நிருபமா சுப்ரமணியன், கட்டுரையாளர்
பாகிஸ்தானின் ராணுவமும் பொதுமக்களும் கலந்த அரசியலில், ஒரு எதிர்க்கட்சி தெருமுனை ஆர்ப்பாட்டங்கள் மூலம் தேர்தல் அல்லாத அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் ‘நீண்ட பேரணி’ என்பது இப்போது அங்கே ஒரு நிரந்தர அம்சமாக உள்ளது. அரசாங்கம் தொடர்ந்து பதவியில் இருக்க முயற்சி செய்கிறது. ஆனால், அது அசைந்து பலவீனமடைகிறது. இதுபோன்ற ஒவ்வொரு சம்பவத்திலும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் சிறிது பங்கு உண்டு.
இந்த ஆண்டின் நீண்ட பேரணி அல்லது ஆசாதி மார்ச் (விடுதலைப் பேரணி) இஸ்லாமிய அரசியல் கட்சியான ஜாமியத்-இ-உலேமா இஸ்லாமியின் ஒரு பிரிவின் தலைவரான மௌலானா ஃபஸ்லூர் ரெஹ்மானால் நடத்தப்பட்டது. அந்த கட்சியின் முக்கிய தளம் பஷ்டூன் ஆதிக்கம் செலுத்தும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ளது. நவாஸ் ஷெரீப் அரசாங்கத்தை இதே போன்ற வழியில் கவிழ்க்க முயன்ற பிரதமர் இம்ரான் கான் தான் அவரது இலக்காக உள்ளார்.
ராணுவம் மற்றும் பொதுமக்கள் என இரண்டு தரப்பிலும் செயல்பட்டவர். மேலும், மதம் சார்ந்த மற்றும் மதச்சார்பற்ற இரண்டு தரப்பு கட்சிகளுடனும் ஒப்பந்தங்களை செய்துகொண்ட மூத்த அரசியல்வாதியான ஃபஸ்லுர் இம்ரான் காணின் தேர்தலை ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டின் பொருளாதார துயரங்களுக்கு அவரே காரணம் என்று கூறி அவர் திங்கள்கிழமைக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஃபஸ்லுர் இரண்டு இடங்களில் போட்டியிட்ட போதிலும் 1988 க்குப் பிறகு முதல் முறையாக 2018 இல் தோற்கடிக்கப்பட்டார். இருப்பினும், அவரது கட்சி கூட்டணியில் உள்ள மற்ற மதசார்ந்த கட்சிகளுடன் சேர்ந்து தேசிய சட்டமன்றத்தில் 14 இடங்களை வென்றது. அவர்கள் அனைவரும் கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தானில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டன. அப்பகுதிகளில் பஷ்டுன்ஸ் பெரிய அளவில் வசிக்கின்றனர். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்பின் எழுச்சி முதல் ஜாமியத்-இ-உலேமா இஸ்லாம் அதன் சொந்த தளமான கைபர் பக்துன்க்வாவில் ஓரங்கட்டப்பட்டுள்ளது.
இந்த அணிவகுப்பு அக்டோபர் 27 அன்று கராச்சியில் தொடங்கி, சிந்து மற்றும் பஞ்சாப் வழியாக சென்றது. இந்த பெரிய கூட்டம் இப்போது இஸ்லாமாபாத்திற்கு வெளியே மூன்றாவது இரவாக முகாமிட்டுள்ளது. அவர்களை ஃபெடரல் தலைநகரின் உயர் பாதுகாப்பு மண்டலத்தின் மையத்தில் உள்ள தேசிய சட்டமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்கு நேர் எதிரே டி சௌக் என்ற இடத்திற்கு செல்வேன் என்று ஃபஸ்லூர் அச்சுறுத்துகிறார். இதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர் அதிகாரிகளை புறந்தள்ளக்கூடும் என்ற அச்சத்திற்கு இடையே தேவைப்பட்டால் அந்த இடத்தை கண்டெய்னர்களைக் கொண்டு பூட்டும் நிலையில் உள்ளனர்.
இம்ரான்கான் அன்றும் இன்றும்
அவரை வெளியேற்ற விரும்புவோர் உண்மையில் ஊழல் வழக்குகளில் இருந்து விடுபடுவதற்கான ஒரு ஒப்பந்தத்தை விரும்புகிறார்கள் என்று கான் வலியுறுத்தினார். இந்த பேரணி ரா மற்றும் இந்தியாவின் சதி என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், எதிர்க்கட்சி அரசியல்வாதியாக நீண்ட பேரணி அரசியலின் ராஜாவாக இருந்த இம்ரான்கானுக்கு மனநிறைவு இல்லை.
2014 ஆம் ஆண்டில், நவாஸ் ஷெரீப் பெரும்பான்மையுடன் வாக்களிக்கப்பட்ட ஒரு ஆண்டு கழித்து, இம்ரான் கான் அவருடைய அரசாங்கத்தை ஒரு நீண்ட பேரணி – தர்னாவுடன் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் தலைவருக்குப் பின்னால் இராணுவத்தின் துணையுடன் பெருமளவில் முன்னேறி திணறடித்தார்.
பின்னர், டி சௌக்கில் ஒரு கடுமையான உரை நிகழ்த்திய இம்ரான் கான் ஷெரீப்பை பதவி நீக்கம் செய்யுமாறு இராணுவத்திடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார். அவருடன் கனடாவைச் சேர்ந்த மதகுரு தாஹிர் உல் காத்ரியும் இணைந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரைப் பின்தொடர்ந்தவர்கள், இதேபோன்ற முறையில் இஸ்லாமாபாத்தை முற்றுகையிட்டு பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசாங்கத்தை ராஜினாமா செய்யக் கோரினர். பிரதமரின் அலுவலக இல்லத்தையும் அருகிலுள்ள பிற அரசு அலுவலகங்களையும் ஊடக அலுவலகங்களையும் போராட்டக்காரர்கள் தாக்க முயன்றதால் இம்ரான் கானின் நான்கு மாத தர்ணா வன்முறையில் முடிந்தது.
2016 இல் நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படாவிட்டால் மீண்டும் தலைநகரை முற்றுகையிடுவேன் என்ற இம்ரான் கானின் அச்சுறுத்தலை எதிர்கொண்டபோது, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு குழுவை அமைத்தது. பின்னர், ஷெரீப்பை ஓரு ஆண்டுக்குள் வெளியேற்ற நீதித்துறை வழிவகுத்தது.
2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நவாஸ் ஷெரீப்பின் தண்டனைக்குப் பின்னர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) அரசாங்கம் மற்றொரு முற்றுகையால் அதிர்ந்தது.இந்த முறை தெஹ்ரிக்-இ-லப்பைக் பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் பரேல்வி தீவிரவாதிகள் அரசியலமைப்பில் மாற்றங்களை எதிர்த்து போராடினார். அது பாகிஸ்தானின் கடவுள் நம்பிக்கைக்கு எதிரான சட்டங்களை நீக்கப்படும் என்று கூறப்பட்டது. தர்ணாவைக் கலைக்க உதவுமாறு அரசாங்கம் இராணுவத்திடம் கேட்டபோது, இராணுவத் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக பிரதமர் ஷாஹித் காகன் அப்பாஸிக்கு இரு தரப்பினரும் வன்முறையைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இது தேசிய நலனில் இல்லாததால் இந்த விஷயத்தை அமைதியாக கையாளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். இம்ரான் கான் போராட்டக்காரர்களுக்கு ஆதராவாக வந்தார். அவர்கள் தங்களுடைய அனைத்து கோரிக்கைகளுக்கும் அரசாங்கம் சரணடைய இராணுவம் இடைத்தரகு வேலை செய்த பின்னரே கலைந்து சென்றனர். தற்போதைய ஐ.எஸ்.ஐ தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் பைஸ் ஹமீத், அப்போது ஒரு பெரிய ஜெனரலாக இருந்தார். அவர்தான் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவராக இருந்தார்.
தேர்தல் நடந்து 14 மாதங்களுக்குள், இம்ரான் கானுக் இப்போது அவருடைய வழியே அவருக்கு எதிராக மாறியுள்ளது. ஃபஸ்லூர் ரெஹ்மானின் பேரணிக்கும் இம்ரான் கான் தலைமையிலான பேரணிக்கும் இடையே சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன. ஒன்று, அமைப்பு: இந்த பேரணியில் முழுக்க முழுக்க ஆண் மாணவர்கள் மற்றும் மதரஸாக்களிலிருந்து அணிதிரட்டப்பட்ட மதகுருமார்களும் உள்ளனர். பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப்பின் நடுத்தர வர்க்க ஆதரவாளர்கள் ஆண்களும் பெண்களும் எஸ்.யு.வி வாகனங்களில் புதுவகை உடைகளில் வந்து கலந்துகொண்டனர். இந்த பேரணியில் ஒரே மாதிரியானது சுஜுகி மெஹ்ரான் வாகனம் மட்டும்தான்.
ஆனால், மிக முக்கியமான வேறுபாடு ஒன்று உள்ளது. அது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) பதவியில் இருந்தபோது ஷெரீப்பிற்கும் இராணுவத்திற்கும் இடையிலான பதட்டம் இம்ரான் கான் பேரணிக்கும் பிற பேரணிக்கும் பின்னணியாக இருந்தது. இந்த முறை பிரதமர் அடிக்கடி அறிவித்தபடி இராணுவமும் இம்ரான் கானும் ஒரே பக்கத்தில் உள்ளனர்.
ஃபஸ்லுர் ஏன் முக்கியத்துவம் பெறுகிறார்?
இஸ்லாமாபாத் ஃபஸ்லூர் ரெஹ்மானின் பேரணி பற்றிய கேள்விகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், கைபர் பக்துன்க்வாவில் உள்ள தேரா இஸ்லாமில் கானைச் சேர்ந்த அரசியல்-மதக் குடும்பத்தைச் சேர்ந்தவர் மௌலான உள்ளார். அவரது நீண்ட அரசியல் வாழ்க்கையை அவருடைய தந்தையிடமிருந்து மரபாகப் பெற்றவர். இவர் ஆப்கானிஸ்தான் தாலிபான் ஆதரவாளராகவும் உதவியாளராகவும் இருந்து வருகிறார். அவர் 9/11 நிகழ்வுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவின் குண்டுவீச்சுக்கு எதிராகவும், போரில் அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் அளித்த ஆதரவுக்கு எதிராகவும் பெரும் போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். வடமேற்கு பாகிஸ்தானில் இராணுவம் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் குழுக்களுக்கு இடையே சமாதான ஒப்பந்தங்களை ஏற்படுத்தவும் அவர் முயன்றார். அவர் தேசிய சட்டமன்றத்தின் காஷ்மீர் குழுவின் தலைவராக மிக சமீபத்தில் 2013 மற்றும் 2018 க்கு இடையில் குறைந்தது மூன்று முறை இருந்தார். அவரது இளமை பருவத்தில், ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான ஜியா எதிர்ப்பு இயக்கத்தில் இருந்தார். ஆனால், 2004 வாக்கில், அரசியலமைப்பில் மாற்றங்களை ஆதரிப்பதன் மூலம் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் தனது ஆட்சி மாற்றத்தை சட்டப்பூர்வமாக்க உதவினார்.
தனது சமீபத்திய நிலைப்பாட்டில் கடந்த தேர்தலில் இம்ரான் கானை தேர்ந்தெடுத்ததற்காக பாகிஸ்தான் மக்கள் கட்சியையும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்க்கையும் (நவாஸ்) விட பாகிஸ்தான் இராணுவத்தையும் ஐ.எஸ்.ஐ.யையும் ஃபஸ்லூர் வெளிப்படையாக விமர்சித்தார். கடந்த வெள்ளிக்கிழமை அதன் நடுநிலைமையை அறிவிக்க வேண்டும் என சவால் விடுத்தார். முந்தைய நிகழ்ச்சிகளில் இதுபோன்ற போராட்டக்காரர்களின் பக்கம் இருப்பதாகத் தோன்றிய இராணுவம், நாட்டை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தும் முயற்சிகள் பொறுத்துக் கொள்ளப்படாது என்று இந்த முறை விரைவாக எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானின் அரசியல் மற்றும் அதன் வடமேற்கு பிராந்தியங்களுக்கு அவர் இன்னும் பொருத்தமானவராக இருக்கிறார் என்பதை ஃபஸ்லூர் இராணுவத்திற்கு சமிக்ஞை மூலம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்கள் கட்சியையும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கையும் (நவாஸ்) தனது போராட்டத்தில் சேர அவர் அழைத்தபோது அதை இரு கட்சிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவால் பூட்டோவும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் கூட்டத்தில் உரைகளை நிகழ்த்திய போதிலும் – அவர் கைபர் பக்துன்க்வாவில் பெரிய எதிர்ப்பு இயக்கமாகவும் வெளிப்படையான ஸ்தாபன எதிர்ப்பு இயக்கமாகவும் உள்ள பஷ்டூன் தஹாபுஸ் இயக்கத்திற்கு அத்தகைய அழைப்பை விடுக்கவில்லை.
பேரணி பற்றிய மற்ற கேள்வி அதனுடைய காலத்தைப் பற்றியதாக இருக்கிறது. ஜெனரல் பஜ்வாவின் பதவி நீட்டிப்பு குறித்து ஊகங்கள் பரவும்போது இது நடைபெறுகிறது. ராணுவத் தலைவர் நவம்பர் இறுதியில் ஓய்வு பெற உள்ளார். இம்ரான் கான் மூன்று ஆண்டு நீட்டிப்பை அறிவித்த போதிலும் இந்த விவகாரம் இன்னும் சீல் வைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்படவில்லை. இந்த பேரணி ஜெனரல் பஜ்வாவின் அழுத்தம் தந்திரமாக இருக்கலாம் அல்லது இம்ரான் கானை ஆதரிப்பவர்களுக்கும் பஜ்வாவின் நீட்டிப்புக்கு எதிரானவர்கள் மற்றும் அவ்வாறு செய்யாதவர்களுக்கும் இடையில் இராணுவத்தில் உள்ள உள் புகைச்சலின் வெளிப்பாடாக இது இருக்கலாம் என்று முணுமுணுக்கப்படுகிறது.
பாகிஸ்தானியர்களின் எதிர்ப்புத் தன்மை எவ்வாறு வியத்தகு முறையில் மாறியுள்ளது என்பதையும் இந்த ஆசாதி பேரணி காட்டுகிறது. முன்பெல்லாம் பாகிஸ்தான் மக்கள் கட்சி அல்லது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நாவாஸ்) இது போன்ற ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய தெரு அதிகாரத்தைக் கொண்டிருந்தனர். இப்போது ஒரு மதக் கட்சி எதிர்க்கட்சியின் நிலையை எடுத்துள்ளது. இது பாகிஸ்தான் இராணுவத்தின் பார்வையில் இருந்து வரவேற்கப்படுகிறது. இது எவ்வாறு முடிவடையப் போகிறது என்பதைப் பொருட்படுத்தாமல் பாகிஸ்தானின் அரசியல் நிலப்பரப்பு மற்றொரு திருப்பத்திற்கு தயாராக உள்ளது.