கொரோனாவின் (SARS-CoV2) ஒமிக்ரான் (Omicron) மாறுபாடு ஒரு பெரிய அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது, இதனையடுத்து உலக சுகாதார அமைப்பு (WHO) ஞாயிற்றுக்கிழமை உலகளாவிய அபாயத்தை "மிக அதிகமாக" மதிப்பிட்டுள்ளது. ஓமிக்ரான் அதிக பரவும் தன்மையைக் கொண்டிருக்கக்கூடும் என்றும், முந்தைய நோய்த்தொற்று அல்லது தடுப்பூசிகள் மூலம் உருவாகும் நோயெதிர்ப்பு ஆற்றலைத் தவிர்க்கும் திறன் ஒமிக்ரானுக்கு அதிகம் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, இந்த மாறுபாட்டை சரியான நேரத்தில் கண்டறிவது அதன் பரவலைக் கட்டுப்படுத்த முக்கியமானது. WHO இந்த மாறுபாட்டைப் பற்றி ஒரு நேர்மறையான விஷயத்தைக் கூறியுள்ளது, அது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் சில RT-PCR கொரோனா கண்டறியும் சோதனைகள் மூலம் கண்டறியப்படலாம் என்பது. ஒமிக்ரான் கொரோனாவின் மற்ற வகைகளைப் போல், அதன் இருப்பை மரபணு வரிசைமுறைக்குப் பிறகு மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று இல்லாமல் RT-PCR சோதனைகளிலே கண்டறிய முடியும். இது விரைவாகக் கண்டறியவும் மற்றும் பரவலைக் கட்டுப்படுத்த உதவும்.
ஆனால் விஞ்ஞானிகள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், இது முழுமையானது அல்ல; இந்தியாவில் உள்ள பெரும்பாலான RT-PCR சோதனைகள் ஒமிக்ரான் மற்றும் பிற வகைகளை வேறுபடுத்திப் பார்க்க முடியாமல் போகலாம் என்றனர்.
ஓமிக்ரான் மாறுபாடு: RT-PCR இன் 'மிஸ்' எவ்வாறு உதவுகிறது
RT-PCR சோதனைகள் ஒரு நபருக்கு தொற்று உள்ளதா இல்லையா என்பதை மட்டுமே உறுதிப்படுத்த முடியும். எந்த குறிப்பிட்ட மாறுபாடு நபரை பாதித்துள்ளது என்பதை தீர்மானிக்க அவை வடிவமைக்கப்படவில்லை. அதற்கு, மரபணு வரிசை ஆய்வு செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட அனைத்து மாதிரிகளும் மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவதில்லை, ஏனெனில் இது ஒரு மெதுவான, சிக்கலான மற்றும் விலையுயர்ந்த செயல்முறையாகும். பொதுவாக, அனைத்து பாசிட்டிவ் மாதிரிகளின் மிகச் சிறிய துணைக்குழு மட்டுமே, அதாவது சுமார் 2 முதல் 5 சதவீதம் வரை மட்டுமே மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும்.
RT-PCR சோதனைகள் மனித உடலில் உள்ள வைரஸின் மரபணுப் பொருளில் (முழு மரபணு வரிசை அல்ல) சில குறிப்பிட்ட அடையாளங்காட்டிகள் இருப்பதைத் தேடுகின்றன. வழக்கமாக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடையாளங்காட்டிகள் பொருத்தத்தைக் கண்டறியும் நிகழ்தகவை அதிகரிக்கத் தேடப்படும். அடையாளங்காட்டிகளில் ஒன்று மாற்றமடைந்திருந்தால், மற்றொன்று பாசிட்டிவ் என்ற முடிவைத் தரலாம்.
பல RT-PCR சோதனைகள் கொரோனா வைரஸ் ஸ்பைக் புரதத்தில் ஒரு அடையாளங்காட்டியைத் தேடுகின்றன, இது வைரஸ் மனித உடலுக்குள் நுழைய அனுமதிக்கும் நீட்டிக்கப்பட்ட பகுதியாகும். ஓமிக்ரான் மாறுபாட்டைப் போலவே, ஸ்பைக் புரதத்திலும் பிறழ்வுகள் இருந்தால், இந்த பகுதியில் அடையாளங்காட்டிகளைத் தேடும் அத்தகைய RT-PCR சோதனைகள், பிறழ்வை அது தேடும் அடையாளங்காட்டியாக அங்கீகரிக்காது, இதனால் நெகட்டிவ் என்ற முடிவைக் கொடுக்கும்.
ஆனால் மேலே குறிப்பிட்டுள்ளபடி, RT-PCR சோதனைகள் ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்காட்டிகளைத் தேடுகின்றன. எனவே, சோதனையானது மற்ற பகுதியில் அடையாளங்காட்டியைக் கண்டறிந்தால் (அந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அர்த்தம்) ஆனால் ஸ்பைக் புரதத்தில் அடையாளங்காட்டியைக் கண்டறியவில்லை என்றால், நோய்த்தொற்று ஆனது ஓமிக்ரான் மாறுபாட்டுடன் உள்ளது என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
பிரச்சனை என்னவென்றால், ஸ்பைக் புரதத்தில் பிறழ்வுகளைக் கொண்ட ஒரே மாறுபாடு ஓமிக்ரான் அல்ல. இன்னும் சில உள்ளன, குறிப்பாக ஆல்பா மாறுபாடு, இந்த பகுதியில் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது, எனவே RT-PCR சோதனைகளில் இதேபோன்ற பண்புகளைக் காட்டலாம்.
ஆயினும்கூட, இத்தகைய முடிவு ஓமிக்ரான் மாறுபாட்டிற்கான கண்டறியும் செயல்முறையாகக் காணப்படுகிறது, ஏனெனில் இந்திய மக்கள்தொகையில் ஆல்பா மாறுபாட்டின் பரவல் கணிசமாகக் குறைந்துள்ளதால், இத்தகைய முடிவு ஒமிக்ரானாக இருக்கலாம். நோயறிதல் சோதனை கட்டத்தில் இத்தகைய கண்டறிதல் ஒமிக்ரான் மாறுபாட்டின் சாத்தியமான நோய்த்தொற்றுகளைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதில் முக்கியமானது.
உறுதிப்படுத்தலுக்கான மரபணு வரிசைமுறை
டெல்லியை தளமாகக் கொண்ட மரபணு மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் (IGIB) இயக்குனர் அனுராக் அகர்வால், அத்தகைய முடிவு ஓமிக்ரான் மாறுபாட்டின் இருப்பைக் குறிக்கும், மேலும் மரபணு வரிசைமுறை மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இருப்பினும் இது ஒரு முக்கிய தொடக்கமாகும் என்று விளக்கினார்.
தெர்மோ ஃபிஷர் சயின்டிஃபிக் உருவாக்கிய பரவலாகப் பயன்படுத்தப்படும் RT-PCR கருவிகளில் ஒன்று ஓமிக்ரான் மாறுபாட்டின் இருப்பைக் கண்டறிய முடியும் என்று WHO கூறியது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் சில கருவிகள் மாறுபாட்டைக் கண்டறியும் திறன் கொண்டவை. IGIB இன் விஞ்ஞானியான வினோத் ஸ்காரியா கூறியது போல், RT-PCR கருவியின் மாறுபாட்டைக் கண்டறியும் திறன், பயன்படுத்தப்படும் ப்ரைமர்களை (அடையாளங்காட்டிகளை எடுக்கும் இரசாயனங்கள்) சார்ந்துள்ளது.
“துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான கருவிகளுக்கான ப்ரைமர் விவரங்கள் பொதுவில் கிடைக்கவில்லை. எனவே, பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட கிட் இந்த மாறுபாட்டைக் கண்டறிய முடியுமா இல்லையா என்பதை கூற முடியாது, ”என்று வினோத் ஸ்காரியா கூறினார்.
ஒமிக்ரான் அல்லது வேறு ஏதேனும் மாறுபாட்டைக் கண்டறிவதற்கு நோயறிதல் சோதனைகள் எந்த அறிகுறியையும் காட்டவில்லை என்றால், பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைப் பொறுத்து 24 மற்றும் 96 மணிநேரங்களுக்கு இடையில் எடுக்கும் மரபணு வரிசைமுறை முடிவுகளுக்கு காத்திருக்க வேண்டும். ஆனால் அனைத்து மாதிரிகளும் வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்படாததால், ஓமிக்ரான் மாறுபாடு புழக்கத்தில் இருக்கக்கூடும். இதை எதிர்ப்பதற்கான ஒரு வழி, மரபணு வரிசைப்படுத்துவதற்காக அனுப்பப்படும் மாதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும்.
ICMR இன் தொற்றுநோயியல் துறையின் முன்னாள் தலைவர் ஆர்.ஆர்.கங்காகேத்கர், மரபணு வரிசைமுறைக்கு அனைத்து மாதிரிகளையும் அனுப்ப இயலாது என்பதால் ஒரு ஸ்மார்ட் உத்தியை உருவாக்க வேண்டும் என்றார். இந்தியாவில், டெல்டா மாறுபாடு தான் இன்னும் அதிகமாக உள்ளது என்றும், எனவே, தேவைப்படும் நேரங்களில், சோதனை ஆய்வகங்கள் ஸ்பைக் புரதப் பகுதியில் காணாமல் போன அடையாளங்காட்டியைக் கவனிக்க வேண்டும் என்றும், அவற்றை மரபணு வரிசைப்படுத்தலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.