சிபிஎஸ்இ தேர்வுக் கட்டண உயர்வு: ஏன்? எதற்கு? எப்படி?

தில்லி அரசாங்கம் தனது சொந்த வாரியத்தை அமைக்கப் போவதாக சிபிஎஸ்இ- யை அச்சுறுத்தியுள்ளது.கட்டணத்தை அதிகரிப்பதற்கான முடிவு "தன்னிச்சையானது....

இந்த மாத தொடக்கத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அதனுடன் சார்புடைய அனைத்து பள்ளிகளின் தலைவர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், 2020 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வாரியத் தேர்வுகளுக்குத் தோன்றும் அனைத்து  மாணவர்களின் தேர்வுக் கட்டணம் இரட்டிப்பாக்கியிருந்தது.

குறிப்பாக, டெல்லி அரசு பள்ளிகளில்  பத்தாம் வகுப்பு படிக்கும்  மாணவர்களுக்கு, இந்த அறிக்கை இன்னும் மோசமாகவே இருந்தது. உதரணமாக, டெல்லி  எஸ்சி/எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு 3.2 மடங்காகவும், மீதமுள்ளவர்களுக்கு 4 மடங்காகவும் அதிகமானது. எனவே, இந்த நடவடிக்கைக்கு டெல்லி மற்றும் ஒடிசா மாநில அரசாங்கங்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன .

உயர்வு

கடந்த ஆண்டு வரை, அனைத்து மாநிலங்களிலும் பத்தாம்  மற்றும் பன்னிரெண்டாம் மாணவர்கள் ஐந்து பாடங்களுக்கு தேர்வுக் கட்டணமாக ரூ .750  மட்டுமே செலுத்த வேண்டும். மேலும், அவர்கள் கூடுதல் பாடப்பிரிவில் தோன்றினால்  கூடுதலாக ரூ .300 செலுத்த வேண்டும்.

டெல்லி அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்கு மட்டும் இதற்கு விதிவிலக்கு.இங்கே, பத்தாம் வகுப்பு வேட்பாளர்களுக்கு ரூ .375, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ .600.

மேலும்,  தில்லி அரசாங்கத்தோடு சிபிஎஸ்இ வாரியம் ஒரு சிறப்பு ஏற்பாடு செய்து, பத்தாம் வகுப்பு  எஸ்சி/எஸ்டி பிரிவு  ஒரு மாணவருக்கு ரூ .325 வாகவும், பன்னிரெண்டாம் வகுப்பு  எஸ்சி/எஸ்டி பிரிவு ஒரு மாணவருக்கு ரூ.550 வாகவும் நிர்ணயித்தது.  அதன்படி, தில்லியில் உள்ள எஸ்சி/எஸ்டி மாணவர்கள் தேர்வுக் கட்டணமாக  ரூ.ஐம்பது மட்டும் செலுத்தினால் போதும், மீதத் தொகையை தில்லி அரசாங்கம்  வாரியத்திற்கு செல்லுத்தி விடும்.

ஆனால் தற்போது வந்த சுற்றறிக்கையால், டெல்லி அரசுப் பள்ளிகளின் எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களுக்கு ரூ .1,200 ஆகவும் மற்ற மாணவர்களுக்கு ரூ .1,500 ஆகவும் உயர்ந்துள்ளது.

கட்டணத்தை ஏன் உயர்த்த வேண்டும்

2018 ஆம் ஆண்டில் உருவான நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சியால் தனக்கு வரும் பெரும் வருமானத்தை  சிபிஎஸ்இ  இழந்தது. அதை ஈடு செய்வதற்கே  மாணவர்களின் தேர்வு கட்டணத்தை உயர்த்திருக்கிறது.

அதிகாரி ஒருவர் கூறுகையில், “சிபிஎஸ்இ  தன்னுடைய சொந்த நிதியால் இயங்கும் அமைப்பு.  தனக்கான சொந்த வளங்களை தானே உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கென்று பட்ஜெட் ஒதுக்கீடு என்றும் எதுவும் இல்லை. நீட் தேர்வு, நெட் தேர்வு, ஜேஈஈ  போன்ற பொதுத் தேர்வுகளின் கட்டணங்கள் மூலம்தான் சிபிஎஸ்இ தனக்கான வருவாயை நிலை நிறுத்திக் கொண்டிருந்தது. ஆனால், புதிதாய் உருவாக்கிய என்.டி.ஏ-விற்கு  இவைகள் மாற்றப்பட்டதால், சிபிஎஸ்இ வாரியத்திற்கு இந்த ஆண்டு மட்டும்  ரூ. 200 கோடியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது”, என்று  தெரிவித்தார்.

கடைசியாக சிபிஎஸ்இ தனது தேர்வுக் கட்டணத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதிகரித்தது. அதிகாரிகளின் கருத்துப்படி, அதன் பின்னர் தேர்வுகளை நடத்துவதற்கான செலவுகளும் அதிகரித்து வருகின்றன என்றே சொல்லலாம். உதாரணாமாக, இந்த ஆண்டு தேர்வில் மட்டும், ஒரு லட்சம் புதிய மதிப்பீட்டாளர்கள் மற்றும் இன்விஜிலேட்டர்கள் கலந்து கொண்டனர்.  5,000 புதிய பார்வையாளர்கள் மற்றும் 5,000 புதிய கண்காணிப்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர். மதிப்பீட்டாளர்களின் மதிப்பூதியம்  33 சதவீதமாக அதிகரித்து, 2.5 லட்சம் மதிப்பீட்டாளர்கள்  நேருக்கு நேர் பயிற்சியளிக்கப் பட்டுள்ளனர். மேலும், 2018 ஆம் ஆண்டு போன்ற வினாத் தாள் சட்ட விரோதமாக வெளியாவதைத்  தடுக்க இந்த ஆண்டு பல தொழில்நுட்ப தலையீடுகளையும் வாரியம் அறிமுகப்படுத்தியது.

டெல்லியில் எதிர்ப்பு…

தில்லி அரசாங்கம் தனது சொந்த வாரியத்தை அமைக்கப் போவதாக சிபிஎஸ்இ- யை அச்சுறுத்தியுள்ளது. கட்டணத்தை அதிகரிப்பதற்கான முடிவு “தன்னிச்சையானது” என்றும், அரசாங்கத்தின் எதிர்ப்பைக் கருத்தில் கொள்ளாமல் எடுக்கப்பட்டது என்றும் தில்லி  அரசாங்கம் கூறியுள்ளது.

பல்வேறு மாநில அரசாங்கங்களால் நடத்தப்படும் பள்ளிகள் கிட்டத்தட்ட அனைத்தும் அந்தந்த மாநில கல்வி வாரியங்களைப் பின்பற்றுகின்றன. ஆனால் , தில்லி அரசாங்கத்தால்  நடத்தப்படும்  1,000 க்கும் மேற்பட்ட பள்ளிகள்  சிபிஎஸ்இ உடன் தான்  இணைக்கப்பட்டுள்ளன. ஆகையால், தில்லி அரசாங்கம் சிபிஎஸ்இயின் “மிகப்பெரிய பங்குதாரர்” என்ற பெயரில் , கட்டண உயர்வை எதிர்த்தது.

அதன் எதிர்ப்பைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ எஸ்சி / எஸ்டி மாணவர்கள் ரூ .50 மட்டுமே செலுத்தும் முந்தைய ஏற்பாட்டை தில்லி  அரசிடம் பேசி மீட்டெடுப்பதாக அறிவித்தது.  இருப்பினும், இதுவரை பள்ளிகளுக்கு இதுபோன்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

ஒடிசாவிலும் எதிர்ப்பு: 

இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “பொருளாதார மற்றும் சமூக  நலனுக்காக ஒடிசா அரசு கிராமப்புறங்களில் 200 க்கும் மேற்பட்ட  ஆங்கில நடுத்தர மாதிரி பள்ளிகளை சிபிஎஸ்இ உடன் இணைத்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த முடிவு அவர்களுக்கு கடுமையான கஷ்டத்தை ஏற்படுத்தும் ”என்று பட்நாயக் எழுதியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close