Arabian Sea cyclones more frequent in recent years : இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தில் இருக்கும் 50 ஆண்டுகால (1970 – 2019) தரவுகளை ஆய்வு செய்ததில், கடந்த சில தசாப்தங்களில் (10 ஆண்டுகளில்), சூறாவளிக் காற்றுடன் கூடிய புயல்கள் உட்பட மோசமான வானிலை நிகழ்வுகள் அதிகரித்துள்ளன என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கான இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜித்தேந்திர சிங் மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
உலக வெப்பமயமாதல் காராணமாக தீவிர புயல்கள் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது உண்மைதானா என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்பென் தனஞ்ஜெய் பாட் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் இவ்வாறு கூறினார். உலகம் முழுவதும் வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள உயர்வு காரணமாக இது போன்ற பல திவீர புயல்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதிகளில் 1891 – 2020 ஆண்டுகளில் ஏற்பட்ட புயல்கள் குறித்து மதிப்பாய்வு செய்த போது, கடந்த ச்சில காலங்களில் அரபிக் கடலில், குறிப்பாக 1990க்கு பிறகு, புயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வங்கக் கடலில் சீரான போக்கே நிலவுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.
உயிர் மற்றும் பொருள்சேதம், பாதிக்கப்பட கூடிய சமூகத்தினரின் வாழ்வாதாரத்தை பாதித்தல் போன்ற பல்வேறு தாக்கங்களை இந்தியாவின் பல பகுதிகளில் இந்த புயல்கள் ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
பாஜகவின் சுப்ராத் பாதக் மற்றும் சந்திர சேகர் ஷாஜூ (பிஜூ ஜனதா தளம்) ஆகியோர் எழுப்பிய மற்றொரு கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர், வடக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஏற்பட்ட புயல்கள் காரணமாக உயிரிழந்த மக்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டார்.
2021ம் ஆண்டு ஏற்பட்ட டவ்தே புயலில் சிக்கி 118 நபர்கள் பலியாகினார்கள். ஆம்பன் புயலில் சிக்கி 98 நபர்களும், 2018ம் ஆண்டு தித்லி புயலில் சிக்கி 78 நபர்களும், 2012ம் ஆண்டு நீலம் புயலில் சிக்கி 75 நபர்களும் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil