scorecardresearch

பூமியை தாக்கும் சூரிய புயல்: இணைய சேவை பாதிக்கப்படும் அபாயம்!

சூரியனில் நடைபெறும் தொடர் நிகழ்வில், ஒவ்வொரு 11 ஆண்டுக்கும் ஒருமுறை சூரியன் தனது செயல்பாட்டை குறைத்துக்கொள்வது வழக்கம்.

பூமியை தாக்கும் சூரிய புயல்: இணைய சேவை பாதிக்கப்படும் அபாயம்!

சூரிய புயலின் தாக்கம் இணைய சேவைக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுநோய், வெட்டுக்கிளி தாக்குதல் மற்றும் சிக்கடா படையெடுப்பு என வரிசையாக பல இன்னல்களை சந்திக்க நேர்ந்தது. இதையடுத்து ஏலியன்களே தாக்குதல் நடத்தினாலும் மனிதர்கள் தப்பித்துக்கொள்வார்கள் என மீம்ஸ் கிரியேட்டர்ஸ் நகைச்சுவையாக பதிவிட்டனர். ஆனால் இன்டெர்னெட் இல்லாமல் நம்மால் வாழ முடியுமா? நமது சூரியனுக்கு ‘இணையப் பேரழிவை’ ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த மாதம் ACM SIGCOMM 2021 மாநாட்டில் வழங்கப்பட்ட ஆய்வறிக்கையில் ஒரு சக்திவாய்ந்த சூரியப் புயல் இணையத்தை சீர்குலைக்கும், நீர்மூழ்கிக் கேபிள் மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை சேதப்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டது. அடுத்த பத்தாண்டுகளுக்குள் ஒரு தீவிரமான வானிலை நிகழ்வுக்கு 1.6 முதல் 2 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாக முந்தைய ஆய்வுகள் காட்டுகின்றன.

சூரிய புயல் என்றால் என்ன?

சூரியனில் இருந்து அதிக அளவில் காந்த துகள்கள் வெளியேறுவதே சூரிய காந்தப் புயல் என குறிப்பிடப்படுகிறது. வெளியேறும் இந்த காந்த துகள்கள் பூமியை நோக்கி பொழிகின்றன. இந்த துகள்கள் ஒரு மணி நேரத்திற்கு பல மில்லியன் கிமீ பயணம் செய்யும். இவை பூமியை அடைய சுமார் 13 மணிநேரம் முதல் ஐந்து நாட்கள் வரை ஆகலாம். பூமியின் வளிமண்டலம் இந்த துகள்களிலிருந்து மனிதர்களாகிய நம்மைப் பாதுகாக்கிறது. ஆனால் துகள்கள் நமது பூமியின் காந்தப்புலத்துடன் தொடர்பு கொண்டு மேற்பரப்பில் வலுவான மின்சாரத்தை தூண்டலாம். இது மனிதர்கள் உருவாக்கிய கட்டமைப்புகளை பாதிக்கலாம்.

முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட சூரியப் புயல் 1859ல் ஏற்பட்டது. சுமார் 17 மணி நேரத்தில் பூமியை அடைந்தது. இது டெலிகிராஃப் நெட்வொர்க்கை பாதித்தது மற்றும் பல ஆபரேட்டர்கள் மின்சார அதிர்வை சந்தித்தனர். 1921ல் ஏற்பட்ட ஒரு சூரியப் புயல் நியூயார்க் டெலிகிராஃப் மற்றும் ரயில் பாதை அமைப்புகளைப் பாதித்தது. கடந்த 1989-ம் ஆண்டில் கனடா நாட்டின் கியூபெக் மாகாணத்தில் அப்போது சூரியனில் ஏற்பட்ட புயல் காரணமாக கடும் மின்சார அதிர்வை ஏற்படுத்தியது. அதாவது சூரிய புயல் உருவானதால் அதில் இருந்து வெளிப்பட்ட சக்திவாய்ந்த காந்த புலமானது பூமியை கடந்து சென்றபோது மத்திய மற்றும் வடக்கு கனடா பகுதிகளின் வானில் 2 நாட்களுக்கு பிரகாசமான வெளிச்சம் தோன்றியது.

2013 ஆம் ஆண்டின் அறிக்கைப்படி 1859 ஆம் ஆண்டில் ஏற்பட்டதை போன்ற ஒரு சூரியப் புயல் தற்போது அமெரிக்காவைத் தாக்கியிருந்தால், சுமார் 20-40 மில்லியன் மக்கள் 1 முதல் 2 வருடங்களுக்கு மின்சாரம் இல்லாமல் இருக்க நேரிடும். மேலும் மொத்த பொருளாதாரச் செலவு 0.6-2.6 டிரில்லியன் டாலராக இருக்கும் என கூறியுள்ளது.

சூரியனின் செயல்பாடு

கடந்த மூன்று தசாப்தங்களில் சூரியன் குறைந்த செயல்பாட்டில் இருந்தபோது தொழில்நுட்பம் விரைவாக வளர்ச்சி அடைந்தது. நமது தற்போதைய உள்கட்டமைப்பு சக்திவாய்ந்த சூரியப் புயலைத் தாங்குமா என்பது குறித்து மிகக் குறைவான ஆய்வுகளே உள்ளன.

கலிபோர்னியா, இர்வின் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் உதவி பேராசிரியராக உள்ள ஆய்வாளர் சங்கீதா அப்து ஜோதி கூறுகையில், “சூரியனில் நடைபெறும் தொடர் நிகழ்வில், ஒவ்வொரு 11 ஆண்டுக்கும் ஒருமுறை சூரியன் தனது செயல்பாட்டை குறைத்துக்கொள்வது வழக்கம். இது நீண்ட 100 வருட சுழற்சியையும் கொண்டுள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களில் இணைய உள்கட்டமைப்பு வளர்ந்து கொண்டிருந்தபோது, ​​சூரியன் தனது செயல்பாட்டை குறைத்த காலம். மிக விரைவில், இந்த சுழற்சியில் அல்லது அடுத்த சுழற்சியில், நாம் 100 ஆண்டு சுழற்சியின் உச்சத்தை நோக்கி செல்கிறோம். எனவே நம் வாழ்நாளில் ஒரு சக்திவாய்ந்த சூரியப் புயலைக் காண வாய்ப்புள்ளது” என கூறியுள்ளார்.

இந்தியா vs இன்டெர்நெட்

சூரியனிலிருந்து வெளியாகும் அதிக சக்திவாய்ந்த காந்தப் புயல், பூமியின் மின்காந்த அலைகளில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார். நீண்ட நீர்மூழ்கிக் கேபிள்கள் அதிக அபாயங்களுக்கு ஆளாகக்கூடும் . நாட்டின் இணைப்பு எவ்வாறு பாதிக்கப்படும் என்பதைப் புரிந்துகொள்ள மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தியாவை இணைக்கும் பெரும்பாலான கேபிள்கள் பாதிக்கப்படாது என்பதைக் காட்டுகிறது. சில சர்வதேச இணைப்புகள் பாதிக்கப்படலாம் (இந்தியா to சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள் முதலியன). சீனாவைப் போலல்லாமல், இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, சென்னை போன்றவை அதிக தோல்வி சூழ்நிலையிலும் கூட இணைப்பை இழக்காது என கூறப்பட்டுள்ளது. .

மேலும் “அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது, ​​இந்தியா குறைவான பாதிப்புக்குள்ளாகும் என கணிக்கப்பட்டாலும் சூரிய புயல்களின் வலிமை மற்றும் சக்திவாய்ந்த தாக்கம் இந்தியாவை பாதிக்குமா என்பது பற்றி அதிகம் தெரியவில்லை. கீழ் அட்சரேகைகளில் உள்ள நாடுகள் மிகவும் குறைவான ஆபத்தில் உள்ளன. ஆனால் விளைவுகளை முழுமையாகப் புரிந்துகொள்ள நமக்கு அதிக ஆய்வுகள் தேவை. நான் ஒரு கணினி விஞ்ஞானி, என் மாதிரிகள் ஆசியா பாதுகாப்பானது என்பதைக் காட்டுகின்றன. ஆனால் தொடக்கநிலை எது என்பதை சொல்ல முடியவில்லை. வானியல் இயற்பியல், மின் பொறியியல் மற்றும் கடல் அம்சங்களைப் புரிந்துகொள்ளும் புதிய மாதிரிகள் எங்களுக்குத் தேவை, ”என்று ஆய்வாளர் சங்கீதா கூறியுள்ளார்.

இணைய சேவையை பாதுகாப்பது எப்படி?

சமீபத்திய ஆய்வில் அமெரிக்காவில் ஒரு நாள் இணைய சேவை பாதிக்கப்பட்டால் அது சுமார் 7 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்பட்டது. சூரிய புயல் தாக்கத்தின் போது மற்றும் அதற்குப் பிறகு இணைப்பு இழப்பைக் குறைக்க பணிநிறுத்தம் உத்தி உதவும் என ஆய்வறிக்கை கூறுகிறது. நாம் எப்படி மின்சாரத்தை அணைக்கிறோம் என்பதைப் போலவே, தற்காலிக இணைய சேவை நிறுத்தம் சூரிய புயல் நிகழ்வின் போது உபகரணங்களைப் பாதுகாக்கவும், சேவைகளின் தொடர்ச்சியை உறுதி செய்யவும் முடியும்.

“இதைச் செய்வதற்கு எங்களுக்கு இன்னும் முறையான நெறிமுறை தேவை. நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இரண்டும் சூரியப் புயலைக் கண்டறியும் ஆய்வுகளைக் மேற்கொண்டுள்ளன. எனவே நாம் சுமார் 13 மணிநேர எச்சரிக்கையைப் பெறலாம். மின் நிறுவனங்கள் மற்றும் இணைய சேவை வழங்குநர்களுக்கான நெறிமுறைகளை வடிவமைக்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் ஒன்றிணைய வேண்டும். மேலும், இன்றைய சுகாதார அமைப்பு மின்சாரம் மற்றும் இணையத்தை சார்ந்து இருக்கிறது. இதனால் மீண்டெழுவதற்கான உத்தி தேவை என விளக்கியுள்ளார்.

கொல்கத்தாவின் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் திபியேந்து நந்தி கூறுகையில், “கடலுக்கு அடியில் உள்ள ஃபைபர்-ஆப்டிக் கேபிள்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே இந்த ஆய்வில் முக்கியமாக கண்டறியப்பட்ட ஒன்று. தரை மட்டத்தில், சூரிய புயலால் தூண்டப்பட்ட புவி காந்த மாறுபாடுகள் மின்சாரத்தை நடத்தக்கூடிய நெட்வொர்க்குகளில் பெரிய நீரோட்டங்களைத் தூண்டலாம். இது தீங்கு விளைவிக்கும். ஃபைபர்-ஆப்டிக் இன்டர்நெட் கேபிள்கள் தாங்களே கடத்திகள் அல்ல என்றாலும், அத்தகைய நெட்வொர்க்குகளின் ஒரு பகுதியாக இருக்கும் மின்னணு கூறுகள் இன்னும் வலுவான சூரிய புயலால் பயனற்றதாகிவிடும் என்று ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் உள்ள ஐஐஎஸ்இஆர் கொல்கத்தா சூரிய புயல் பற்றிய கணிப்புகளை தெரிந்துகொள்ள தேவையான புரிதலை வளர்ப்பதில் ஈடுபட்டுள்ளது.

ஒரு பெரிய நூற்றாண்டில் ஒரு சில முறை மட்டுமே இத்தகைய பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தக்கூடிய சூரிய புயல் ஏற்படக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. எனினும் நமது நவீன சமுதாயத்திற்கு பெரிய அளவிலான சீர்குலைவை ஏற்படுத்தும் திறன் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு, இத்தகைய ஆய்வுகள் அவற்றின் தாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க உதவுகின்றன” என கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Can solar storm disrupt your internet connection