Balakot terror camp reactivated by Pakistan: பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாமை மிக சமீபத்தில் பாகிஸ்தான் மீண்டும் செயல்படுத்தியுள்ளது என்று ராணுவ தலைமை ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள இந்த முகாம் இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்திய விமானப் படையால் தாக்கப்பட்டது. இந்த முகாம் எங்கே இருக்கிறது, என்னவாக இருக்கிறது என்பதை பற்றியும் இந்தியாவுக்கு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் பாக்கிஸ்தானின் நீண்டகால திட்டத்தில் இது எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.
பாலகோட் பயங்கரவாத பயிற்சி முகாம்
பாலகோட் பாக்கிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் மன்சேஹ்ரா மாவட்டத்தில் உள்ள அப்போட்டாபாத்திற்கு 63 கி.மீ வடக்கே உள்ளது. அங்கேதான், 2011, மே மாதம் அமெரிக்காவின் சிறப்புப் படைகள் ஒசாமா பின்லேடனை கொன்றன. இது பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 200 கி.மீ தொலைவிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரம் முசாஃபராபாத்திலிருந்து 40 கி.மீ வடமேற்கிலும் உள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது தனது முகாமை அமைத்திருந்த பாலகோட்டில் உள்ள காடுகள் நிறைந்த மலை உச்சி பகுதியான ஜபா முகடை இந்திய விமானப்படை தாக்கியது. இந்திய புலனாய்வு அமைப்புகளால் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு ஆவணத்தின்படி, அதன் விவரங்களை இந்திய விமானப்படை தாக்குதலுக்குப் பிறகு விரைவிலேயே இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டது. அந்த நேரத்தில், பயிற்சி முகாம் ஆறு ஏக்கர் பரப்பளவில் பரவி இருந்தது. அது 600 பயங்கரவாதிகளுக்கு இடமளிக்க போதுமான இடமாக இருந்தது.
முகாமில் பயிற்சிபெற ஜெய்ஷ் இ முகமது பணியாளர்களின் விரிவான பட்டியல்கள், வளாகத்தை சுற்றி ஆயுததாரிகள் சென்றதற்கான புகைப்பட சான்றுகள், அவர்களின் உடற்பயிற்சி கூடங்கள், வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு போன்றவை அந்த ஆவணத்தில் இருந்தன.
பயங்கரவாதத்தின் மையம்
பாலகோட் பகுதியும் உண்மையிலேயே முழு மன்சேஹ்ரா மாவட்டமும் பாக்கிஸ்தானிய பாதுகாப்பு ஸ்தாபனத்தின் ஜிஹாதி திட்டத்திற்கு நீண்டகாலமாக மையமாக உள்ளது. இப்பகுதியில் மிக அதிக எண்ணிக்கையிலான மசூதிகள் மற்றும் மதரஸாக்கள் உள்ளன. இங்கேதான் ஆப்கானிஸ்தான் போருக்காகவும் பின்னர் காஷ்மீருக்காகவும் ஜிஹாதிகளுக்கு பயிற்சி அளிக்க முதல் முகாம்கள் அமைக்கப்பட்டன.
பாலகோட்டுக்கு அருகில் காரி ஹபிபுல்லாஹ் பகுதி உள்ளது. அங்கு ஹிஸ்புல் முஜாஹிதீன்களுக்கு ஒரு பயிற்சி முகாம் இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001-இல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு அவை ஓரிரு ஆண்டுகள் மூடப்பட்டிருந்தது. பின்னர், மன்சேஹ்ரா மாவட்டத்தில்பல்வேறு ஜிஹாதி பயிற்சி முகாம்களை மீண்டும் தொடங்குவதைப் பற்றி பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் மாத இதழ் ஹெரால்ட் செய்தி வெளியிட்டது.
ஜெய்ஷ் இ முகமது நடவடிக்கைகளின் முக்கிய மையம்
இந்திய விமானப்படை தாக்குதலுக்குப் பிறகு, வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே தனது ஊடகவியலாளர் சந்திப்பில், பாலகோட் பயங்கரவாத பயிற்சி மையத்தை மேற்பார்வையிடும் பொறுப்பை ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசார் தனது மைத்துனர் யூசுப் அசாருக்கு வழங்கியதாக குறிப்பிட்டார். மசூத் அசார் தனது பரந்த பயங்கரவாத சாம்ராஜ்யத்தில் உள்ள இலாக்காக்களை தனது குடும்ப உறுப்பினர்களிடையே பகிந்துகொள்வதன் மூலம் பணியாற்றுகிறார்.
ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் யூசுப் அசார் புகைப்படங்கள், மலைப்பாங்கான பயிற்சி களத்தில் அவருடைய தினசரி ரோந்துக்கு பயன்படுத்தும் வாகனம் மற்றும் பாலகோட்டில் துப்பாக்கிச்சூடு பயிற்சி பகுதி ஆகியவை இந்திய ஆவணக் கோப்புகளில் இருந்தன. இந்திய உளவுத்துறை கூற்றின்படி, ஏப்ரல் 1, 2018-இல் பாலகோட்டில் பயங்கரவாத பயிற்சி முடித்தவர்களை சேர்க்கும் நிகழ்ச்சியில் அப்துல் ரவூஃப் அஸ்கார் கலந்துகொண்டார். இவர் மசூத் அசாரின் சகோதரர்.
ஜெய்ஷ் இ முகமதுவைப் பொறுத்தவரை இது ஒரு உத்வேகம் தரும் இடம்
பாலகோட் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு பெரிய அளவில் அடையாளரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இது பரேல்வி மறுமலர்ச்சித் தலைவர் சையத் அஹமத் ஹாஹீத் மற்றும் அவருடைய கூட்டாளியான ஷா இஸ்மாயில் ஹாஹீத் ஆகியோர் அடக்கம் செய்யப்பட்ட இடமாகும். 1831 ஆம் ஆண்டு மே மாதம் இந்திய துணைக்கண்டத்தின் முதல் போரில் இவர்கள் கொல்லப்பட்டனர். தோல்வியுற்றாலும், சீக்கிய பேரரசர் மகாராஜா ரஞ்சித் சிங்கின் இராணுவத்திற்கு எதிராக ஜிஹாத் போரிட்டனர்.
பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயிற்சி முகாமுக்கு சையத் அஹமது ஷாஹீத் பெயரிடப்பட்டது.
ஜெய்ஷ் இ முகமதுவின் சையத் அஹமது ஷாஹீத் பயிற்சி முகாமுக்குள் நடவடிக்கைகள் மிகவும் அமைப்பாக்கப்பட்டுள்ளது என்று இந்திய உளவுத்துறை நம்புகிறது. மேலும், மசூத் அசாரின் இரண்டு மருமகன்கள் காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட பின்னர், ஒரு ஆண்டு காலத்தில் பெரிய அளவிலான எண்ணிக்கையில் பணியாளர்கள் பயிற்சி பெறுவதற்கு வந்துள்ளனர்.
முதலில் நவம்பர் 2017-இல் புல்வாமாவில் நடந்த ஒரு மோதலில் அசாரின் மைத்துனர் மகன் தல்ஹா ரஷீத் கொல்லப்பட்டான். மற்றொருவர் அக்டோபர், 2018-இல் அசாரின் இன்னொரு மருமகன் உஸ்மான் ஹைதர் டிராலில் கொல்லப்பட்டார்.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு, மசூத் அசாரை இந்தியாவின் சிறையில் இருந்து விடுவிப்பதற்கு வழிவகுத்த விமான கடத்தல் ஐசி -814 நிகழ்வில் கடத்தல்காரர்களில் ஒருவரான இப்ராஹிம் அசாரின் மகன்தான் உஸ்மான் ஹைதர்.
இந்திய விமானப்படை தாக்குதல் சமயத்தில், புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்த்த பாகிஸ்தான் ஸ்தாபனம், பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைமையகத்தை காலி செய்துவிட்டு, பாலகோட் பயிற்சி மையத்தில் ஏராளமான பயங்கரவாத பணியாளர்களைக் கூட்டியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.