ஒமிக்ரான் மாறுபாடு ஓரிரு வாரங்களிலே அதன் கோர தாண்டவத்தை ஆரம்பித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு முன்னரே ஐரோப்பா நாடுகளில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்தாலும், அதன் தீவிரத்தன்மையை இன்னும் கண்டறிய முடியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஹூஸ்டன் மெதடிஸ்ட் மருத்துவமனையின் டாக்டர் வெஸ்லி லாங் கூறுகையில், "ஒமிக்ரான் மாறுபாட்டின் பரவல் வேகம், மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய டெல்டாவை விஞ்சியுள்ளதால், சுகாதாரத் துறையினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மூன்று வாரங்களில், ஹூஸ்டன் மெதடிஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சைபெறுவாரில் 80 விழுக்காடு ஒமிக்ரான் பாதிப்பாகும். டெல்டா இந்த நிலையை அடைய மூன்று மாதங்கள் ஆனது.
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி நிலையில், ஒமிக்ரான் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் அலையின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. இன்னும் பல கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை. ஒமிக்ரான் தொற்று குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களை இச்செய்திதொகுப்பில் காணலாம்.
தடுப்பூசிகள் பாதுகாப்பு தருகிறதா?
உலகெங்கிலும் உள்ள அனைத்து தடுப்பூசிகளின் செயல்திறன், கொரோனாவின் முந்தைய மாறுபாடுகளுக்கு எதிராக செயல்பட்டது போல், ஒமிக்ரானுக்கு எதிராக செயல்படவில்லை. ஆனால், பரிசோதனையில் இரண்டு டோஸ் தடுப்பூசியில் போதுமான பாதுகாப்பு இல்லையென்றாலும், ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ் ஒமிக்ரானை எதிர்ப்பதாக கண்டறிந்துள்ளனர்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு காலப்போக்கில் குறைகிறது. அதனை மீட்டெடுக்க பூஸ்டர் டோஸ் தேவைப்படுகிறது. ஃபைசரின் பூஸ்டர் டோஸ் 25 விழுக்காடு பாதுகாப்பு அளிக்கிறது. மாடர்னாவின் பூஸ்டர் டோஸ் 37 விழுக்காடு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. அதேசமயம், பூஸ்டர் தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி எத்தனை நாள்களுக்கு இருக்கும் என்பது தெரியவில்லை.
ஆய்வின்படி, பூஸ்டர் டோஸ் செலுத்திய பிறகு, உடலில் தோன்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கணக்கிட்டால், அவை டெல்டாவை காட்டிலும் ஒமிக்ரானுக்கு எதிராக 20 விழுக்காடு குறைவாகவே உள்ளது. எவ்வாறாயினும், தடுப்பூசி செலுத்தியவர்களிடம் கூடுதல் பாதுகாப்பு இருக்கும். கடுமையான நோய் பாதிப்பு, மருத்துவமனையில் அனுமதித்தல், இறப்பு ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாப்பது குறிப்பிடத்தக்கது.
தொற்றிலிருந்து மீண்டவர்களை ஒமிக்ரான் பாதிக்குமா?
தென் ஆப்பிரிக்காவில், டெல்டா உட்பட முந்தைய இரண்டு மாறுபாடுகளில் காணாத அளவு, கொரோனாவால் மீண்டவர்களுக்கு மீண்டும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரிட்டனின் லண்டன் இம்பீரியல் கல்லூரி அறிக்கையில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து முந்தைய டெல்டா மாறுபாட்டுடன் ஒப்பிடும்போது ஐந்து மடங்கு அதிகமாக இருப்பதை கண்டறிந்துள்ளது. எனவே, கொரோனாவிலிருந்து மீண்டவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஒமிக்ரான் ஏன் இவ்வளவு வேகமாக பரவுகிறது?
ஒமிக்ரானில் உள்ள டஜன் கணக்கான பிறழ்வுகளை சோதிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர். ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்திய கூற்றுப்படி, டெல்டாவை விட ஒமிக்ரான் காற்றுப்பாதையில் வேகமாகப் பெருகுகிறது. ஆனால், அவை நுரையீரலில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ஒமிக்ரான் லேசான நோயை ஏற்படுத்துகிறதா?
தற்போது தடுப்பூசிகள் பலருக்கு செலுத்தப்பட்டுள்ளதால், ஒமிக்ரானின் தீவிரத்தன்மையை துல்லியமாக கண்டறியமுடியவில்லை. தடுப்பூசி போடாதவர்களிடம் ஒமிக்ரான் பாதிப்பு எப்படி இருக்கிறது என்பது பகுப்பாய்வு செய்யப்படுகிறது.
தென் ஆப்பிரிக்கா நிபுணர்களின் ஆரம்பகால தகவலின்படி, ஒமிக்ரான் லேசான தீவிரத்தன்மையை கொண்டது. இருப்பினும், மருத்துவர்களால் கணிக்கமுடியவில்லை. ஏனென்றால், பெரும்பாலானோர் இளம் வயதினர் மற்றும் கொரோனாவிலிருந்து மீண்டு வந்தவர்கள் ஆவர்.
இங்கிலாந்து ஆய்வுபடி, ஒமிக்ரான் மாறுபாடு டெல்டாவை காட்டிலும் தீவிரத்தன்மை குறைவானது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இளம் வயதினருக்கு வேண்டுமானலால் லேசான பாதிப்பு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு ஆபத்து
மற்று மாறுபாடுகளின் செயல்பாடுகளை ஆராய்ந்தால், வயதானோர், வேறு நோய் பாதிப்பு இருந்தால், பருமனாக இருந்தால் உங்களுக்கு நோய் பாதிப்பு கடுமையாக இருக்க வாய்ப்புள்ளது. இது மற்ற வகைகளை விட வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்கவில்லை.
தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் தவிர மாஸ்க் அணிவது, கூட்டத்தை தவிர்ப்பது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது போன்ற அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என எமோரி பல்கலைக்கழகத்தின் டாக்டர் கார்லோஸ் டெல் ரியோ கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.