சிபிஎஸ்இ: 10, 12-ம் வகுப்புகள் இடையே மதிப்பெண் மாறுபாடு ஏன்?

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு: தேர்ச்சி விகிதத்தில் வியத்தகு முன்னேற்றம் இல்லை என்றாலும், அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

By: Updated: July 18, 2020, 07:54:08 AM

Sukrita Baruah 

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) 12 ,10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை சில நாட்களுக்கு முன்  வெளியிட்டது. 18.73 லட்சம் +2 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில், 91.46 சதவிகித மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றனர். இது கடந்த ஆண்டை விட 0.36 சதம் கூடுதலாகும்.

இந்த ஆண்டின் பத்தாம் வகுப்பு முடிவுகள் பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகளிலிருந்து வேறுபடுகின்றன.

பத்தாம் வகுப்பில் மொத்தம் 18, 73,015 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 17, 13,121 மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.  இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 91.46 ஆகும். கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதத்தில் எந்தவித வியத்தகு முன்னேற்றம் இல்லை என்றாலும், அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையில் சரிவு எற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வுகள் பன்னிரெண்டாம் வகுப்பை விட குறைவான இடையூறுகளை எதிர்கொண்டன. கொரோனா பெருந்தொற்று காரணமாக  நிலவும் சூழலை முன்னிட்டு மார்ச் 19 முதல் சிபிஎஸ்இ தேர்வுகளை தள்ளிவைப்பதற்கு முன்பே, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கியத் தேர்வுகள் நடந்தேறிவிட்டது. நிலுவையில் இருந்த தேர்வுகளும் இறுதியில் ரத்து செய்யப்பட்டன.

இருப்பினும், 10 ஆம் வகுப்பு வடகிழக்கு டெல்லி மாணவர்களுக்கு மட்டும் சமூக அறிவியல், அறிவியல், இந்தி, ஆங்கிலம் போன்ற முக்கிய பாடத்திட்டங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அங்கு, கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பே,குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான கலவரங்கள் தேர்வுகளுக்கு இடையூறு விளைவித்தன.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

இதற்கிடையில், 12 வகுப்பு மாணவர்களின் இறுதித் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை மதிப்பீடு செய்யும் திட்டம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பயன்படுத்தப்படவில்லை. இந்த திட்டம் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற உதவி புரிந்தது.

இந்த மதிப்பீடு திட்டத்தின் கீழ், நான்கு தாள்களை எழுதிய மாணவர்களின் சிறந்த மூன்று தாள்களின் சராசரியையும், மூன்று மட்டுமே எழுதிய மாணவர்களுக்கு சிறந்த இரண்டு தாள்களின் சராசரியையும், இரண்டிற்கும் குறைவாக எழுதிய மாணவர்களுக்கு பிராக்டிகல் மற்றும் புராஜெக்ட் மதிப்பெண்களைப் பயன்படுத்துவதையும் இந்த திட்டம்  உள்ளடக்கியது

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 90% மற்றும் 95% க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைந்து காணப்படுகிறது. ஆனால், பன்னிரெண்டாம் வகுப்பில், இத்தகைய மதிப்பெண் வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதிகரித்து காணப்படுகிறது.

மாணவர்களை விட மாணவிகள் இந்த ஆண்டிலும் சிறந்து விளங்குகின்றனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 93.31% ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 90.14% ஆகவும் உள்ளன. தேர்வெழுதிய திருநங்கை மாணவர்களில்    (ஆண்பாலாகவும் இல்லாமல் பெண்பாலாகவும் இல்லாமல் மூன்றாம் பாலினமாக இருப்பவர்கள்) மொத்தம் 78.95%  தேர்ச்சி பெற்றனர்.


தனியார் பள்ளிகள் அளவுக்கு இல்லையென்றாலும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள், மாநில அரசுப் பள்ளிகள் இந்த ஆண்டு தங்கள் செயல்திறனை கணிசமாக உயர்த்தியுள்ளன. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 80.91% ஆக உள்ளது. கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் 71.91 சதவீதமாகும். கேந்திரிய வித்யாலயா,  ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளின் தேர்ச்சி விகிதங்கள்  முறையே 99.23%, 98.66% முறையே உள்ளது.

பத்தாம் வகுப்புத் தேர்வில், அனைத்து பிராந்தியங்களிலும் 99.28% தேர்ச்சி சதவீதத்துடன் திருவனந்தபுரம் சிறப்பாக முதலிடத்திலும், சென்னை மண்டலம் 98.95% தேர்ச்சி வீதத்துடன் இரண்டாவது இடத்திலும், பெங்களூரு 98.23% தேர்ச்சி வீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில், 97.67 சதம் தேர்ச்சி விகிதத்துடன் திருவனந்தபுரம் பிராந்தியம் முதல் இடத்தையும், 97.05 சதத்துடன் பெங்களூரு இரண்டாம் இடத்தையும், 96.17 தேர்ச்சி விகிதத்துடன் சென்னை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

சிபிஎஸ்சி, தேர்வு முடிவுகளில், “தேர்ச்சி அடையவில்லை” என்ற சொற்றொடரை நீக்கி விட்டு “திரும்பவும் எழுதுவது அவசியம்” என்ற சொற்றொடரை சேர்க்கத் தீர்மானித்துள்ளது. எனவே சிபிஎஸ்சி மாணவர்களுக்கு அளிக்கும் ஆவணங்களிலும், அதன் இணையதளத்திலும், “தேர்ச்சி அடையவில்லை” என்ற சொற்றொடர் இனி இடம் பெறாது என்று சிபிஎஸ்இ வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Cbse class x and class xii results cbse board exam 2020

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X