Amitabh Sinha, Shubhajit Roy
அமேசான் காட்டுத்தீ விவகாரத்தில், பிரேசில் அரசு எல்லாவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. சில சர்வதேச நாடுகள், இதுகுறித்து விவரம் அறியாது தெரிவிக்கும் கருத்துகளால், இந்த விவகாரத்தில் பிரேசிலுக்கு பின்னடைவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்ட தீவிபத்து, சர்வதேச ஊடகங்களில் சில தினங்களாக தலைப்புச்செய்தியாக இருந்து வருகிறது. இந்த ஆண்டில், மட்டும் அமேசான் காடுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவிபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், வனப்பகுதி அழிப்பே, காட்டுத்தீ விகிதம் அதிகரிப்பிற்கான காரணமாகவும் தெரிவிக்கப்படுகிறது. வனப்பகுதிகளில் அதிகளவிலான மரங்கள் அழிக்கப்படுவதால், கரியமில வாயு ( கார்பன்டை ஆக்சைடு) தொடர்ந்து அதிகரித்து வருவதும், மக்களின் நவநாகரீக வாழ்வுமுறைகளால், கிரீன் ஹவுஸ் வாயுக்களின் சதவீதம் அதிகரித்துள்ளதே, காட்டுத்தீ விகிதம் அதிகரிப்பிற்கான காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர்கள் சுபஜித் ராய் மற்றும் அமிதாப் சின்கா, இந்தியாவுக்கான பிரேசில் தூதர் ஆண்ட்ரே அரான்ஹா கோர்ரியா டு லாகோவிடம் சிறப்புப்பேட்டி கண்டனர்.
அந்த பேட்டியின் முழுவிபரம் இதோ…
காட்டுத்தீ விகிதம் அதிகரித்து வரும் நிகழ்வு உண்மையா?
அமேசான் வனப்பகுதிகளில் காட்டுத்தீ விகிதம் இந்தாண்டில் அதிகரித்துள்ளது உண்மை தான். பிரேசில் அரசு, அதனை முழு ஈடுபாட்டுடன் தடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அமேசான் வனப்பகுதி, பரப்பளவில், இந்தியாவை விட பெரியது. சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல், அதனை எரித்தல் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளை கண்காணித்து தடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அமேசான் விவகாரத்தில், பிரேசில் அரசு, மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக சில நாடுகள் கருத்து தெரிவிப்பது, இந்த பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
அமேசான் வனப்பகுதியில் காட்டுத்தீ என்பது புதிதல்ல என்பது உண்மையா?
அமேசான் வனப்பகுதிகளிலேயே சட்டப்பூர்வ அமேசான் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. 1950ம் ஆண்டு முதலே, இந்த பகுதியில், பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு, பிரேசில் அரசு பல்வேறுவிதமான வரிவிலக்கு நடவடிக்கைகளத மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் அறுவடைக்கு பிறகு கழிவுகளை எரிப்பது போன்ற நடவடிக்கைகள், இங்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்காரணமாகவும், சிலநேரங்களில் காட்டுத்தீ ஏற்பட்டதுண்டு.
காட்டுத்தீ ஏற்பட்ட மற்றொரு முக்கிய காரணி மரங்களை வெட்டுதல். மரங்களை அழித்து வனப்பகுதிகளை சுருக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக பிரேசில் அரசு 2005ம் ஆண்டிலிருந்து போராடி அதில் வெற்றியும் பெற்றுள்ளது. பிரேசில் அதிபர் ஜெய்ர் மெஸிசியாசிஸ் பொல்சோனாராவின் சீரிய முயற்சி மற்றும் நடவடிக்கைகளால், இந்தாண்டில் 80 சதவீத காட்டுத்தீ நடவடிக்கைகள் தடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, சட்டவிரோதமாக மரங்களை எரிக்கும் நடவடிக்கையும் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.
மரங்களை சட்டவிரோதமாக வெட்டி வனப்பகுதிகளை சுருக்கும் நிகழ்வுகளை கண்டறிய புதிய யுக்தி கையாளப்பட்டு, வனப்பகுதிகளை சுருக்கும் நடவடிக்கைகளை போதுமானவரை கட்டுப்படுத்தியுள்ளோம்.
சர்வதேச நாடுகளுக்கு கண்டனம் : அமேசான் காட்டுத்தீ விவகாரத்தில், சில நாடுகள் மற்றும் பெரிய என்ஜிஓ அமைப்புகள், பிரேசிலின் நடவடிக்கைகளில் குற்றம்சாட்டி வருகின்றன. அமேசான் விவகாரத்தில், பிரேசில் அரசு தனக்கென்று பிரத்யேக கொள்கைகளை வகுத்து அதன்படி செயல்பட்டு அதில் வெற்றியும் பெற்று வருகின்றன. இந்நிலையில், எங்களது கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளில் மாற்றம் செய்யவேண்டுமென்று சில நாடுகள் மற்றும் பெரிய என்ஜிஓ அமைப்புகள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் அவைகள் விபரம் புரியாது கருத்து தெரிவித்துவருகின்றன/. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. எங்களது நடவடிக்கைகளில் தலையிடவோ, மாற்றம் செய்ய வற்புறுத்தும் நாடுகள் மற்றும் அமைப்புகளுக்கு பிரேசில் தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
உலகின் நுரையீரலாக விளங்கும் அமேசானை காக்க இந்தியாவின் உதவியை ஏற்பீர்களா?
அமேசான் வனப்பகுதி, உலகின் நுரையீரல் என்பதையே எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில், அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு வாயுவை, அமேசான் வனப்பகுதியில் உள்ள மரங்கள் உறிவதில்லை. அதற்காக, அமேசான் வனப்பகுதி முக்கியமில்லை என்று பொருள் இல்லை. அமேசான் வனப்பகுதியை அழிப்பதன் மூலம், வளிமண்டலத்தில், கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமேசான் வனப்பகுதி, காட்டுத்தீயால் அழிவதன் மூலம், அங்கு வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான தாவரங்கள், விலங்குகள், இன்னும் இனம் கண்டறியப்படாத ஆயிரம் ஆயிரம் உயிர்கள் அழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அமேசான் காட்டுத்தீ விவகாரத்தில் உதவும் பொருட்டு, இந்தியாவும் எங்களை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. தாங்களும் சர்வதேச நாடுகளின் உதவியை தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. இந்தியா போன்ற நாடுகளின் உதவிகள் தங்களுக்கு எதிர்காலத்தில் உதவும் என்று எதிர்பார்ப்பதாக பிரேசில் தூதர் ஆண்ட்ரே அரான்கா கூறினார்.