Anamalai tiger reserve kozhikamuthi elephants camp trains captive elephants : இங்கு யானைகளை பிடிக்காதவர்கள் என்று யார் தான் இருக்க முடியும். அனைவருக்கும் யானைகள் பிடிக்கும். சிலர் கார்ட்டூனில் பார்த்து ரசிப்பது உண்டு. சிலரோ கோவில் யானைகளை பார்த்து சவாரி செய்ய நினைப்போம். நமக்கும் யானைக்குமான உறவானது அவ்வளவே. ஆனால் யானைகள் காட்டில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்தாலோ, விளை நிலங்களை சேதம் செய்தாலோ நாம் யானைகளை குறை கூறுகின்றோம். யானைகளை காட்டுக்குள் அனுப்பும் திட்டம் சில நேரங்களில் தோல்வியில் முடிந்தால், கும்கிகளாக மாற்ற முடிவு செய்தால், வனத்துறையினரை குறை கூறுகின்றோம். ஆனால் யானைகள் குறித்தோ, வனத்துறையினர் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பது குறித்தோ நாம் ஆராய மறந்துவிடுகின்றோம். யானைகள் ஏன் கும்கிகள் ஆக்கப்படுகிறது? இங்கே தெரிந்து கொள்வோம்.
யானைகள் ஏன் கும்கிகள் ஆக்கப்படுகின்றன?
யானைகளோ இதர விலங்குகளோ அவ்வளவு எளிதாக மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவதில்லை. வருவதையும் விரும்பதில்லை. காடுகளில் போதுமாக உணவு/நீர் கிடைக்காத பட்சத்தில் அவை விளை நிலங்களை நோக்கி வருகிறது. சில நேரங்களில் அந்த யானைக்கு போதிய அளவு தாது உப்புகள் கிடைக்கவில்லை என்றால் கூட்டம் கூட்டமாக அப்பேருயிர்கள் ரேசன் கடைகளை நோக்கி நகர்கின்றது.
யானை வழிப்பாதைகள் எனப்படும் அதன் Corridor -களில் சில கோவில்கள் அல்லது ஆக்கிரமிப்புகள் என்று வந்தால் அதற்கு யானைகள் எப்படி பொறுப்பாக முடியும்? ஒரு யானை தன் வாழ் நாளில் தான் செல்லும்/சென்ற வழித்தடத்தை ஒரு போதும் மறப்பதேயில்லை. அதனால் தான் மீண்டும் அதே வழியில் வருகின்ற போது, ஆக்கிரமிப்புகள் இருந்தால் தங்களின் ஏமாற்ற உணர்வினை வெளிப்படுத்த ஆக்ரோசம் கொள்கிறது.
”இப்படியாக வெளியேறும் யானைகளை ஒரு போதும் வனத்துறையினர் கும்கிகளாக மாற்றிவிடுவது கிடையாது. முடிந்த வரையில் ஊர் மக்கள் பட்டாசுகளை வெடிக்க வைத்து காட்டுக்குள் அனுப்பிவிடுகின்றார்கள். அந்த சத்தத்திற்கு யானைகள் கூட்டமாக உள்ளே சென்றுவிடுகிறது. ஆனால் சில யானைகளின் தொடர் உள்ளூர் வருகைக்கு காரணங்கள் பல்வேறு காரணங்கள் உண்டு. யானைகள் எளிமையாக கிடைக்கும் உணவுகளின் இருப்பிடங்களை அறிந்து கொண்டால் அதே இடத்திற்கு தொடர்ந்து வருகை புரிய துவங்கும். நாம் என்னதான் பட்டாசுகளை கொளுத்திப் போட்டாலும் மீண்டும் அதே இடத்திற்கு வரும்.
யானைகளுக்கு உப்பு மிகவும் பிடித்தமான உணவு. வீடுகளில் வேறு எதையும் தொடாமல் வெறும் உப்பினை மட்டுமே உண்டுவிட்டு செல்லும் வழக்கத்தையும் கொண்டிருக்கிறது. ஆனால் எப்போது மிதிபடுவோம், எப்போது தாக்குதலுக்கு ஆளாவோம் என்று மனிதன் ஒரு பக்கம் அஞ்ச, மின்வேலிகளிலும், தண்டவாளங்களிலும் உயிரிழக்கும் யானைகளை நினைத்து கவலை கொள்ள, இதனால் ஏற்படும் 'அனிமல்-ஹியூமன் கான்ஃபிளிக்ட்’ஐ குறைக்கவே, கட்டுக்குள் அடங்க வைக்க முடியாத நிலை உருவாகும் போது தான் யானைகளை மயக்க மருந்து செலுத்தி முகாம்களுக்கு எடுத்துச் செல்லப்படும் நிலை உருவாகிறது. தன்னுடைய கூட்டத்தை எங்கோ விட்டுவிட்டு 4 x 4 மீட்டர் அளவில் இருக்கும் கராலில் அடைத்து வைக்கப்பட்டு அங்கே யானைகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது என்று கூறிகிறார் வனத்துறை அதிகாரி கீர்த்தி குமார்.
மேலும் படிக்க : முகாம்களில் இருக்கும் யானைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்ன தெரியுமா?
மலசர் இன மக்களும் யானைகளும்
ஆனைமலைத் தொடர்களில் வசித்து வரும் மலசர் பழங்குடியினர் இங்கு யானைகளுக்கு பயிற்சி அளிக்கின்றார்கள். பொதுவாக தமிழகத்தில் இருக்கும் கோவில் யானைகளின் பாகன்களாக இவ்வின மக்களே இருக்கின்றனர். இவர்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான பந்தம் என்பது ஆதி தொட்டே இருக்கிறது என்று தான் கூற வேண்டும். ஆனமலையின் கோழிகமுதி பகுதியில் அமைந்திருக்கும் மலசர் இன மக்கள் குடியிருப்பை ஒட்டி தான் முகாம்களுக்கு எடுத்து செல்லப்படும் யானைகள் வளர்க்கப்படுகிறது. இதே பகுதியில் வாழும் புலையர் இன மக்களும் யானை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடக வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தவும் இம்மக்கள், ஆனமலை வனச்சரகத்தில் இருந்து அனுப்பப்படுகின்றனர்.
யானைகள் கும்கிகளாக மாற்றப்படும் போது துன்புறுத்தப்படுகிறதா என்று கேள்வி எழுப்பிய போது, ”யானைகளுக்கும் எங்களுக்குமான உறவு நூறாண்டு கால உறவுங்க. நம்ம குழந்தைங்க, சொன்ன பேச்சு கேக்கலைன்னா நாம அடிக்கிறது இல்லையா. அது மாதிரி தான் லேசா குச்சிய வச்சு மெரட்டுவோம். மத்தபடி துன்புறுத்துறது எல்லாம் கெடையாது. கண்ண மூடிட்டு கண்டபடி அடிக்க நாங்க ஒன்னும் மனசாட்சி இல்லாத அரக்கங்க கெடையாதுங்க” என்கிறார் மலசர் இன தலைவர் காளியப்பன்.
யானைகளுக்கு எப்படி பயிற்சிகள் வழங்கப்படுகிறது?
”எங்க பொறப்பும் வாழ்க்கையும் இந்த மண்ணையும் மலை மாதிரி இருக்குற இந்த யானைகளையும் நம்பி தான். ஒவ்வொரு யானையும் பொறக்கும் போதோ, இல்லன்னா இங்க கூட்டிட்டு வரும் போதும் அந்த யானைக்கு ஒரு பாகன நாங்க நெயமிச்சுருவோம். அவனோட ஆயுசுக்கும் அவன் சொத்து அந்த யானை தான். 10 வயசு வர வரைக்கும் அந்த யானைக்கு வெறும் பாகனே போதும். ஆனால் 10 வயசுக்கு மேல ஆச்சுதுனா அந்த யானை பாகனுக்கு தொணையா ஒரு கவாடிய சேத்துப்போம். யானைய மேச்சலுக்கு விடுறது, குளிக்க வைக்கிறது, பயிற்சி தர்றது எல்லாமே பாகன் தான். யானைக்கு சாப்பாடு செய்றது, கால்வாரி மருந்து செய்றதுன்னு எல்லாத்தையும் கவாடி பாத்துக்குவாரு. எங்கிட்ட வந்த யானைக்கு நான் கல்பனான்னு பேரு வச்சேன். கல்பனா சாவ்லா இருந்தாங்கள்ள, அவங்க ஞாபகமா என்று தன்னுடைய கையில் இருக்கும் பச்சையை காட்டுகிறார்” கல்பனா யானையின் பாகன் பழனிசாமி.
”கராலுக்குள்ள போற யானைகிட்ட நாங்க எங்களோட பாஷைய பேசுவோம். திருப்பி திருப்பி சொல்லி அதை நாங்க பழக்கப்படுத்துவோம். ஒவ்வொரு வார்த்தைக்கும் என்ன வேலை செய்யனும்னு சொல்லிக் கொடுப்போம். கேரளாகாரங்க மாதிரி அங்குசமெல்லாம் கெடையாது. சோலைல போய் பறிச்சுட்டு வர்ற 'கருந்தொரை’ குச்சி தான் நாங்க யானையை மேய்க்கிறதுக்கு வச்சுகிறது. ப்ளாஸ்டிக் மாதிரி வளையும். அவ்ளோ 'திக்கான’ தோல் வச்சுருக்க யானைக்கு இந்த குச்சில அடிச்சா ஒரைக்குமோ ஒரைக்காதோ. ஆனா நாங்க ஒரு போதும் யானைய துன்பமாவும் நெனச்சதில்லை. துன்பமும் கொடுத்ததில்லை” என்று தொடர்ந்தார் பழனி. யானைகளுக்கு கும்கி பயிற்சிகள் டாப்சிலிப்பில் இருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் வரகளியாற்றில் வழங்கப்படுகிறது.
கும்கி யானைகளின் பணி என்ன?
கும்கி யானைகள், காடுகளில் இருந்து வெளியேறும் யானைகளை கட்டுக்குள் கொண்டு வந்து, மீண்டும் காட்டுக்குள் அனுப்ப பெரும் உதவியாக இருக்கிறது. என்ன தான் மனிதர்களால் பழக்கப்படுத்தினாலும், தன் இனம் என வரும் போது சில நிமிடங்களில் நிலைமை தலைகீழாகவும் மாறலாம். காட்டு யானையிடம், கும்கி வழியாக பிரச்சனையை உணர்த்துவதற்கு பாகன் கும்கியின் கழுத்தில் இருந்தே ஆக வேண்டும். காட்டு யானையை உள்ளே அனுப்புவது மட்டுமின்றி இது போன்ற சூழலில், பாகனையும், கவாடியையும், வனத்துறையினரையும் காக்கும் பொறுப்பும் கும்கிகளிடமே உள்ளது. காட்டுக்குள் இறந்து கிடக்கும் காட்டு யானைகளுக்கு சிதை மூட்டவும் கும்கிகள் பயன்படுகிறது. கும்கிகள் மூலமாக இறந்த யானைகளை தூக்கி சிதையில் வைத்து மூட்டுவோம் என்றார் பழனி.
கோழி கமுதியில் இருக்கும் யானைகள் சுற்றுலாத்துறையிலும் ஈடுபடுத்தப்படுகிறது. சின்னத்தம்பி, அரிசிராஜா எனப்படும் முத்து, சேலத்தில் பாகனை கொன்ற கோவில் யானை ஆண்டாள் என மூன்று யானைகள் இப்போது கூடுதலாக இந்த யானைகள் முகாம்களில் இணைக்கப்படுள்ளது. மொத்தம் இருக்கும் 29 யானைகளில் ஏற்கனவே நன்றாக பழக்கப்படுத்தப்பட்ட யானைகளை “யானை சவாரிக்கு” பயன்படுத்துகின்றனர் வனத்துறையினர். காலையிலும் மாலையிலும் இந்த யானைகளுக்கு உணவு வழங்குவதை பார்வையிடுவதற்காகவே சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவது உண்டு.
யானைகளுக்கு வழங்கப்படும் உணவுகள்
யானைகளுக்கு இங்கு காலையிலும் மாலையிலும் உணவுகள் வழங்கப்படுகிறது. இந்த உணவு தயாரிக்கும் பணியினை கவாடிகள் மேற்கொள்ள, மேற்பார்வை பணியினை காளியப்பன் பார்க்கின்றார். நாள் ஒன்றுக்கு 50 முதல் 70 கிலோ உணவுகள் யானைகளுக்கு வழங்கப்படுகிறது. யானைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் அனைத்தும் இயற்கை உணவுகள் தான். யானைகளுக்கு எப்போதாவது முடியாமல் போகும் பட்சத்தில் தான் மருந்துகள் வழங்கப்படுகிறது. கொள்ளு, அரிசி சாதம், ராகி களியுடன், உப்பு, வெல்லம், விசேச தினங்களில் கரும்பு மற்றும் வாழைப்பழங்களும் உணவாக தரப்படுகிறது. உணவு தயாரிக்கும் பணியினை வார சுழற்சியில் மூன்று-மூன்று நபர்கள் பார்ப்பதுண்டு. இம்மக்களில் பெரும்பாலானோர் வனத்துறையில் ஏதேனும் ஒரு பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்கின்றனர்.
மேலும் படிக்க : எங்க தான் கிடைக்கும் இந்த இளநீர் சர்பத்? கோவை மக்களை தேட வைக்கும் சூப்பர் கடை!
பின் குறிப்பு : கராலில் வைக்கப்படும் யானைக்கு நிற்க மட்டுமே இடம் அளிக்கப்படும். ஒவ்வொரு பயிற்சியும் முடிவுறும் பின்னரே, அந்த பேரினம் காலை அசைக்கவோ, நடப்பதற்கான இடமோ வழங்கப்படும். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, மூன்று முதல் 6 மாத காலங்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும். சொல்வதை கேட்டால் தான் சுதந்திரம் எனப்படும் "Conditional learning" முறைப்படி அளிக்கப்படும் இந்த பயிற்சினால் யானைகள் கொஞ்சம் கொஞ்சமாக காட்டு விலங்குகளுக்கான தன்மை மழுங்கடிக்கப்படுகிறது. இந்த பயிற்சிகள் தான் கொஞ்சம் கொடூரமாக இருக்கிறது என்று வன விலங்கு ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.