scorecardresearch

பீகார் குடிநீர் திட்டத்தில் ஊழல்: துணை முதல்வர் குடும்பத்திற்கு ரூ. 53 கோடி ஒப்பந்தம்

குடிநீர் திட்டத்தின் கீழ் கதிஹார் மாவட்டத்தில் PHED ஒதுக்கிய 36 திட்டங்களும், துணை முதலமைச்சர் பிரசாத் நெருக்கமானவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பீகார் குடிநீர் திட்டத்தில் ஊழல்: துணை முதல்வர் குடும்பத்திற்கு ரூ. 53 கோடி ஒப்பந்தம்

அனைத்து வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் என்பது தான், 2015இல் தேர்தல் போட்டியிட்ட பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் அதிரடி அறிவிப்பாகும். சொன்னபடியே, 2016இல் Har Ghar Nal Ka Jal (tap water in every home) திட்டம் மூலம் இதுவரை 152.16 லட்சம் குழாய் இணைப்புகளுக்குக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.பல மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கிய இத்திட்டத்தின் பணிகள், அரசியல் லாபத்தில் தலைவர்களின் நெருங்கிய வட்டாரத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளது தி இந்தியன் எக்ஸ்பிர்ஸ் 4 மாதங்களாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.


20 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் டெண்டர் ஆவணங்களை,  Registrar of Companies (RoC) மற்றும் பீகாரின் பொதுச் சுகாதார பொறியியல் துறை (PHED)பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. Phed என்பது, மாநிலத்தின் பஞ்சாயத்து ராஜ் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகளுடன் இணைந்து குறிப்பிட்ட திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பு ஆகும்.


தொடர்ந்து, இத்திட்டம் செயல்படுத்திய நிறுவனங்களின் தளங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட போது, அங்கிருந்த பல ஒப்பந்ததாரர்களிடமும், பயனாளிகளிடம் பேசப்பட்டது. 
அப்போது, ஒவ்வொரு ஒப்பந்தத்திலும், குறைந்தது இரண்டு ஏலதாரர்கள் இருக்க வேண்டும் என்று விதிமுறைகள் குறிப்பிடுகின்றன.

ஆனால், அப்போது யாரும் டெண்டர் எடுக்கவில்லையெனில், அடுத்த மறுடெண்டரில் ஒருவர் இருந்தாலே போதுமானது ஆகும். இதைப் பயன்படுத்தித் தான், டெண்டர்கள் பதவியில் இருப்பவர்களின் நெருங்கிய வட்டாரத்திற்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

டெண்டர் எடுக்கும் எளிய வழிகள்


குறிப்பிட்ட நபருக்கு டெண்டர் கொடுக்க வேண்டும் என முடிவு செய்தால், முதல் ஏலத்தின்போது, யாரும் எடுக்கமாட்டார்களாம். எனவே, எளிதாக மறு டெண்டரில் பிடித்தமான நபருக்கு ஏலம் கிடைத்துவிடும் என மூன்று மாவட்டங்களில் ஏலம் எடுத்த ஒப்பந்தக்காரர் கூறுகிறார்.
மற்றொரு முறையானது, ஏலம் எடுக்க வருகையில்  விருப்பமான நபருடன், டம்மியான நிறுவனத்தை கொண்ட நபர், அழைத்துவரப்படுவார். அவருக்கு பணம் அல்லது அடுத்த ஏலம் தருவதாக கூறிவிட்டு, விருப்பமான நபருக்கே ஏலம் கிடைத்துவிடும் என பாகல்பூரைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் ஒருவர் கூறுகிறார்.

தரவுகள் சொல்வது என்ன?


2019-20 ஆம் ஆண்டின் தரப்பை பார்த்ததில், குடிநீர் திட்டத்தின் கீழ் கதிஹார் மாவட்டத்தில் PHED ஒதுக்கிய 36 திட்டங்களும், துணை முதலமைச்சர் பிரசாத் மருமகள் பூஜா குமாரி நிறுவனத்திற்கும், அவரது உறவினர் பிரதீப் குமார் பாகத்துக்கும் கிடைத்துள்ளன.
மேலும், அவரது நெருங்கிய உதவியாளர்களான பிரசாந்த் சந்திர ஜெய்ஸ்வால், லலித் கிஷோர் பிரசாத் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோருக்கும் டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளன.


கதிஹாரில் உள்ள பவாடா பஞ்சாயத்தின் 13 வார்டுகளிலும் குமாரி மற்றும் பகத்தின் நிறுவனத்திற்கு பணி வழங்கப்பட்டதாகப் பதிவுகள் காட்டுகின்றன. மேலும், குமாரி மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து திட்டங்களின் தளங்களில் உள்ள உள்ளூர் ஊழியர்களிடம் விசாரித்ததில், பெயர் குறிப்பிடக்கூடாது என நிபந்தனையுடன் அவர்கள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்தத் தளங்களில் நடைபெற்ற பணிகளில், குமாரிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்தனர்.

துணை முதலமைச்சர் சொல்வது என்ன?


இதுகுறித்து துணை முதலமைச்சர் பிரசாத்திடம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பாகத் தொடர்புகொண்டு கேள்வி எழுப்பிய போது, இந்த ஒப்பந்தங்களை வழங்குவதில் எந்த அரசியல் ஆதரவும் இல்லை என்று மறுத்தார். 
இந்த திட்டத்தின் டெண்டர் வழங்கப்பட்ட போது, கதிஹாரில் எம்எல்ஏ-வாக நான் தான் இருந்தேன். 2020இல் தான், துணை முதலமைச்சர் ஆனேன். எனது மருமகளுக்கு நான்கு வார்டுகளுக்கான ஒப்பந்தங்கள கிடைத்ததை அறிவேன்.

ஆனால், எனது உறவினர் பாகத் இயக்குநராக இருக்கும் நிறுவனத்துக்குக் கிடைத்த டெண்டருக்கும், மற்றொரு நிறுவனத்திற்குக் கிடைத்த டெண்டருக்கும் எவ்வித நேரடி தொடர்பும் எனக்கு கிடையாது எனக் கூறினார்.

எந்தெந்த நிறுவனங்களுக்கு எவ்வளவு ஒப்பந்தம்

நமக்கு கிடைத்த தரவுகளின்படி,  பீகார் துணை முதலமைச்சர் மருமகள் பூஜா குமாரி இயக்குநராக உள்ள நிறுவனத்திற்கு கதிஹார் பவாடா பஞ்சாயத்தில் 4 வார்டுகளை PHED ஒதுக்கியுள்ளது. அதன் மதிப்பு  1.6 கோடி ஆகும்.


இரண்டாவதாக, பிரசாத்தின் உறவினரான பிரதீப் குமார் பகத் மற்றும் அவரது மனைவி கிரண் பகத் இயக்குநராக உள்ள தீப்கிரண் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு பவாடா பஞ்சாயத்தில்  9 வார்டுகளை PHED ஒதுக்கியுள்ளது. அதன் மதிப்பு  3.6 கோடி ஆகும்.

 ஜீவன்ஸ்ரீ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் புராஜக்ட் சைட்


மூன்றவதாக, துணை முதல்வர் பிரசாத்தின் நெருங்கிய நபர்கள், பிரசாந்த் சந்திர ஜெய்ஸ்வால், லலித் கிஷோர் பிரசாத் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோர் இயக்குநர்களாக உள்ள  ஜீவன்ஸ்ரீ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு கதிஹாரில் 8 பஞ்சாயத்துகளில் 110 வார்டுகளை PHED ஒதுக்கியுள்ளது. அதன் மதிப்பு 48 கோடி ஆகும்.


பூஜா குமாரி மற்றும் தீப்கிரண் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் போன்ற பல திட்ட தளங்களின் பணிகளைத் துணை முதல்வர் பிரசாத்தின் மருமகன் பகத் நிர்வகிப்பதாக உள்ளூர் ஆப்ரேட்டர்கள் கூறுகின்றனர்.

மக்கள் முன்வர வேண்டும்


பிகார் பிஎச்இடி அமைச்சரும் பாஜக தலைவருமான ராம் ப்ரித் பாஸ்வானை, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் தொடர்பு கொண்ட போது,”இத்தகைய புகார்களைக் குறித்து கேள்விபட்டியிருக்கேன். ஆனால், துணை முதல்வரின் குடும்பம் மற்றும் நெருங்கிய நபர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்களைப் பற்றி அறியவில்லை.

இது குறித்து புகாரளிக்க மக்கள் முன் வர வேண்டும். அரசியல் செல்வாக்கு கொண்ட நபர்களுக்கு விருப்பத்தின் பேரில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கணிசமான ஆதாரம் இருக்கும் பட்சத்தில், ஒப்பந்தக்காரர்கள் எங்களிடம் புகார் செய்யலாம். நான் PHED அமைச்சராக வருவதற்கு முன்பு அனைத்து ஒப்பந்தங்களும் வழங்கப்பட்டன. சில பொறியாளர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குவதாகவும் புகார்கள் வந்ததை அறிவேன்” என்றார்.


PHED செயலாளர் ஜிதேந்திர ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ” டெண்டர் மற்றும் ஏலத்தில் ஒரு நிலையான செயல்முறை உள்ளது. குறைந்த தொகையை முன்வைக்கும் நிறுவனத்திற்கே ஏலம் விடப்படும். 
இதுவரை அரசியல் நோக்கத்துடன் டெண்டர் விடப்பட்டுள்ளதாகப் புகார்கள் என்னிடம் வரவில்லை. முதன்முறையாக கேள்விப்படுகிறேன்.ஒப்பந்தங்களை வழங்குவதில் முறைகேடு நடந்திருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கலாம்” என்றார்.


கதிஹாரில் முன்னாள் PHED நிர்வாக பொறியாளரான ஷங்கர், இப்போது ஆராரியாவில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அவரிடம் பேசுகையில், “பூஜா குமாரி, தீப்கிரண் நிறுவனம், ஜீவன்ஸ்ரீ நிறுவனம் ஆகியவற்றுக்கு 2019-20ல் எனது பதவிக் காலத்தில், ஏல முறையின் மூலம் தகுதி பெற்ற பிறகு அதற்கான பணி வழங்கப்பட்டது” என கூறுகிறார்.
இவ்விவகாரம் குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய ஆய்வின் தகவல்களை அறிய எங்கள் தளத்துடன் இணைந்திருங்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Bihar tap drinking water contract scam