பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் தனது இறுதிக் கட்டத்தில் இருக்கிறார். பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அந்நாட்டின் அரசியலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
முட்டாஹிதா குவாமி இயக்கம் ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறியதன் மூலம், பிடிஐ தலைமையிலான அரசு ஆட்சியை தொடர்வதற்கான பெரும்பான்மையை இழந்தது. ஏப்ரல் 3ஆம் தேதி எதிர்பார்க்கப்படும் எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று மாலை வரை, நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வதற்கு பதிலாக பதவியில் இருந்து விலகுவார் இம்ரான் கான் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 1ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இது போன்ற நிச்சயமற்ற சூழலில் பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவத் பஜ்வா மற்றும் ஐ.எஸ்.ஐ. தலைமை அதிகாரி, லெஃப்டினன்ட் நதீம் அஞ்சும் ஆகியோர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரானை அவருடைய வீட்டில் சந்தித்து பேசினார்கள். நாட்டு மக்களுக்கு உரையாட இருப்பதாக அவர் கூறியிருந்த நிலையில் அந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தலைமை அதிகாரியை நியமிப்பது தொடர்பாக ராணுவம் மற்றும் பாகிஸ்தான் பிரதமருக்கு இடையே நிலவிய மாறுபட்ட கருத்தின் காரணமாக அவருடைய பதவி பறிபோகும் நிலைமை கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே நிலவியது. ராணுவ தளபதி நியமிக்கும் நபருக்கு வாய்ப்பை வழங்கி கையெழுத்திடுவது மட்டுமே பிரதமரின் பணி என்றிருக்க இம்ரான் கான் பஜ்வாவை மூன்று வாரங்களுக்கு காக்க வைத்திருந்தார். மேலும் அப்போது பதவி வகித்திக் கொண்டிருந்த லெஃப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீதை பணி மாற்றம் செய்தார்.
நாங்கள் இருவரும் ஒரே பக்கத்தில் தான் இருக்கின்றோம் என்று கூறிக் கொண்ட உறவின் இறுதிக் கட்டமாக அது பார்க்கப்பட்டது. முதல்முறையாக பாக்ஸ்தானின் மக்கள் - ராணுவ அமைப்பு, கலப்பு முறைக்கு மாறியது. இரு தரப்பும் ஒரு புதிய பாதையில் பயணிக்க இருப்பதாக கூறினார்கள்.
கருத்தியல் ரீதியாக இம்ரான் கான் பாகிஸ்தானில் உள்ள அனைத்து சிவிலியன் அரசியல் அமைப்புகளிலும் ராணுவத்திற்கு மிக நெருக்கமானவராக இருக்கலாம் என ராணுவ ஆய்வாளரும் வர்ணனையாளருமான ஆயிஷா சித்திகா கூறினார்.
”அவர் இராணுவத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர்களின் நிறுவன மேலாதிக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிக்க மாட்டார் என்ற எதிர்பார்ப்புடன், பாகிஸ்தானின் நடுத்தர வர்க்கங்களின் சாம்பியனாக, அவர் இராணுவத்தின் சொந்த நடுத்தர வர்க்க நெறிமுறைகளை பிரதிபலிக்கும் ஒரு புரட்சியை பாகிஸ்தானில் கொண்டு வந்திருக்க வேண்டும்" சித்திகா கூறினார்.
பாஜ்வாவின் பதவி காலத்தை நீடிப்பது குறித்த அவரின் தடுமாற்றம் முதல் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. தன்னை ஆட்சியில் அமர்த்திய ஒரு அமைப்பை அவர் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் எப்படி கொண்டுவருவது என்று கற்பனை செய்தும், அவருக்கும் ராணுவத்திற்கும் இடையேயான உறவை கற்பனை செய்தும் தன்னை கச்சாவாக வெளிப்படுத்திக் கொண்டார் என்றும் சித்திக்கா கூறினார்.
பி.டி.ஐ.யுடன் தொடர்ந்து அதிகரித்து வரும் அதிருப்தி, நவீன கால மதீனாவுக்கு நிகர் என்ற வாக்குறுதியை கொடுத்த பின்னர் அங்கே நடைபெற்ற ஆட்சி, அதன் சொந்த இயலாமை ஒரு காரணம், கொரோனா தொற்று மறுகாரணம் என்று இரண்டு அமைப்புகளுக்கும் இடையேயான பிளவு அதிகரிக்க துவங்கியது.
செல்வாக்கற்ற தலைவருடன் அடையாளம் காணப்படுவதை இராணுவம் இனியும் விரும்பவில்லை. இராணுவமும் ஐஎஸ்ஐயும் அவரைத் தேர்ந்தெடுக்கவும் அவரது கூட்டணியை ஒன்றாக இணைக்கவும் அதிக வேலைகளை மேற்கொண்டனர் என்பது ஒன்றும் இரகசியமல்ல.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பிறகு பாகிஸ்தான் மீது அமெரிக்கா அதிக ஆர்வம் செலுத்தவில்லை. பைடன் நிர்வாகத்திற்கும் கானுக்கும் இடையேயான உறவு சொல்லிக் கொள்ளும் படி இல்லாத காரணத்தால் இது தீவிரத் தன்மையை அடைந்தது. ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்ற நாளில் இருந்து இன்று வரை ஒரு தொலைபேசி உரையாடலும் இருவருக்கும் மத்தியில் நிகழவில்லை.
சீனாவுக்கு மிக அருகில் இருக்கும் காரணத்தால் அமெரிக்காவின் நட்பை அதிகம் நாடும் ஒரு நாட்டின் ராணுவத்திற்கு இந்த போக்கு மேலும் பிரச்சனையை ஏற்படுத்தியது. ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்த பிறகு கான் புடினை நேரில் சந்தித்தது வெளியுறவுக் கொள்கையில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
கடந்த வாரம், கான் தனது பிரச்சனைகளில் வெளிநாட்டினரின் பங்கு உண்டு என்றும், நாட்டிற்கு வெளியே பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கும் சக்திகள் இருப்பதாகவும் அமெரிக்காவை குறிப்பிடும் வகையில் குற்றம் சாட்டினார்.
வர்த்தகத்தைத் தொடங்குவதன் மூலம் இந்தியாவுடனான உறவை மேம்படுத்திக் கொள்ள விரும்புவதாகக் கூறப்பட்ட பாஜ்வாவுடன் இம்ரானும் ஒரே பக்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
பிப்ரவரி 2021 இந்தியா-பாகிஸ்தான் ஒப்பந்தம் எல்லையில் துப்பாக்கி பயன்பாட்டினை குறைக்க வைத்தது. இரு நாட்டு இராணுவமும் இணைந்து உருவாக்கிய ஒரு அமைப்பு மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம் இந்த தீர்வு எட்டப்பட்டது. இதில் பாகிஸ்தான் அரசின் பங்கு குறைவாகவே உள்ளது. இந்த பேச்சுவார்த்தை இன்னும் தொடருகின்ற நிலையில் இம்ரான் கான் பதவி விலகும் பட்சத்தில் இந்திய - பாக் உறவில் புதிய சிக்கல்கள் உருவாகக் கூடும்.
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆளும் கட்சியின் தோல்விகளை சுட்டிக் காட்டி எதிர்க்கட்சிகள் அனைத்தும் வேற்றுமையை விலக்கி ஒன்றாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்தனர். இதன் மூலம் ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டுவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அவை உண்மைக்கு மாறானது.
கானுக்கான இந்த நெருக்கடியில் இராணுவம் தன்னை நடுநிலை என்று அறிவிக்காமல் இருந்திருந்தால் இந்த பிரச்சனை இந்நிலையை எட்டியிருக்காது என்பதே பகிரங்கமான உண்மை. அதன் அர்த்தம் ராணுவம் அவர் பக்கம் இல்லை. இல்லையெனில் அவரது சொந்தக் கட்சியிலிருந்து பலர் விலகியிருக்க மாட்டார்கள். முக்கிய கூட்டணிக் கட்சிகளின் விலகல் அரங்கேறியிருக்காது.
அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பாக செயல்பட வேண்டும் என்பது தான் எந்த ஒரு புதிய தலைமையும் உணர வேண்டும். ஏன் என்றால் பாகிஸ்தான் ராணுவம் பி.எம்.எல்(என்) கட்சியையோ, பி.பி.பி.-ஐ கட்சியையோ முழுமையாக நம்பவில்லை.
இந்த வார துவக்கத்தில் கூட்டணியில் நீடித்து இருக்க வேண்டும் என்றால் பஞ்சாப் மாகாண ஆட்சியை க்யூ லீகிற்கு தர வேண்டும் என்று பி.எம்.எல்.(க்யூ) கட்சி இம்ரானுடன் ஒரு ஒப்பந்தத்தில் ஈடுபட்டது. 1999ம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பிற்கு பிறகு பி.எம்.எல்.(என்) கட்சியில் இருந்து விலகி உருவாக்கப்பட்ட கட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. இது நவாஸ் ஷெரீப்பின் கட்சியை பாகிஸ்தானின் மிகவும் சக்திவாய்ந்த மாகாணத்தில் இருந்து விலக்கி வைக்க ராணுவத்திற்கு திறம்பட உதவியிருக்கலாம்.
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் புதிய தேர்தலை அறிவிக்கவோ அல்லது 23 வரை நீடிக்கவோ தற்போதைய பிரதமரால் இயலாது. நாட்டில் இருந்து வெளியேறி லண்டனில் வசித்து வரும் நவாஸ் ஷெஃரீபின் சகோதரர் ஷெபாஸ் ஷெரிஃப் பலரின் தேர்வாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சிறந்த நிர்வாக தன்மை கொண்ட இவர், மக்கள் - ராணுவ ஸ்பாதனத்தின் மீது மோதாமல் அடுத்த தேர்தல் வரும் வரை நாட்டை நிர்வகிக்கும் நபராக அவர் இருக்க வாய்ப்புகள் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருங்காலத்தில் ராணுவத்தின் ஆதிக்கத்திற்கு சவால்விடுக்கும் வகையில் பெரும்பான்மையுடன் யாரும் ஆட்சி அமைக்கமாட்டார்கள் என்பதை பாகிஸ்தான் ராணுவம் உறுதி செய்யும். ஆனாலும் அப்போதும் அதிகம் பலம் வாய்ந்த எதிர்க்கட்சி தலைவராக இம்ரான் கான் வரலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.