ஆகார் படேல் லுக் அவுட் நோட்டீஸ், Amnesty India chief Aakar Patel cbi Look Out Circular | Indian Express Tamil

இந்தியாவை விட்டு ஆகார் படேல் வெளியேறக்கூடாது… ‘லுக் அவுட் நோட்டீஸ்’ யார் ரத்து செய்யலாம்? 

ஆம்னஸ்டி இந்தியா முன்னாள் தலைவர் ஆகார் படேலுக்கு எதிரான சிபிஐயின் லுக் அவுட் நோட்டீஸ் நீதிமன்றத்தில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒருவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க LOC எப்போது வழங்கப்படுகிறது. நீதிமன்றங்கள் அதை எப்போது ரத்து செய்யலாம்?

இந்தியாவை விட்டு ஆகார் படேல் வெளியேறக்கூடாது… ‘லுக் அவுட் நோட்டீஸ்’ யார் ரத்து செய்யலாம்? 

ஆம்னஸ்டி அமைப்பின் முன்னாள் தலைவர் ஆகார் படேலுக்கு வழங்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை திரும்பபெற சிபிஐக்கு உத்தரவிட்ட மாஜிஸ்திரேட் உத்தரவை டெல்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிறுத்தி வைத்தது. மேலும், அவரை நாட்டை விட்டு வெளியேற கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு அமெரிக்கா செல்லும் விமானத்தில் ஏற முயன்ற படேல் பெங்களூருவில் தடுத்து நிறுத்தப்பட்டார். இதையடுத்து, அவர் டெல்லியில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை வியாழக்கிழமை அணுகினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்விவகாரத்தில் சிபிஐ இயக்குநர், படேலிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, வியாக்கிழமை இரவு 2ஆவது முறையாக விமானம் ஏற சென்ற போதும், பெங்களூரில் படேல் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, படேல் வெள்ளிக்கிழமை மாவட்ட நீதிமன்றத்தில் அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதே நேரத்தில் சிபிஐ எல்ஓசியைத் திரும்பப் பெறுமாறு ஏஜென்சிக்கு வழிகாட்டும் நகர நீதிமன்றத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு மேல் முறையீடு செய்தது.

லுக் அவுட் நோட்டீஸ்(LOC) என்றால் என்ன?

ஒரு நபர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க LOC வழங்கப்படுகிறது. இது பல்வேறு ஏஜென்சிகள் மற்றும் அரசாங்க அமைப்புகளால் குடிவரவு பணியகத்திற்கு (BoI) குறிப்பிட்ட நபர் வெளிநாடு செல்வதை தடுத்திட வழங்கப்படுகிறது. BoI அத்தகைய நேட்டீஸ்களின் பதிவேட்டை பராமரிக்கிறது. LOC வழங்கப்பட்ட ஒரு நபர் குடியேற்றத்தை அடைந்தவுடன், LOCயை வழங்கிய நிறுவனத்திற்கு BoI தகவல் தெரிவிக்க வேண்டும். ஏனெனில், BoI க்கு யாரையும் கைது செய்யவோ அல்லது தடுத்து வைக்கவோ அதிகாரம் இல்லை.LOCயை வழங்கிய ஏஜென்சி தான் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தீர்மானிக்கப்படுகிறது. மேலும், LOC ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். அது காலாவதியான பிறகு மீண்டும் வெளியிடப்பட வேண்டும்.

யார் எல்ஓசி வழங்க முடியும்?

உள் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, LOC கள் அதிக எண்ணிக்கையிலான அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படுகின்றன. அதாவது, இந்திய அரசாங்கத்தின் துணைச் செயலர் பதவிக்குக் குறையாத ஒரு அதிகாரி, மாநில அரசின் இணைச் செயலாளர் பதவிக்குக் குறையாத அதிகாரி , மாவட்ட மாஜிஸ்திரேட், காவல் கண்காணிப்பாளர், பல்வேறு சட்ட அமலாக்க மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், இன்டர்போலின் நியமிக்கப்பட்ட அதிகாரி, SFIOஇல் கூடுதல் இயக்குநர் பதவிக்கு குறையாத அதிகாரி, கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தில் கூடுதல் இயக்குநர் பதவிக்குக் குறையாத அதிகாரி, எந்தவொரு பொதுத்துறை வங்கியின் தலைவர் நிர்வாக இயக்குநர் , தலைமை நிர்வாகி பதவிக்குக் குறையாத அதிகாரி, இந்தியாவில் உள்ள ஏதேனும் குற்றவியல் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி LOC வழங்கலாம்.

மாநில காவல் துறையைத் தவிர, சிபிஐ, தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ), அமலாக்க இயக்குநரகம், போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம், வருவாய் புலனாய்வு இயக்குநரகம், மத்திய நேரடி வரிகள் வாரியம், மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம்,புலனாய்வுப் பணியகம், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு ஆகியவற்றால் LOC கள் வழங்கப்படலாம்.

எந்த சூழ்நிலையில் வழங்கப்படும்?

டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, 2010 ஆம் ஆண்டில், உள் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் “IPC (இந்திய தண்டனைச் சட்டம்) அல்லது பிற தண்டனைச் சட்டங்களின் கீழ் அறியக்கூடிய குற்றங்களுக்கு மட்டுமே LOC-ஐ பயன்படுத்த வேண்டும். LOC வழங்கப்பட்டதற்கான காரணங்களையும், சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

IPC அல்லது பிற தண்டனைச் சட்டங்களின் கீழ் அறியக்கூடிய குற்றங்கள் எதுவும் இல்லாத சந்தர்ப்பங்களில், எல்ஓசி வழங்கி ஒருவரை தடுத்து வைக்கவோ / கைது செய்யவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கவோ முடியாது. இதுபோன்ற சமயங்களில், அந்நபரின் பயண விவரங்களை மட்டுமே நிறுவனங்களால் அறிந்துகொள்ள முடியும்.

அமைச்சகத்தின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்து வரும் வழக்கு தொடர்பாக LOC-கள் குறித்த சில வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

அதவாது, அறியக்கூடிய குற்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர் வேண்டுமென்றே கைது செய்யப்படுவதைத் தவிர்க்கவோ அல்லது விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க, வெளிநாடு செல்வதை முயற்சிப்பதை தடுத்திட எல்ஓசி வழங்கிடுவது அவசியம் என கருத்து தெரிவித்தது.

அதேநேரம், 2010 இல் உள் துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் “விதிவிலக்கான சூழ்நிலைகள்” என்ற மற்றொரு வகையைச் சேர்க்கப்பட்டது. பயங்கரவாதிகள், தேச விரோத செயல் போன்ற வழக்குகளுக்கு முழுமையான தகவல் இல்லையென்றாலும், தேசிய நலனுக்காக” LOC வழங்கப்படலாம் என குறிப்பிட்டுள்ளது.

LOC வழங்குவதை எந்தச் சட்டம் கட்டுப்படுத்துகிறது?

குறிப்பிட்ட சட்டம் எதுவும் கிடையாது. 1979, 2000, 2010 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கடிதங்கள் மற்றும் அலுவலக குறிப்பாணைகள் மூலம் உள் துறை அமைச்சகம் நிர்ணயித்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் LOC வழங்கப்படுகிறது. பல நீதிமன்ற வழக்குகளில், LOC நிர்வகிக்கும் சட்டம் இல்லாத காரணத்தால், அதனை வழங்குவதற்கான அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக வாதிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிரீன்பீஸ் பிரச்சாரகர் பிரியா பிள்ளை, 2015 இல் லண்டனுக்கு செல்ல முயன்றபோது, உளவுத் துறை பணியகத்தால் வழங்கப்பட்ட LOC அடிப்படையில், அவர் “தேச விரோதி” என்று வகைப்படுத்தப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டார். மத்தியப் பிரதேசத்தில் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிள்ளை பேசவிருந்தார். பின்னர் இறுதியில் , அவருக்கு வழங்கப்பட்ட LOCஐ டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இச்செயல் “சட்டவிரோதம்” என்றும், வளர்ச்சித் திட்டத்தில் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பது ஒருவரை தேசவிரோதி ஆக்காது என்றும் விளக்கமளித்தது.

LOCக்கான காரணத்தை சம்பந்தப்பட்ட நபர் அறிய உரிமை உள்ளதா?

இது தொடர்பான வழிகாட்டுதல்கள் எந்த அரசு உத்தரவிலும் குறிப்பிடப்படவில்லை. LOC-வழங்குவதற்கான காரணம் BoI க்கு வழங்கப்படவேண்டியட ப்ரோஃபார்மாவில் பதிவு செய்ய வேண்டும் என்றாலும், சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. LOC வழங்குவதை நிர்வகிக்கும் சட்டம் எதுவும் இல்லாததால், இதை வெளிப்படையாக கூறவேண்டிய அவசியமில்லை

இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், பொதுவாக, குற்றம் சாட்டப்பட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் எல்ஓசி வழங்கப்படாது. விசாரணைக்கு ஒத்துழைக்காத நபர், வெளிநாடு செல்வதை தடுத்திடவே எல்ஓசி வழங்கப்படுகிறது. புலனாய்வு ஏஜென்சியைத் தவிர்க்கும் நபர் எல்ஓசி பற்றி அறிந்திருக்கிறாரா இல்லையா என்பது முக்கியமல்ல என தெரிவித்தார்.

LOC என்றால் கைது செய்யப்படலாம் என்று அர்த்தமா?

எல்ஓசியின் நோக்கம் ஒரு நபர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பது மட்டுமே ஆகும். அந்நபரை தடுத்தி நிறுத்தியதும், எல்ஓசி வழங்கிய நிறுவனத்திற்கு BoI தகவல் தெரிவிக்கும். அவர்கள் அந்நபரை கைது செய்யலாம் அல்லது கைது செய்யாமலும் விடலாம்.

உள் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற நிகழ்வின் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதே LOC இன் யோசனையாகும். அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட பிறகு, விசாரணைக்கு வர அறிவுறுத்தப்படலாம். அது கைதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றார்.

படேலுக்கு வெளிநாடு செல்ல சூரத் நீதிமன்றத்தின் அனுமதி இருந்தபோதும் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்?

படேலின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது, சமூக ஊடகப் பதிவு தொடர்பான குற்றத்திற்காக குஜராத் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, படேல் சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, தனது பாஸ்போர்ட்டை விடுவித்து, அமெரிக்கா செல்ல அனுமதியும் பெற்றார். ஆனால், எந்தவொரு குற்றவியல் நீதித்துறையிலும் ஒரு வழக்கின் தீர்ப்பு தானாகவே மற்றொரு வழக்கிற்கு பொருந்தாது.LOc வேறு காரணத்திற்காக, வேறு ஏஜென்சியான சிபிஐயால் பதிவு செய்யப்பட்டது. இதற்கு, டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் தனியாக அனுமதி பெற வேண்டும்.

நீதிமன்றம் எப்போது LOCஐ நிறுத்தி வைக்கலாம்?

பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சி அல்லது அதிகாரியால் LOC வழங்கப்படாவிட்டால் நீதிமன்றம் அதனை ரத்து செய்யலாம். LOC வழங்குவதற்கான காரணங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை என உணர்ந்தால் LOCயை நிறுத்தி வைக்கலாம். குறிப்பிட்ட நபரின் மீது வழக்கு இருந்தாலும், அவர் விசாரணைக்கு முறையாக ஒத்துழைத்து, விமானத்தில் பறப்பதால் பிரச்சினை வராது என உணர்ந்தால் நீதிமன்றம் எல்ஓசியை ரத்து செய்யலாம் என கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Amnesty india chief aakar patel cbi look out circular