Rahul V Pisharody
Andhra Pradesh Disha bill 2019 : ஆந்திர மாநிலம் தற்போது அறிமுகம் செய்திருக்கும் திஷா சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை. ஆந்திர சட்டமன்றம் வெள்ளிக்கிழமை (13/12/2019) அன்று ஆந்திர பிரதேசம் திஷா மசோதா 2019-ஐ நிறைவேற்றியது. இந்த சட்டம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களை 21 நாட்களில் தூக்கிலிட வழி வகுக்கிறது.
ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..
ஏற்கனவே இது போன்ற வழக்குகளில் 4 மாத விசாரணை என்பது தற்போது குறைக்கப்பட்டு, தகுந்த ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் 21 நாட்களில் விசாரணை முடிக்கப்பட்டு தூக்கு தண்டனை வழங்குவதை உறுதி செய்கிறது. மேலும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுகிறது. மேலும் புதிதாக இந்திய பீனல்கோட் 354 F, 354 G தண்டனைகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக டிஜிட்டல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது, முதன்முறை என்றால் 2 ஆண்டுகள் தண்டனையும், தொடர்ந்து இது போன்ற தவறுகளை செய்யும் போது 4 ஆண்டுகள் வரை தண்டனைகளையும் அது உறுதி செய்கிறது. ஐ.பி.சியில் 354ஈ பிரிவு புதிதாக இணைக்கப்படவும் உள்ளது.
யார் இந்த திஷா?
ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் தான் இந்த திஷா. அவர் நவம்பர் 27ம் தேதி 4 நபர்களால் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் தீயிட்டு எரித்து கொல்லப்பட்டார். அவருடைய உடல் தேசிய நெடுஞ்சாலை -44ல், ஷாத்நகர் என்ற பகுதியில் இருக்கும் பாலத்திற்கு கீழே கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை வேண்டுமென்றே பழுதாக்கி அந்த பெண்ணை இந்த வலைக்குள் சிக்க வைத்திருக்கிறார்கள். குற்றவாளிகளை தெலுங்கானா காவல்துறையினர் கைது செய்தனர். டிசம்பர் 6ம் தேதி கைது செய்யப்பட்ட 4 நபர்களும் தப்பிக்க முயறிசி செய்ததாக கூறி காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.
ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இது தொடர்பாக மிகவும் உணர்வுப்பூர்வமான உரை ஒன்றை நிகழ்த்தினார் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி. அப்போது தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவை புகழ்ந்து பேசினார் மோகன். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான சட்ட திருத்தம் கொண்டு வர ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
திஷா சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபவர்களுக்கான குற்றவாளிகள் பதிவேட்டை அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே இந்த குற்றவாளிகளுக்கான தேசிய பதிவேட்டினை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. ஆனால் அது டிஜிட்டல் மயமாகவில்லை. மேலும் பொதுமக்கள் அங்கிருந்து தகவல்களை பெற இயலாது. ஆனால் திஷா சட்டத்தின் படி உருவாகும் இந்த டேட்டா பேஸ் மூலம் பொதுமக்கள் மற்றும் சட்ட அமலாக்கத்துறையினர் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
பிரத்யேக மரண தண்டனை
தற்போது பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்படும் நபர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் இந்த சிறப்புச்சட்டம் மரண தண்டனையை மட்டுமே வழங்குகிறது. இதற்காக இந்திய தண்டனைச் சட்டம், 1860 இன் பிரிவு 376- திருத்தம் செய்யப்படுகிறது.
21 நாட்களில் நீதி?
நிர்பயா சட்டம் 2013 மற்றும் குற்றவியல் திருத்த சட்டம் 2018 இந்த விசாரணைக்கான காலத்தை 4 மாதங்களாக வைத்துள்ளது. புலன் விசாரணைக்கு (Investigation) 2 மாதங்களும், வழக்கு விசாரணைக்கு (Trial) 2 மாதங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய சட்டம் 21 நாட்களில் விசாரணையை முடிக்க வழி வகை செய்கிறது. முறையான ஆதாரங்கள் இருக்கின்றபட்சத்தில் புலன் விசாரணை 7 நாட்களும் வழக்கு விசாரணை 14 வேலை நாட்களிலும் நடைபெறும். இதற்காக, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 இன் பிரிவு 173 மற்றும் பிரிவு 309 ஆகியவற்றிலும், சட்டத்தில் கூடுதல் உட்பிரிவுகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் சிறார்களுக்கும் இதே நடைமுறை தான் பின்பற்றப்படும்.
குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படுகிறது!
குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை தருவதை உறுதி செய்கிறது போக்சோ சட்டம் 2012. ஆந்திர பிரதேசம் திஷா சட்டம் 2019, குழந்தைகளுக்கு எதிராக, பாலியல் வன்கொடுமையற்ற, இதர பாலியல் குற்றங்களுக்கு ஆயுள் தண்டனையை வழங்குகிறது. இந்திய தண்டனைச் சட்டம், 1860-ல் புதிய பிரிவுகள் 354 எஃப் மற்றும் பிரிவு 354 ஜி ‘குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை’ ஆகியவை புதிதாக இணைக்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் தொந்தரவு தருபவர்களுக்கும் தண்டனை
இந்திய தண்டனைச் சட்டங்களில் இது போன்ற ஒரு குற்றத்திற்கு தண்டனைகள் ஏதும் இல்லை. ஆனால் திஷா சட்டத்தின் கீழ், மின்னஞ்சல், சோசியல் மீடியா மற்றும் இதர டிஜிட்டல் மீடியம் வழியாக பாலியல் தொந்தரவு தரும் நபர்களுக்கு தண்டனைகள் உறுதி. முதல் முறையாக இதுபோன்று நடக்கிறது என்றால் இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும். தொடர்ந்து இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு 4 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும் என்பதை உறுதி செய்கிறது இந்த சட்டம்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
ஆந்திராவில் சிறப்பு நீதிமன்றங்களை நிறுவுதல்
ஆந்திர திஷா சட்டம், 2019 இல், விரைவான விசாரணையை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை அரசாங்கம் நிறுவும். இந்த நீதிமன்றங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கற்பழிப்பு, ஆசிட் தாக்குதல்கள், பின்தொடர்தல், வோயுரிஸம், சமூக ஊடகங்களில் பெண்களை துன்புறுத்துதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து வழக்குகளையும் பிரத்தியேகமாக கையாளும். ‘பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குறிப்பிட்ட குற்றங்களுக்கான ஆந்திரா சிறப்பு நீதிமன்றங்கள் சட்டம் 2019’ -த்தை ஆந்திர மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
சிறப்பு காவல்துறை குழுக்களின் அரசியலமைப்பு மற்றும் சிறப்பு நீதிமன்றங்களில் சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமித்தல்
தற்போதுள்ள சட்டங்களில் அத்தகைய ஏற்பாடு இல்லை. ஆந்திர மாநில திஷா சட்டம், 2019-ல், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்காக டி.எஸ்.பி தலைமையில் மாவட்ட சிறப்பு போலீஸ் குழு என்று அழைக்கப்படும் மாவட்ட அளவில் சிறப்பு போலீஸ் குழுக்களை அரசாங்கம் அமைக்கும்.ஒவ்வொரு சிறப்பு நீதிமன்றத்திற்கும் ஒரு சிறப்பு பொதுநல வழக்கறிஞரை அரசாங்கம் நியமிக்கும். இவை அனைத்தும் திஷா சட்டத்தின் கீழ் ஆந்திராவில் ஏற்பட இருக்கும் மாற்றமாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.