அரசாங்கத்துடன் சலுகை ஒப்பந்தம் கையெழுத்தானது.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மேற்கு உ.பி மற்றும் என்சிஆர் பிராந்தியத்தில் வசிப்பவர்களுக்கு இந்த விமான நிலையம் மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார். இந்த விமான நிலையம் சிறிய நகரங்களுக்கு செயல்பாட்டு விமானங்களைக் கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் பணிகளில் ஒரு உந்துதலாகும்.

இந்த விமான நிலையத்தை யார் கட்டுகிறார்?

ஏலத்தில் வெற்றி பெற்ற சூரிச் சர்வதேச விமான நிலைய ஏஜியின் எஸ்பிவியான யமுனா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் பிரைவேட் லிமிடெட் (ஒய்ஐஏபிஎல்) உடன் கடந்த ஆண்டு அக்டோபரில் சலுகை ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜூரிச் விமானநிலையம் ஒரு பயணிக்கு ரூ. 400.97 என்ற ரீதியில் ஏல மதிப்பை அறிவிதத்து. அதனை தொடர்ந்து அதானி குழுமம் ரூ. 360-ஐ அறிவித்து வெற்றி பெற்றது.

கூட்டு முயற்சியான நொய்டா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் ஒரு அரசு நிறுவனமாக இணைக்கப்பட்டது, இதில் உ.பி. அரசாங்கம் 35%, நொய்டா ஆணையம் 35%, கிரேட்டர் நொய்டா தொழில்துறை ஆணையம் 12.5% மற்றும் யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை ஆணையம் 12.5% பங்குகளை வைத்திருக்கிறது.

இந்த விமான நிலையத்தின் அமைவிடம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 72 கி.மீ தொலைவிலும், நொய்டாவில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், தாத்ரியில் இருந்து 40 கி.மீ தொலைவிலும் இந்த சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளது.

தற்போதுள்ள யமுனா விரைவுச் சாலைக்கு (கிரேட்டர் நொய்டா முதல் ஆக்ரா வரை), கிழக்கு புற விரைவுச் சாலைக்கு அருகாமையில் இருப்பதால், விமான நிலையம் பல இணைப்புகளைக் கொண்டிருக்கும். மேலும் இது டெல்லி-மும்பை விரைவுச் சாலையுடன் பல்லப்கர், குர்ஜா-ஜெவர் NH 91, பிரத்யேக சரக்கு போக்குவரத்து ஆகியவற்றில் இணைக்கப்படும். விரைவுச் சாலைக்கு இணையாக 60 மீட்டர் அகல சாலை 100 மீட்டராக விரிவுபடுத்தப்பட உள்ளது.

விமான நிலையம் எவ்வளவு காலமாக பைப்லைனில் உள்ளது?

2001ம் ஆண்டு ராஜ்நாத் சிங் முதல்வராக பதவி வகுத்த காலத்தில் இருந்தே ஜேவரில் விமானநிலையம் கட்ட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. பிறகு 2010ம் ஆண்டு மாயாவதி தாஜ் ஏவியேஷன் ஹப்பை உருவாக்க வேண்டும் என்று முன்மொழிந்தார். ஆனால் அதில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. 2012 மற்றும் 2016க்கு இடைப்பட்ட காலகட்டங்களில் ஜேவர் மற்றும் ஆக்ராவில் விமானநிலையங்கள் கட்ட வேண்டும் என்ற முன்மொழிவை முன்னோக்கி எடுத்துச் சென்றது சமாஜ்வாடி கட்சி. 2017ம் ஆண்டு அரசு ஜேவரில் விமானநிலையம் கட்ட அரசாங்கம் இட அனுமதியை பெற்றது. 2019ம் ஆண்டு தொழில்த்துறை மற்றும் வர்த்தக ரீதியான ஏலம் அறிவிக்கப்பட்டு விமான நிலையத்தை உருவாக்க ஒரு டெவலப்பர் முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆண்டு ஜூலை மாதம், 90 ஆண்டு நில குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் 1,334 ஹெக்டேர் நிலத்தை நொய்டா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட்க்கு (NIAL) வழங்க முதல்வர் அனுமதி அளித்தார்.

தற்போது, விமான நிலையத்தின் மேம்பாட்டுத் திட்டம் பரிசீலனையில் உள்ளது, வரும் வாரங்களில் அதற்கான அனுமதிகள் கிடைக்கும். இரண்டாம் கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் 1,334 ஹெக்டேர் நிலம் ஏழு கிராமங்களில் இருந்து கையகப்படுத்தப்பட்டது. எந்தவித எதிர்ப்பும் இன்றி நிலம் பெறப்பட்டதாக அதிகாரிகள் கூறினாலும் மாற்று ஏற்பாடு போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த விமானநிலையத்தின் மூலம் யார் நன்மை அடைவார்கள்?

ஒரு ஆண்டில் முதற்கட்ட விமான நிலையத்தின் மூலம் 12 மில்லியன் பயணிகள் பயன் அடைவார்கள். முதற்கட்ட விமானநிலையம் கட்டும் பணி நிறைவடைய மூன்று ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு கட்டத்திலும் 70 மில்லியன் பயணிகள் பயணடையும் வகையில் விரிவுபடுத்தப்படும் (பயணிகளின் வளர்ச்சி மற்றும் ட்ராஃபிக்கை பொறுத்து)

நொய்டா, கிரேட்டர் நொய்டாவில் வசிக்கும் மக்களுக்கு எளிமையில் அணுகக் கூடிய விமான நிலையமாகவும், டெல்லி மற்றும் கூர்கானில் வசிக்கும் பயணிகளுக்கு மாற்று விமான நிலையமாகவும் இது இருக்கும். அதே நேரத்தில் ஆலிகர், புலாந்த்ஷார், மீரட், ஆக்ரா போன்ற நகரங்களைச் சேர்ந்த பயணிகளும் இங்கிருந்து பயணிக்க இயலும்.

எதிர்காலத் திட்டம் என்ன?

ஜேவர் விமான நிலையம் அடுத்த 30 ஆண்டுகளில் நான்கு கட்டங்களாக விரிவுபடுத்தப்படும். ஆரம்ப கட்ட கணக்குகளின் படி கட்டம் 1 ஆண்டுக்கு தோராயமாக 12 மில்லியன் பயணிகளின் போக்குவரத்தைக் காணும், இது கட்டம் 4 முடிவில் ஆண்டுக்கு 70 மில்லியன் பயணிகளாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டத்திலிருந்து ஜெவார் விமான நிலையத்தின் செலவு 4,588 கோடியில் இருந்து 29,560 கோடியாக அதிகரித்துள்ளது.

தற்போது, விமான நிலையத்திற்கு செல்லும் வழித்தடங்களில் பிரதான மேற்கு அணுகல், யமுனா எக்ஸ்பிரஸ்வே இன்டர்சேஞ்ச், ஒரு சேவை சாலை மற்றும் வடக்கு சாலை வழியாக இரண்டாம் அணுகல் ஆகியவை அடங்கும். கிழக்குப் பாதை வழியாக அணுகல் மற்றும் வடக்கு சாலை மற்றும் ஜேவர்-குர்ஜா சாலை இடையே ஒரு இணைப்பும் முன்மொழியப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின்படி ரூ. 5,730 கோடி செலவில் முதல் கட்டத் திட்டம், செப்டம்பர் 29, 2024 அன்று நிர்ணயிக்கப்பட்ட தேதியிலிருந்து 1095 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

நிலை ஒன்றில் இரண்டு ஓடுபாதைகள் 1334 ஹெக்டரில் அமைய உள்ளது. இதற்கான ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது. இதனை அடுத்த கட்டத்தில் மூன்றாவது ஓடுபாதை 1,365 ஹெக்டேர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 1,318 ஹெக்டேர் பரப்பளவில் நான்காவது ஓடுபாதையும், இரண்டாவது கட்டத்தில் ஐந்தாவது ஓடுபாதையும் முன்மொழியப்பட்டுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: All you need to know about noida international airport at jewar