இந்திய அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பு: பெக்கா உடன்பாட்டின் முக்கியத்துவம் என்ன?

இதன்மூலம், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வாங்குவது மற்றும் பரிமாற்றம் செய்வதில் உயர் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இந்திய அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் நிலையிலான உயர்மட்ட பேச்சு வார்த்தை புதுதில்லியில் நடைபெற்றது.  இதில், இந்தியா- அமெரிக்கா இடையே அடிப்படை பாதுகாப்பு, பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்புக்கான முக்கிய ஒப்பந்தம் உட்பட ஐந்து ஒப்பந்தங்கள் புதுதில்லியில் கையெழுத்தாயின.

அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (பெக்கா ஒப்பந்தம்) என்றால் என்ன? 

தன்னியக்கம் அமைப்புகள் மற்றும் ஏவுகணைகள், ட்ரோன்கள் போன்ற ஆயுதங்களின் துல்லியத்தை மேம்படுத்தும் அமெரிக்க புவிசார் நுண்ணறிவுக்கு இந்தியா நிகழ்நேர அணுகலைப் பெற பெக்கா ஒத்துழைப்பு உதவும். வரைபடங்கள், செயற்கைக்கோள் படங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதன் மூலம், புவியியல் மற்றும் இடவியல் தரவுகளும், துல்லியமாக தாக்கும் எதிர்ப்பு ஆயுதங்களுக்கு தேவையான சேவைகளும் கிடைக்கப்பெறும்.

இது இந்தியா –  அமெரிக்கா  விமானப்படைகளுக்கு  இடையிலான ஒத்துழைப்புக்கு முக்கியமாக இருக்கலாம். நமது  ஸ்மார்ட்போனில் உள்ள ஜி.பி.எஸ் ஓரிடத்தைத் துல்லியமாக அடைய எப்படி உதவுகிறதோ, அதே போன்று தான் பெக்கா ஒப்பந்தமும்.  இந்த ஒப்பந்தத்தால், உயர் ரக ஜி.பி.எஸ் சேவையுடன் கூடிய இந்திய இராணுவ அமைப்புகள்,  வெகு தொலைவிலிருந்தே எதிரி நாடுகளை மிகத் துல்லியமாக  குறிவைக்கும்.

கப்பல் சேவை, விமானச் சேவை , போர் ஆயத்தப் பணிகள், இலக்குகளை துல்லியமாகக் கண்காணிப்பது  போன்றவைகளைத் தாண்டி இயற்கை பேரழிவு மேலாண்மைக்கும் புவியியல் நுண்ணறிவு முக்கியமானது.

இந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ” புதிய பாதுகாப்பு தளவாடங்களை வாங்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுவரும் நிலையில், மாபெரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நாடு என்ற அந்தஸ்தில் இந்தியாவை தொடரச் செய்வது என்ற உறுதியை அதிபர் டிரம்ப் அளித்துள்ளார். இதன்மூலம், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வாங்குவது மற்றும் பரிமாற்றம் செய்வதில் உயர் முக்கியத்துவம் அளிக்கப்படும். அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட உடன்பாடுகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு ஒத்துழைப்பு பேச்சுவார்த்தைகளை விரைந்து இறுதிசெய்ய தலைவர்கள் ஆவலுடன் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டது.

 

 

லாஜிஸ்டிக்ஸ் எக்ஸ்சேஞ்ச் மெமோராண்டம்: 

முன்னதாக, ஆகஸ்ட் 2016 இல், இந்தியாவும் அமெரிக்காவும் லாஜிஸ்டிக்ஸ் எக்ஸ்சேஞ்ச் மெமோராண்டம் ஒப்பந்தத்தில் (LEMOA) கையெழுத்திட்டன, இது ஒவ்வொரு நாட்டின் இராணுவத்தையும் மற்றவர்களின் ராணுவ தளங்களில் பணியாற்ற அனுமதிக்கிறது. இந்த ஒப்பந்தங்கள் மலபார் உடற்பயிற்சியுடன் நன்கு இணைகின்றன, ஏனெனில் இந்தியா அனைத்து குவாட் நாடுகளுடன் LEMOA பதிப்புகளில் கையெழுத்திட்டுள்ளது.

1991 ல் முதல் வளைகுடாப் போரின்போது மும்பையில் அமெரிக்க விமானங்களை எரிபொருள் நிரப்ப அனுமதித்தல்,  9/11 க்குப் பிந்தைய பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்போது அமெரிக்க போர்க்கப்பல்களை இந்திய துறைமுகங்களை பயன்படுத்த அனுமதித்தல் போன்ற  லாஜிஸ்டிக்ஸ் உதவிகளை கடந்த காலங்களில் செய்திருந்தாலும்,  LEMOA  கையொப்பம் இந்த செயல்முறையை நிறுவனமயமாக்கியது.

தகவல்தொடர்பு இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம்:

செப்டம்பர் 2018-ல், இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் 2 + 2 உரையாடலுக்குப் பிறகு – அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கேல் பாம்பியோ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் ஆகியோரை சந்தித்தனர் . இரு தரப்பினரும் தகவல்தொடர்பு இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் (COMCASA) கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம், அமெரிக்கா தகவல்களை மறைபொருளாக்குதல் (என்கிரிப்ட்) வசதிகள் கொண்ட  தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் அமைப்புகளை  இந்தியாவுக்கு வழங்க அனுமதிக்கிறது. இதன்மூலம், போர் மற்றும் அமைதி காலங்களில் இரு நாட்டு விமானம் மற்றும் கப்பல் படைகளும் , இரு நாட்டு இராணுவத் தளபதிகளும் பாதுகாப்பான முறையில் இனைந்து செயல்பட வழி பிறக்கிறது.

தனது நெருக்கமான கூட்டாளிகளோடு அமெரிக்கா பகிர்ந்துகொள்ளும் தொழில்நுட்ப தகவல்களை இந்தியாவோடும் பகிர்ந்துகொள்ளும் வேலைகளில் அமெரிக்கா இறங்கும். இந்தியா தனது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்ற உறுதியின் பேரில் இருநாடுகளும் உபயோகிக்கத்தக்க தொழில்நுட்பங்களை எந்த உரிமமும் இல்லாமல் இந்தியா பெற முடியும் என்று பிரதமர் அலுவலகம் முன்பு தெரிவித்து இருந்தது.

இந்த ஒப்பந்தங்களின் நடைமுறை நன்மை என்ன?

ஆக்கிரமிப்பு சீனாவின் பின்னணியில் மூலம்  பாதுகாப்புத்துறையில் இந்தியா- அமெரிக்கா என்ற  இருநாடுகளுக்கிடையிலான உறவு வலுப்படுவதை நம்மால்    காண முடிகிறது. தனது எல்லையை பகிர்ந்துகொண்டுள்ள நாடுகளோடும், இதர நாடுகளையும் சீனா அச்சுறுத்தி வருகிறது. மேலும் இது விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச உறவுகளின் அம்சங்களையும் தன்னிச்சையாக மீறிவருகிறது.

கடந்த மூன்று தசாப்தங்களில் காணப்படாத தீவிரமான எல்லை மோதல்கள் லடாக் கட்டுப்பாட்டுக் கோட்டில்  காணப்படுகின்றன. இந்த பின்னணியில் தான், குறிப்பாக ஜூன் மாதத்தில் இருந்து இந்தியா- அமெரிக்கா இடையிலான ராணுவ ஒத்துழைப்பு, உளவுத்துறை பகிர்வு  முன்னெப்போதும் இல்லாத அளவில் தீவிரமடைந்தது.

கடந்த ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன், அமெரிக்கா  வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் ஆர் பாம்பியோ தொலைபேசியில் உரையாடினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்கா பாதுக்காப்பு ஆலோசகர் ராபர்ட் சி ஓ’பிரையனுடன் தொடர்பு கொண்டார். மேலும், அமெரிக்க இராணுவத் தலைவர் ஜெனரல் மார்க் ஏ. மில்லி, பாதுகாப்புப் படைத்தலைவர் பிபின் ராவத் ஆகியோருக்கு இடையே பல வாரங்களாக உரையாடல்கள் நடைபெற்றன .

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டி எஸ்பர் ஜூலை இரண்டாவது வாரத்தில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். இந்த உயர்மட்ட உரையாடல்கள், இரு நாடுகளின் பாதுகாப்பு, இராணுவ ஒத்துழைப்புக்கு  தேவையான தகவல் மற்றும் அதிக அளவிலான உளவுத்துறை பகிர்வு குறித்த கட்டமைப்பை உருவாக்க உதவியுள்ளன.

உயர்தர செயற்கைக்கோள் படங்கள், தொலைபேசி இடைமறிப்பு,  சீன துருப்புக்கள் குறித்த விவரங்கள் , எல்லைக் கட்டுப்பாடு கோடு நெடுகே சீனாவின்  ஆயுத பலம் ஆகிய தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. எல்லைப் பகுதி நெடுகே  அனைத்து செக்டாரிலும் சீன துருப்புகளின் இயக்கங்களை புது டெல்லி உன்னிப்பாக கவனிப்பதற்கு இது மிகவும் உறுதுணையாக இருந்தன.

செவ்வாயன்று, அமெரிக்கா  வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ சீனாவை நேரடியாகத் தாக்கியதுடன், “தங்கள் இறையாண்மைக்கும், சுதந்திரத்துக்கும் எதிரான அச்சுறுத்தல்களை சந்திக்கும் இந்திய மக்களுடன் துணை நிற்போம்” என்ற அமெரிக்க உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

“… சீன கம்யூனிஸ்ட் கட்சியால் முன்வைக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் மட்டுமல்லாமல், அனைத்து வகையான அச்சுறுத்தல்களுக்கும் எதிராக ஒத்துழைப்பை வலுப்படுத்த இருநாடுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதில்  நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று பாம்பியோ கூறினார்.

“நாங்கள் (புதுதில்லியில் உள்ள போர் நினைவுச்சின்னத்திற்கு) சென்றோம் … ஜூன் மாதத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படைகளால் கொல்லப்பட்ட 20 ராணுவ வீரர்கள் மற்றும் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த  ராணுவ வீரர்களின் கரவிப்பதற்காக.”

பாம்பியோ, எஸ்பருடன் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங் ஜெய்சங்கர் ஆகியோர் சீனாவின் பெயரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஆனால், பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை சர்வதேச விதிமுறைகளுக்குட்பட்டு, நிலைநாட்டப்பட வேண்டும் , அண்டை நாடுகளுடன் நல்லுவை பராமரிக்கவே இந்தியா விரும்புகிறது” என்று தெரிவித்தார்.

நாம், என்ன புரிந்து கொள்ள வேண்டும்?   

எல்லாவற்றிற்கும் மேலாக, பரஸ்பர நம்பிக்கையின் இணைப்பு  மற்றும் நீண்டகால மூலோபாய உறவுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை இது குறிக்கிறது. முக்கிய பாதுகாப்பு உடன்படிக்கைகள்  தற்போது நடைமுறையில் இருப்பதால், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் கட்டமைக்கப்பட்ட, திறமையான வழியில் செல்கிறது.

அதே சமயம், ரஷ்யாவின் ராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களில் இருந்து  இந்தியா விலகிச் செல்ல வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.

Web Title: Beca lemoa comcasa india us three military foundational pacts

Next Story
இந்தியாவுடன் ஒப்பீடு: பொருளாதார வளர்ச்சியில் இடைவெளியை குறைத்த வங்கதேசம்How Bangladesh has reduced gap — and is now projected to go past India
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com