‘ஒரு தேசம், ஒரு தேர்தல்’ : பா.ஜ.க அரசின் திட்டம் நிறைவேறுமா ?

Elcetion commission : ஒரே நேரத்தில் வாக்கெடுப்புகளை மேற்கொள்வது செலவுகளைக் குறைக்கும் என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நவம்பர் 16 அன்று அகமதாபாத்தில் சர்ச்சைக்குரிய 'ஒரு தேசம், ஒரு தேர்தல்' யோசனை குறித்து பேசினார்.

By: November 24, 2019, 9:38:32 AM

ஒரே நேரத்தில் வாக்கெடுப்புகளை மேற்கொள்வது செலவுகளைக் குறைக்கும் என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நவம்பர் 16 அன்று அகமதாபாத்தில் சர்ச்சைக்குரிய ‘ஒரு தேசம், ஒரு தேர்தல்’ யோசனை குறித்து பேசினார்.

தேர்தல் ஆணையம் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தப் படுவதை விரும்பினாலும் அது விரைவில் நடக்க வாய்ப்பு இல்லை என்பதையும் கோடிட்டு காட்டினார். ஒரே நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்ற தேர்தல் நடத்துவதையே நாங்கள் விரும்புகிறோம். மத்திய அரசின் இந்த ஆசையை நாங்கள் கொள்கை அடிப்படையில் ஒப்புக் கொண்டாலும் இது குறித்து அரசியல் கட்சிகள் கூட்டாக அமர்ந்து ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். சில சட்டத் திருத்தங்களையும் செய்ய வேண்டும். அல்லது இதை பற்றிய விவாதங்களை தான் தொடர முடியும். வேகமாக நடைமுறைப் படுத்த முடியாது, என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

‘ஒரு நாடு, ஒரு தேர்தல்’ என்பது பிரதமர் நரேந்திர மோடியின் யோசனையாகும். அவர் பலமுறை இந்த யோசனையை சொல்லி இருக்கிறார். கடந்த முறை பிரதமரான போது அவர் செய்த முயற்சி வெற்றி பெற வில்லை. ஆனாலும் தற்போது இரண்டாம் முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்ட பின்பு இந்த விவகாரத்தை ஆராய ஒரு குழுவை அமைப்பதாக அறிவித்தார்.

மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த முடியுமா? இது குறித்து பல்வேறு வாதங்கள் உள்ளன.
ஒரே நேரத்தில் வாக்கெடுப்புகளை மேற்கொள்வதன் மூலம் செலவுகளைக் கணிசமாக குறைக்கலாம். கடந்த பாராளுமன்றத் தேர்தல் இந்த வருடம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இந்த நேரத்தில் தான் ஆந்திரா, சிக்கிம் , ஒடிசா, அருணாச்சல் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்தன. கடந்த மாதம் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்தன. தற்போது வரும் நவம்பர் 30 முதல் ஜார்க்கண்டில் சட்டமன்றத் தேர்தல் நடை பெற உள்ளது. இது தவிர பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றம் மற்றும் மக்களவை இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன, அடுத்த ஆண்டு டெல்லி மற்றும் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் வாக்கெடுப்புகள் நடக்க வேண்டும் என வாதிடுபவர்கள் அப்போது தன் அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரியான அறிவிக்க முடியும் என்று தமது கருத்தை முன் வைக்கின்றனர். இருப்பினும், இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது இயலாத காரியம் என்றும் என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.

ஒரே நேரத்தில் அனைத்து தேர்தல்களும் நடந்தால் ஒரு தேர்தலில் இன்று பயன்படுத்தப் மக்களவை தேர்தலை விட இரண்டு மடங்கு அதிகமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் சரியான வாக்காளர்கள் தானா என்று சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை இயந்திரங்கள் தேவைப்படும். இவற்றை ஒரு சேர ஒருங்கிணைத்து செயல் படுத்துவதிலும் பெரும் சிக்கல்கள் உண்டு.

மேலும், ஒரே நேரத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்புகள் பிராந்திய கட்சிகளின் செலவில் கை வைக்கும் வாய்ப்புள்ளது. பிராந்திய கட்சிகளை விட அதிகம் செலவழிக்கும் வல்லமை படைத்த தேசிய கட்சிகள் பிராந்திய கட்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
மாநில சட்டமன்றங்களை விட்டு விடுங்கள், ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் மத்திய அரசு கூட வீழ்ச்சியடையக்கூடும். 1952 முதல் நடந்த 17 மக்களவை தேர்தல்களில் ஏழு அரசுகள் ஆட்சிக்காலம் முடியு முன்னரே கலைக்கப்பட்டன. இது நடந்தது 1971, 1980, 1984, 1991, 1998, 1999 மற்றும் 2004 ஆம் ஆண்டு தேர்தல்களில் தான்.

மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு கடந்த 1952 மற்றும் 1957 ஆம் ஆண்டுகளில் ஒன்றாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தல்களில் காங்கிரஸ் பெரு வெற்றி பெற்றது. பெரும் பலத்துடன் இருந்த காங்கிரஸ் 1959ம் அப்போது கேரளாவில் ஆட்சியில் இருந்த இ.எம் .எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சியை கலைக்க அரசியலமைப்பின் 356 வது பிரிவை பயன் படுத்தியது. சட்ட மன்ற தேர்தலில் கம்ம்யூனிஸ்ட் கட்சி வென்ற இரண்டே ஆண்டுகளில் இது நடந்தது.
1967 தேர்தலில் காங்கிரஸ் கடும் பின்னடைவை .சந்தித்தது. பீகார், உ.பி., ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்கம், ஒரிசா, தமிழகம் மற்றும் கேரளா ஆகிய பல மாநிலங்களில் காங்கிரஸ் குறைந்த இடங்களையே பெற முடிந்தது. இதன் விளைவாக, பாரதிய கிரந்தி தளம், எஸ்.எஸ்.பி, பி.எஸ்.பி, ஸ்வதந்திர கட்சி, ஜனசங்கம் மற்றும் காங்கிரசில இருந்து வெளியேறியவர்கள் அடங்கிய அணியை உள்ளடக்கிய சம்யுக்தா வித்யக் தள அரசுகள் ஆட்சிக்கு வந்தன.அடுத்தடுத்த நடந்த கட்சித்தாவல், உட்கட்சி பூசல் நிகழ்வுகளால் சில மாநிலங்களில் ஆட்சியிழப்பும் ஏற்பட்டது. இது பல மாநிலங்களில் குறிப்பிட்ட ஆண்டுகளில் வர வேண்டிய தேர்தலை தள்ளிப் போட்டது.
தற்போதைய நிலவரப்படி, ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்கள் மட்டுமே மக்களவையுடன் சேர்ந்து சட்டசபை தேர்தலையும் சந்திக்கின்றன. சமீபத்திய ஆண்டுகளில் தான் சட்டமன்றங்கள் தங்கள் பதவிக் காலங்களை சரியான நேரத்தில் நிறைவு செய்கின்றன, இதற்கு முக்கிய காரணம் 1985 ம் ஆண்டு கட்சித்தாவல் தடை சட்டம் அமல் படுத்தப் பட்டது மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் 356வது பிரிவைப் பயன் படுத்தி மாநில அரசுகளை கலைப்பதற்கு எதிராக வந்த உச்ச நீதி மன்ற தீர்ப்புகள் தான்.

கடந்த 1999 மே மாதம் நீதிபதி பி பி ஜீவன் ரெட்டி தலைமையிலான சட்ட ஆணையம் தனது 170 வது அறிக்கையில், “மக்களவை மற்றும் அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. 2003 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் இது குறித்து விவாதித்தார், ஆனாலும் எந்த விளைவுகளும் ஏற்பட வில்லை.
2010 ஆம் ஆண்டில், பாஜக தலைவர் எல். கே அத்வானி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பிறகு தனது வலைப்பதிவில் பிரதமரும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியம் ‘ஒரு தேசம், ஒரு தேர்தல்’ கொள்கைக்கு ஆதரவாக இருப்பதாக பதிவிட்டிருந்தார். ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு “மினி-பொதுத் தேர்தல்” நடப்பது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நல்லதல்ல என்றும் தனது ஆதங்கத்தை வெளியிட்டிருந்தார்.

2015 ஆம் ஆண்டில், ஈ எம் சுதர்சனா நாச்சியப்பன் தலைமையிலான சட்டம் மற்றும் நீதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, ‘ மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக் கூறு குறித்த தனது அறிக்கையை சமர்ப்பித்ததது.

மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தினால் அரசின் நிர்வாக செலவுகள் குறையும். அரசின் கொள்கை முடக்கம் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் பாதிப்பு” மற்றும் ” மனிதவளத்தின் மீதான சுமை” போன்றவை குறையும். என்று அந்த அறிக்கை மேலும் அரசுக்கு யோசனை கூறியிருந்தது. ஆனால் காங்கிரஸ் அரசு இந்த யோசனை நடை முறைக்கு மாறானது என்றும் இதை அமல் படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன என்று கூறி விட்டது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ‘ஒரு தேசம், ஒரு தேர்தல்’ என்ற கொள்கை ஜனநாயக விரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கருத்து தெரிவித்த நிலையில் எதிர்க்கட்சிகளான சிபிஐ, சிபிஐ (எம்) மற்றும் என்சிபி கட்சிகளும் இது சாத்தியமில்லாத ஒன்று என்று எதிர்ப்பே காட்டின..இதற்கு முக்கிய காரணம் மாநில தலைவர்களின் தனித்துவத்தை தேசிய தலைவர்களை அழித்து விட முயலலாம் என்று பிராந்திய கட்சிகள் கருதியது தான் என்ற கருத்தும் உள்ளது.

பாஜகவைப் பொறுத்தவரை, பிரதமர் மோடியை முன்னிறுத்தி செய்யப் படும் பிரச்சாரமே சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறது. இதையே ஸ்வராஜ் இந்தியாவின் தலைவர் யோகேந்திர யாதவ் “ஒரு தேசம், ஒரு தேர்தல், ஒரு கட்சி, ஒரு தலைவர்” என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Cec say simultaneous ls and assembly polls wont happen soon

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X