/tamil-ie/media/media_files/uploads/2019/07/film-certification..-2.jpg)
Central Board of Film Certification (CBFC), CBFC, censor board, சினிமா சான்றிதழ், I&B Ministry
தீப்தி நாக்பால், மையுரா ஜன்வால்கர்
திரைப்படங்களுக்கு யு, யு/ஏ, ஏ அல்லது எஸ் என்ற வகைகளில் தணிக்கை சான்றிதழ் அளிக்கப்படுகின்றன. சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கட்டுப்பாடு இல்லாமல் பொதுவில் பார்க்கக் கூடிய படங்களுக்கு (யு) சான்றிதழும், 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பெற்றொர்களின் வழிக்காட்டுதலுடன் பார்க்கக்கூடிய படங்களுக்கு (யு/ஏ) சான்றிதழும், வயது வந்தோர்கள் மட்டும் பார்க்கக் கூடிய படங்களுக்கு (ஏ) சான்றிதழும், அல்லது சில சிறப்புக் குழுவினர் மட்டும் பார்க்கிற படங்களுக்கு (எஸ்) சான்றிதழும் வழங்கப்படுகின்றன.
திரைப்படங்களுக்கான சான்றிதழ்கள், பரிசீலனைக் குழு உறுப்பினர்கள் பெரும்பான்மையாகவோ அல்லது அனைவருமாகவோ அளிக்கின்ற அறிக்கையின் அடிப்படையில், மண்டல அலுவலர் என்ன சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்.
இந்த மாத தொடக்கத்தில், மும்பை உயர் நீதிமன்றம், மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கத்தால் தயாரிக்கப்பட்ட சிடியகானா என்ற படத்துக்கு யு சான்றிதழ் வழங்க மறுத்ததற்காக தொடரப்பட்ட வழக்கில், பதிலளிக்குமாறு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்துக்கு உத்தரவிட்டது. அந்த படத்துக்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த வழக்கில், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் சான்றிதழ் வழங்கும் வாரியம்தான் என்றும் தணிக்கை வாரியம் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அதனால், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் பங்கு எப்படி விவரிக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்ப்போம்.
மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் ஒரு தலைவரைக் கொண்டுள்ளது. இந்த வாரியம் 25 உறுப்பினர்கள் வரை உள்ளடக்கியது. மேலும், இந்தியா முழுக்க 60 ஆலோசனைக் குழு உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. இவர்கள் அனைவரும் இந்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்படுகின்றனர்.
வாரியத்தின் உறுப்பினர்கள் வழக்கமாக திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். வாரியத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் அடிக்கடி இந்த துறைக்கு வெளியே உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். வாரியத்தின் தலைவரும் வாரிய உறுப்பினர்களும் 3 ஆண்டுகள் பணியாற்றலாம். அதே போல, ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் 2 ஆண்டுகள் பணியாற்றலாம்.
இந்த வாரியத்தின் நிர்வாக செயல்பாடுகளுக்கு தலைமை நிர்வாக அலுவலர்தான் முதன்மை பொறுப்பு. ஆனால், மண்டல அலுவலர்கள் திரைப்படங்களுக்கு சான்றளிக்கிற பரிசீலனைக் குழு அலுவலர்களாக இருக்கிறார்கள்.
ஒரு திரைப்பட தயாரிப்பாளர் திரைப்பட சான்றிதழ் பெற விண்ணப்பித்தவுடன் மண்டல அதிகாரியால் ஒரு பரிசீலனைக் குழு அமைக்கப்படுகிறது. ஒருவேளை அது குறும்படமாக இருந்தால், அது ஆலோசனைக் குழு உறுப்பினர்களையும், ஒரு பரிசீலனைக் குழு அதிகாரியையும் கொண்டிருக்கும். அவர்களில் ஒரு பெண் அதிகாரி இருக்க வேண்டும். மற்றபடி, அதில் இரண்டு பெண் அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை குழு அதிகாரிகளும் பரிசீலனை அதிகாரிகளும் இருப்பார்கள்.
எப்படி சான்றளிக்கிறார்கள்?
தடையில்லாமல் பொதுவில் காட்சிப்படுத்தப்படும் படங்களுக்கு (யு) சான்றிதழும், 12 வயதுக்கு உட்பட சிறுவர்கள் பெற்றொர்களின் வழிகாட்டுதலுடன் பார்க்கக் கூடிய படங்களுக்கு (யு/ஏ) சான்றிதழும், வயது வந்தோர் மட்டும் பார்க்கக் கூடிய படங்களுக்கு (ஏ) சான்றிதழும் சிறப்பு குழுவினர்கள் பார்க்கிற படங்களுக்கு (எஸ்) சான்றிதழும் அளிக்கப்படுகின்றன. இந்த சான்றிதழ்கள், பரிசீலனைக் குழு உறுப்பினர்கள் பெரும்பான்மையாகவோ அல்லது அனைவரும் ஒருமித்த கருத்துடன் அளிக்கின்ற அறிக்கையின் அடிப்படையில், மண்டல அலுவலர் என்ன சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார். ஒருவேளை, உறுப்பினர்களிடையே வேறுபட்ட கருத்து நிலவினால், இந்த பிரச்னையின் இறுதி முடிவு வாரிய தலைவரிடம் சென்றுவிடும்.
சமீபத்திய வழக்கில், சிடியகானா படத்துக்கு யு/ஏ சான்று வழங்கப்பட்டதற்கு, படத்தில், கொலை, கொலை முயற்சி, குண்டர்கள், துப்பாக்கிகள், கெட்டவார்த்தைகள், பள்ளிக்கூட கேலி சம்பவம், சிறுவர்கள் செல்போனில் ஆபாச பாடல் விடீயோவை பார்த்தல், தாய் குழந்தையை அடித்தல், தற்கொலை முயற்சி, தந்தையின் பெயரை குழந்தை கிண்டல் செய்தல், ஒரு பெண்ணை பார்த்து கண் அடித்தல், மும்பையில் வட இந்தியர்களால் எதிர்கொள்ளப்படும் பாகுபாடுகள் உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றிருப்பது காரணமாகக் காட்டப்படுகிறது.
இதே போல, மற்ற சிறுவர் படங்களுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதற்கான முன்னுதாரணங்கள் உள்ளன. 2016 ஆம் ஆண்டில் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் தி ஜங்கில் புக் என்ற படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளித்தது. இது ருடியார்ட் கிப்ளிங்கின் புத்தகத்தை அடிப்படையாகக்கொண்ட ஹாலிவுட் படம். இது பெரிய அளவில் விமர்சனங்களை எதிர்கொண்டது.
சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு திருப்தி இல்லையெனில் என்ன செய்யலாம்?
இது போன்ற பெரும்பாலான வழக்குகளில், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களின் பட்டியலை அளிக்கிறது. சான்றிதழ் அளித்ததில் அல்லது மாற்றங்களின் பட்டியலில் விண்ணப்பதாரருக்கு திருப்தி இல்லையென்றால், அவர், வாரியத் தலைவர் மற்றும் வாரிய உறுப்பினர்கள் மற்றும் ஆலோசனைக் குழுவில் இருந்து 9 உறுப்பினர்கள் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தக் குழுவுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம். இந்த குழுவில், ஆலோசனைக் குழுவில் இருந்து ஏற்கெனவே இந்த படத்தைப் பார்த்த உறுப்பினர் இருக்க கூடாது. இந்த கட்டத்தில் இதேபோன்ற நடைமுறையே பின்பற்றப்படுகிறது. இதில் இறுதி முடிவு தலைவருடையதுதான்.
இதில் கடைசி கட்டம், சுதந்திர அமைப்பான தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்வது. தீர்ப்பாய உறுப்பினர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைச்சகத்தால் நியமிக்கப்படுவார்கள். இதிலும் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லலாம்.
பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் என்றால் என்ன?
ஒளிப்பதிவு சட்டம் 1952-ன் படி, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், ஒரு படத்தை பொதுவில் காட்சிப்படுத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கு முன்பு, அந்த படத்தில் அவசியமான மாற்றங்களை செய்ய நினைத்தால் சிலவற்றை நீக்கவும் அல்லது மாற்றம் செய்யவும் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு உத்தரவிடலாம். அல்லது, அந்த படத்தை பொதுவில் காட்சிப்படுத்துவதற்கு அனுமதி மறுக்கலாம்.
அறிவுசார் சொத்துரிமையில் வல்லுநர் மற்றும் நாயக் அண்ட் நாயக் நிறுவனருமான மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அமீத் நாயக் கூறுகையில், தணிக்கை காலம் எல்லாம் மலையேறிவிட்டதாகக் கூறுகிறார்.
“மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் என்பது சான்றிதழ் வாரியம்தான். இது தணிக்கை வாரியம் அல்ல. அவர்களுடைய வேலை, உரிய விரிவான வழிகாட்டுதல்களின்படி திரைப்படத்துக்கு சான்றிதழ் அளிப்பதுதான்.” என்று நாயக் கூறுகிறார்.
மேலும், இதில் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19 மற்றும் ஒளிப்பதிவு சட்டம் பிரிவு 5 பி-யும் ஒத்துப் போகின்றன என்று கூறிய நாயக், “காலப்போக்கில் சினிமா மாறிக்கொண்டே வருகிறது. இன்று நீங்கள் சினிமாவில் ஓரினச் சேர்க்கையைக் காட்டலாம். ஏனென்றால், அது வாழ்க்கையின் அம்சங்களைப் பிரதிபலிக்கிறது. உத்தா பஞ்சாப், பத்மாவத், ராஜ்கபூரின் சதியம் சிவம் சுந்தரம் போன்ற படங்களின் வழக்குகளில் நீதிமன்றங்கள் சட்ட முன்னுதாரணங்களை வகுத்துள்ளன” என்று கூறினார்.
ஒளிப்பதிவு சட்டம் பிரிவு 5(பி) என்ன சொல்கிறது?
ஒளிப்பதிவு சட்டம் பிரிவு 5(பி) கூறுகிறது... “ஒரு திரைப்படம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, அரசின் பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்பு உறவுகள், பொது ஒழுங்கு, ஒழுங்கீனம் அல்லது அவதூறு அல்லது நீதிமன்ற அவமதிப்பு ஆகியவற்றுக்கு எதிரானதாக இருந்தால் அதற்கு சான்றளிக்கப்படாது.” என்று குறிப்பிடுகிறது.
இந்த வழிகாட்டு நெறிமுறையைப் புரிந்துகொள்வது என்பது மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் உறுப்பினர்களுக்கு இடையே மாறுபடுகிறது. வாரியத்தின் உறுப்பினர்கள் பல்வேறு துறைகளிலிருந்து வருவதால் பரிசீலனைக் குழுவின் உறுப்பினர்கள் அடிக்கடி தனிப்பட்ட விருப்பங்களின் பேரில் சான்றிதழ் அளிப்பதை முடிவு செய்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.