scorecardresearch

உக்ரைன் போர்க் குற்றம்: ரஷ்ய அதிபர் புதினை விசாரணை செய்ய முடியுமா?

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டணை கொடுத்த பல நிகழ்வுகள் இருந்தாலும், அதற்கு பல ஆண்டுகள் ஆகும். கடந்த 20 ஆண்டுகளில், ஐசிசி வெறும் 10 நபர்களை மட்டுமே தண்டித்துள்ளது.

உக்ரைன் போர்க் குற்றம்: ரஷ்ய அதிபர் புதினை விசாரணை செய்ய முடியுமா?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீது வழக்குத் தொடர வேண்டும் என கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) இம்மாத தொடக்கத்தில் ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பில் நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியது.

உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலால், ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டது மட்டுமின்றி இதற்கு முன்பு ஏற்படாத அளவில் அகதிகளாக மக்கள் தஞ்சமடைய வழிவகுத்தது.

உக்ரைன் அதிபர் வோலோடோமிர் ஜெலென்ஸ்கி ஏபிசி செய்திக்கு அளித்த பேட்டியில், எங்கள் நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்த அனைவரும், அவர்களுக்கு உத்தரவு கொடுத்த அனைவரும், எங்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய அனைத்து வீரர்களும் போர் குற்றவாளிகள் என்றார்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் போது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாக அமெரிக்காவும் பல முறை வலியுறுத்தியுள்ளது.

வல்லுநர்கள் கூற்றுப்படி, குற்றச்சாட்டு தொடர்ச்சியாக அதிகரித்து வந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் தண்டனையை நிரூபிப்பது கடினமான ஒன்றாகும். ஐசிசி குற்றவாளிகளுக்கு தண்டணை கொடுத்த பல நிகழ்வுகள் இருந்தாலும், அதற்கு பல ஆண்டுகள் ஆகும். கடந்த 20 ஆண்டுகளில், ஐசிசி வெறும் 10 நபர்களை மட்டுமே தண்டித்துள்ளது.

போர்க்குற்றம் என்றால் என்ன?

40 உறுப்பு நாடுகளின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஐசிசியின் தலைமை வழக்கறிஞர் கரீம் கான் மார்ச் 2 அன்று உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து விசாரணையைத் தொடங்குவதாக அறிவித்தார்.

இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம், ஆக்கிரமிப்பு குற்றம் என ICC தெளிவான வரையறைகளை வகுத்துள்ளது. இவை ரோம் ஸ்டேட்யூட் எனப்படும் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வழிமுறைகளை பின்பற்றியே ஐசிசி செயல்படுகிறது.

அந்த வரையறையின்படி, பொதுமக்களை குறிவைப்பது, ஜெனிவா ஒப்பந்தங்களை மீறுவது, குறிப்பிட்ட மக்கள் இனத்தை குறிவைப்பது ஆகியவை போர்க்குற்றங்களாக கருதப்படுகின்றன.

கொலை, உடல் உறுப்புகளை சிதைத்தல், கொடூரமாக நடத்துதல், பணயக்கைதிகள், கற்பழிப்பு மற்றும் பாலியல் அடிமைத்தனம் ஆகியவையும் போர்க்குற்றங்களில் அடங்கும்

கண்ணிவெடி, ரசாயன ஆயுதம் என மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை பயன்படுத்துவதும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.

ஐசிசி செயல்படும் முறை என்ன?

நெதர்லாந்தில் உள்ள ஹேக் நகரை தளமாகக் கொண்ட ஐசிசி, தன்னிச்சையாக செயல்படுகிறது. அதில், முன்னரே கூறியதை போல் நான்கு முதன்மைக் குற்றங்களுக்காக தனிநபர்கள் மீது வழக்குத் தொடர முடியும்

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஐசிசியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை ஆகும். இருப்பினும், சில குறிப்பிடத்தக்க விதிவிலக்குகள் உள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் உட்பட சுமார் 31 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் அதை அங்கீகரிக்கவில்லை. 2014 ஆம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமித்தது தொடர்பான ஐசிசியின் தீர்ப்பிற்குப் பிறகு, 2016 ஆம் ஆண்டில் நீதிமன்றத்திலிருந்து ரஷ்யா வெளியேறியது.

ஐசிசி குறிப்பிட்ட தனிநபரை மட்டுமே விசாரிக்கும். முழு நாட்டையும் குற்றச்சாட்டி விசாரிக்காது. ஐசிசியின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட நாட்டிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு நபரும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம். ஐசிசி பொதுவாக உயர் பொறுப்பை வகிக்கும் அதிகாரிகள் மற்றும் தலைவர்களை விசாரிக்கும்.

உக்ரைன் போரை பொறுத்தவரை, நீதிமன்றம் கடந்த கால மற்றும் தற்போதைய குற்றச்சாட்டுகள் இரண்டையும் விசாரிக்கும். இதில், உக்ரைனிலிருந்து கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைத்தபோது புடின் உத்தரவிட்ட போர்க்குற்றங்களும் அடங்கும்.

போதுமான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில், ஐசிசி நீதிபதிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்கு கொண்டு வர கைது வாரண்ட் பிறப்பிப்பார்கள். அவர்கள் நீதிமன்றத்திற்கு வரவழைக்காமல் விசாரணை நடைபெறாது.

ரஷ்யா நீதிமன்றத்தில் உறுப்பினராக இல்லாததால், புதின் ஆஜராக வாய்ப்பில்லை. அவர் ரஷ்யப் படைகளால் ஒப்படைக்கப்பட வேண்டும் அல்லது ரஷ்யாவிற்கு வெளியே காவலில் வைக்கப்பட வேண்டும்.

ஒரு தேசிய அரசாங்கமோ அல்லது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலோ வழக்குகளை ஐ.சி.சி விசாரணைக்கு அனுப்பலாம். ஆனால், ரஷ்யா UNSC இன் நிரந்தர உறுப்பினராக இருப்பதால், அதற்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. அதனை பயன்படுத்தி, இந்த பரிந்துரை நடவடிக்கைகளை நிறுத்த முடியும்.

ரஷ்யாவின் எந்த நடவடிக்கை போர்க்குற்றங்களாக பார்க்கப்படுகின்றன?

ரஷ்யாவின் போர் விமானங்கள் நாடு முழுவதும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் மீதான தாக்குதலை “போர்க்குற்றம்” என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், ரஷ்யா உக்ரைனில் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்துகிறது என்று கூறினார். பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்துவதை, மனித உரிமை அமைப்புகள் நீண்டகாலமாக கண்டித்து வருகின்றன.

மரியுபோலில் மகப்பேறு மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அந்த இடிபாடுகளில் சிக்கி பொதுமக்கள், குழந்தைகள் என பலர் உயிரிழந்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Can putin be prosecuted for war crimes in ukraine