Advertisment

என்.ஆர்.சிக்குப் பிறகு பல லட்சம் மக்களின் நிலை என்ன ?

Assam NRC: நிருபிக்கும் வரையில் அவர்கள் தங்களுது அடிப்படை உரிமைகளை இழந்து, மனிதத் தன்மை என்ற அடையாளத்தை தக்கவைப்பது சாத்தியமில்லாத ஒன்றாகிவிடும்.

author-image
WebDesk
Aug 31, 2019 14:48 IST
New Update
National Register of Citizens of India, Assam, nrc assam

National Register of Citizens of India, Assam, nrc assam

மாநிலங்களவையில் கடந்த புதன்கிழமையன்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில் "இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டு மண்ணை விட்டே  அப்புரப்படுத்த படுவார்கள் " என்று கூறினார். இந்த பேச்சு அசாமில் இறுதி தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) வெளியிடுவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

என்.ஆர்.சி-யிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை, அவர்களில் யாரையும் நாடு கடத்த முடியுமா? என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

முதலில், எண்களைப் பார்க்கலாம்:

இறுதி என்.ஆர்.சி வரைவில்  40 லட்சம் மக்களின் விண்ணப்பங்கள்  நிராகரிக்கப்பட்டது. பிறகு, உறுதி செய்யப்பட்ட 2.89 கோடி பேரில், ஒரு லட்சம் மக்களின் விண்ணப்பங்கள் அடுத்தடுத்த சரிபார்ப்புக்குப் பிறகு அகற்றப்பட்டது. இருப்பினும், இந்த 41 லட்சம் நிலையாக இருக்கப் போவதில்லை. உதாரணமாக, சேர்க்கப்பட்ட லிஸ்டில் இரண்டு லட்சம் பெயர்களுக்கு எதிராக ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் மேலும் நீக்குதல் இருக்கலாம் என்று அறியப்படுகிறது. இறுதி வரைவில் இருந்து விலக்கப்பட்ட 40 லட்சத்தில், 36 லட்சம் பேர் குடியுரிமையை ஆவணங்களுடன் மீண்டும்  உரிமைகோரல்களை தாக்கல் செய்துள்ளதால், சில சேர்த்தல்களும் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில்  முடக்கப்பட்ட குடியுரிமை சட்ட (திருத்த) மசோதாவை அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்தி நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. பாஜக தலைமயிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி  மாநிலங்களவையில் எண்களைப் பெற்று இம்மசோதாவை நிறைவேற்றினால், என்.ஆர்.சியில் இருந்து வெளியேறிய இந்து மக்கள் இந்தியாவில் மீண்டும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதி பெறலாம்.

இறுதி என்.ஆர்.சி ஆகஸ்ட் 31 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இதில், சேர்க்கப்படாதவர்கள்  மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளது. எனவே, இது நெடுநாள் தொடரப்போகும் கதை.  அதன்பிறகுதான் நாடுகடத்தப்படுவது குறித்த கேள்வி முக்கியமடையப்போகிறது .

இதில் இருக்கும் அரசியல் பிரச்சனைகள்:

ஒரு நாடு வெகுஜன தனிநபர்களை வேறொரு நாட்டிற்கு நாடு கடத்த முடியும் என்றால், அந்த இரண்டாவது நாடு தனது குடிமக்கள் சட்டவிரோதமாக முதல் நாட்டிற்குள் நுழைந்தார்கள்  என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அரசாங்க தரவுகளின்படி, 2013 முதல் பிப்ரவரி 2019 வரை 166 நபர்களை அசாமில் இருந்து   (162 "குற்றவாளிகள்" மற்றும் நான்கு " சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்கள்")  பங்களாதேஷுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆனால், என்.ஆர்.சி சூழல் மிகவும் வித்தியாசமானது. முன்பை போல் சில நூறு பேர்களை மட்டும் அனுப்பாமல் பல லட்சக்கணக்கான மக்களை அனுப்ப விருக்கிறது என்.ஆர்.சி. அவர்களில் பலர் அசாமில் பல தசாப்தங்களாக வாழ்ந்து தங்களை இந்திய குடிமக்கள் என்று அடையாளப்படுத்துகின்ற மனநிலையில் தான் உள்ளனர் என்பது இங்கே மிகவும் கவனிக்கப்படவேண்டிய விசயங்களில் ஒன்று .

பல ஆண்டுகளாகவே, பங்களாதேஷ் நாட்டுத் தலைவர்கள் இந்தியாவில் அதன் குடிமக்கள் சட்டவிரோதமாக இருப்பதை மறுக்கும் செய்தியை நாம் ஊடகங்களில் அடிக்கடி கேட்டுக் கொண்டுதான் வருகிறோம்.

மேலும், இந்த என்.ஆர்.சி விஷயத்தை பங்களாதேஷுடன் விவாதிக்க, முன்வைக்க இந்தியா அண்மையில் எந்த முயற்சியும் மேற்கொண்டதாகவும் தெரியவில்லை.

கடந்த ஜூலை மாதம் டாக்காவிற்கு பயணம் செய்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பங்களாதேஷ் உள்துறை அமைச்சர் உஸ்மான் கானிடம்  என்.ஆர்.சியின் "பரந்த வரையறைகள்" மற்றும் இந்திய அரசால்  ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்முறை குறித்து விளக்கமளித்ததாக கடந்த ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. ஆனால், நாடுகடத்தப்படும் பல லட்சம் மக்களை பங்களாதேஷ் ஏற்குமா? என்பதற்கான  கேள்விகள் இன்னும்  மெளனமாகத் தான் இருக்கின்றது.

நாடுகடத்தப்படாவிட்டால், என்ன ?

விடுவிக்கப் பட்டவர்கள் இனி பல தரப்பில் மேல்முறையீடு செய்யும் நடைமுறை இருப்பதால் அசாமில் ஒருவர் நான் இந்தியக் குடியுரிமைக்கி தகுதியான ஆள் என்பதை நிருபிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகக்கூடும்.

முதலாவதாக, கணிசமான நீதிஅதிகாரம் படைத்த  வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் என்.ஆர்.சி யிலிருந்து  விடுவிக்கப் பட்டவர்கள் செல்லலாம். அங்கும் அவர்களின் உரிமை  மீண்டும் நிராகரிக்கப்பட்டால், உயர் நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் அணுக அவர்களுக்கு விருப்பம் உள்ளது.

அதுவரையில், என்.ஆர்.சி  இறுதி வரைவில் இடம் பெறாதவர்கள் தற்போதுள்ள ஆறு தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்படலாம், அல்லது புதிதாய் உருவாக்க  திட்டமிடப்பட்ட்டிருக்கும் பத்து  தடுப்பு முகாம்களில்  தங்க ஆளாக்கப் படுவார்கள் .

இவைகளில் பெரும்பாலும் அடிப்படை வசதிகள் இல்லாதவைகள் என்பது நிதர்சனமான உண்மை.  இந்த உண்மையைப் பறைசாற்றும் விதமாக சமீபத்தில்   உச்சநீதிமன்றம்  தடுப்பு முகாம்களில் மூன்று ஆண்டுக்கு மேல் இருந்தவர்களை ஷ்யூரிட்டி பத்திர நிபந்தனையுடன் விடுவிக்க அனுமதித்தது.

லட்சக்கணக்கான மக்களின் எதிர்காலம் நிச்சயமற்ற ஒன்றாகிவிட்டது. இந்த மக்களுக்கு  நியாம் தேடிய  நீதிமன்றத்தின்  நீண்ட  படிக்கட்டுகள் மட்டுமே இப்போது நம்பிக்கையாய் உள்ளது. நியாத்தை நிருபிக்கும் வரையில் அவர்கள் தங்களுது அடிப்படை உரிமைகளை இழந்து, மனிதத் தன்மை என்ற அடையாளத்தை தக்கவைப்பது சாத்தியமில்லாத ஒன்றாகிவிடும்.

பங்களாதேஷ் அனுப்புவதும் சாத்தியமில்லை, இந்தியாவில் இயல்பான வாழ்வும் அவர்களுக்கு  சாத்தியமில்லை.

#India #Assam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment