மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை "அம்பேத்கர் சர்க்யூட்" பயணத்திற்கு சிறப்பு சுற்றுலா ரயிலை அறிவித்தார். இதற்கான பயணத் தேதி, டிக்கெட் விலை, பயணிகளின் எண்ணிக்கை போன்ற வழிமுறைகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன.
அம்பேத்கர் சர்க்யூட்
2016 ஆம் ஆண்டில் அம்பேத்கர் சர்க்யூட் அல்லது பஞ்சதீர்த்தை, அரசாங்கம் முதலில் முன்மொழிந்தது.
பஞ்சதீர்த்தத்தில் அம்பேத்கரின் பிறந்த இடமான மத்தியப் பிரதேச மாநிலம் மோவ்வில் உள்ள ஜென்ம பூமி; இங்கிலாந்தில் படிக்கும் போது லண்டனில் தங்கியிருந்த இடம் சிக்ஷா பூமி; அவர் புத்த மதத்தைத் தழுவிய நாக்பூரில் உள்ள தீக்ஷா பூமி; மஹாபரிநிர்வான் பூமி (டெல்லியில் அவர் மறைந்த இடம்); மற்றும் மும்பையில் அவர் தகனம் செய்யப்பட்ட சைத்ய பூமியும் இதில் சேர்க்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
சிறப்பு ஏசி ரயில் மூலம், இந்த நான்கு இடங்களுக்கு சிறந்த இணைப்பை வழங்குவதன் மூலம், இந்தியாவில் அம்பேத்கரின் அடிச்சுவடுகளைக் கண்டுபிடிக்க அரசாங்கம் முயல்கிறது. தலித் சமூகத்தைத் தாண்டி, பெரும்பாலும் இந்த இடங்களுக்கு, யாத்திரையாக வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே இதன் யோசனை.
2014-15 ஆம் ஆண்டில் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் 15 சுற்றுலா சர்க்யூட்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. ராமாயணம் மற்றும் புத்த சர்க்யூட்கள் தவிர கடலோர, பாலைவன, சுற்றுச்சூழல், பாரம்பரியம், வடகிழக்கு, இமயமலை, சூஃபி, கிருஷ்ணா, கிராமப்புற, பழங்குடியினர் மற்றும் தீர்த்தங்கர் சர்க்யூட்கள் இதில் அடங்கும். ரயில் ஒத்துழைப்பைப் பொறுத்தவரை, ராமாயணம், பௌத்தம் மற்றும் வடகிழக்கு சர்க்யூட்கள், ஏற்கனவே செயலில் உள்ளன, அம்பேத்கர் சர்க்யூட் நான்காவது இடத்தில் இருக்கும்.
மார்ச் 2022 வரை, இந்த 15 சுற்றுகளில் ரூ. 5,445 கோடி மதிப்பீட்டில் 76 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
அரசாங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, சிறப்பு சர்க்யூட்களை உருவாக்குவது, உள்கட்டமைப்பு, சாலை மற்றும் ரயில் இணைப்பு மற்றும் பார்வையாளர் வசதிகள் உட்பட அனைத்து தளங்களின் விரிவான மேம்பாட்டில், சிறப்பாக கவனம் செலுத்த அனுமதிக்கிறது.
இருப்பினும், சுற்றுலாப் பயணிகளின் பார்வையில், ஒரு சர்க்யூட் உடன் தொடர்பான அனைத்து தளங்களையும், அனைவரும் ஒரே நேரத்தில் பார்வையிடுவதில்லை. இந்த பயண முறையை மாற்றவே, மக்கள் ஒரே நேரத்தில், முழு பயணத்தையும் மேற்கொள்ளும் வகையில், ரயில் ஒத்துழைப்புகள் வகுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு சர்க்யூட்டும், ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களை உள்ளடக்கியிருப்பதால், ஒரு சுற்று வட்டாரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்த தரவுகளை அவ்வப்போது பார்க்கிறோம் என்று சுற்றுலா அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் ஒத்துழைப்பு எவ்வாறு செயல்படுகிறது?
இந்த கருப்பொருள் அடிப்படையிலான சுற்றுலாகளை மேம்படுத்துவதற்காக, மத்திய சுற்றுலா அமைச்சகம் ரயில்வே அமைச்சகத்திடம் 3,000 சிறப்பு ரயில் பெட்டிகளை முன்பதிவு செய்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ராமாயண சர்க்யூட்டில் 14 பெட்டிகள் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கான ஏசி சிறப்பு ரயில், ஒரு பேண்ட்ரி கார், ஒரு உணவக கார் மற்றும் ரயில் ஊழியர்களுக்கு ஒரு தனிப் பெட்டி உடன் இந்திய ரயில்வேயால் இயக்கப்பட்டது,
இவை அனைத்தையும் உள்ளடக்கிய சுற்றுப்பயணம் ஒரு நபருக்கு ரூ.62,000 ஆகும். மேலும் 17 நாட்களுக்கு ஏறக்குறைய 500 பேர் இதில் பயணம் செய்தனர். அதற்கு முன், புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய இடங்கள் மற்றும் வடகிழக்கு சர்க்யூட் ஆகியவற்றை உள்ளடக்கிய புத்த சர்க்யூட்டுக்கு, சிறப்பு ரயில்கள் அனுப்பப்பட்டன.
படிப்படியாக, அமைச்சகம் இந்த ரயில்களுக்கான புதிய, தேடப்பட்ட வழித்தடங்களை வகுத்து வருகிறது. அம்பேத்கர் சர்க்யூட் அத்தகைய ஒன்று ஆகும், இது இந்த பயணங்களில் ஒன்றுக்காக அரசாங்கத்தால் பரிசீலிக்கப்பட்டது.
அம்பேத்கரின் பாரம்பரியத்தை கவனித்தல்
கடந்த எட்டு ஆண்டுகளாக, மோடி அரசாங்கம் அம்பேத்கரின் மரபுக்கு உரிமை கோரும் முயற்சியில் பல வழிகளில் அவரைப் போற்றிக் கொண்டாடி வருகிறது.
கடந்த வாரம், பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு, அம்பேத்கரின் பார்வையை மோடியின் கொள்கைகளுடன் ஒப்பிட்டு, அம்பேத்கரும் மோடியும், என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், அம்பேத்கரை முந்தைய அரசுகள் புறக்கணித்து விட்டதாகவும், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க பாஜக ஆதரவு விபி சிங் அரசே முயற்சி எடுத்துக் கொண்டதாகவும் கூறினார்.
சர்க்யூட் அறிவிப்பை தவிர, மோடி அரசாங்கம் பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அம்பேத்கரின் உருவப்படத்தையும் திறந்து வைத்தது. அதே நேரத்தில் தீக்ஷா பூமியை சர்வதேச சுற்றுலா மையமாக மேம்படுத்தும் பணியை செய்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“