முந்தைய ஒய்.எஸ்.ஆர்.சி.பி (YSRCP) ஆட்சியின் போது, திருமலையில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், ஆதாரம் அளிக்குமாறு சந்திரபாபு நாயுடுவுக்கு சவால் விடுத்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Chandrababu Naidu alleges animal fat in Lord’s laddu — here’s what goes into preparing Tirupati’s famous prasadam
குற்றச்சாட்டு மற்றும் பதில்
புதன்கிழமை (செப்டம்பர் 18) அமராவதியில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, "திருமலை லட்டு கூட தரமற்ற பொருட்களால் செய்யப்பட்டது... அவர்கள் நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பைப் பயன்படுத்தினார்கள்," என்று கூறினார். மேலும், தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இந்த செயல்முறையை சுத்தப்படுத்தி, லட்டுகளின் தரத்தை மேம்படுத்தியதாகவும் சந்திரபாபு நாயுடு கூறினார்.
ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி "தீங்கிழைக்கும்" இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்தது. திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலை நடத்தும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) முன்னாள் தலைவரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி மூத்த தலைவருமான ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறியதாவது: “அரசியல் ஆதாயங்களுக்காக சந்திரபாபு நாயுடு எந்த நிலைக்கும் செல்வார். லட்டுகளுக்கு பயன்படுத்தப்படும் நெய், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் நாட்டுப் பசுக்களின் பாலில் இருந்து பெறப்பட்ட உயர்தரமானது. அவரது கருத்துகள் தீங்கிழைக்கும் வகையில் உள்ளன.”
மற்றொரு முன்னாள் தேவஸ்தான தலைவரான பூமனா கருணாகர் ரெட்டியும் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். நெய் கொள்முதல் செய்வதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் முந்தைய சந்திரபாபு நாயுடு அரசு (2014-19) மற்றும் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சி (2019-24) ஆகிய இரண்டிலும் பணிபுரிந்துள்ளனர், மேலும் தரம் குறித்து எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை, என்று பூமனா கருணாகர் கூறினார்.
ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா, மரியாதைக்குரிய கோயிலின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார், மேலும் சந்திரபாபு நாயுடு தனது குற்றச்சாட்டுகள் உண்மையானது என்று நம்பினால் விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டார்.
திருப்பதி லட்டு பிரசாதத்தின் தனிசிறப்பு
வெங்கடேசப் பெருமானின் புகழ்பெற்ற பிரசாதம் இப்போது 300 ஆண்டுகளுக்கும் மேலானது; திருப்பதியில் உள்ள கோயில் 1715 ஆம் ஆண்டு இறைவனுக்கு லட்டு பிரசாதம் படைத்தது மற்றும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கத் தொடங்கியது.
பல நூற்றாண்டுகளாக இந்தப் பணியைச் செய்து வரும் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த லட்டு தயாரிப்பாளர்களால் போடு எனப்படும் சிறப்பு சமையலறையில் பிரசாதம் தயாரிக்கப்படுகிறது. லட்டு தயாரிப்பாளர்கள் தங்கள் தலையை மொட்டையடித்திருக்க வேண்டும், மேலும் அவர்கள் சமையலறையில் இருக்கும்போது சுத்தமான துணியை அணிய வேண்டும்.
ஒவ்வொரு தொகுதியின் முதல் லட்டு இறைவனுக்கு படைக்கப்படுகிறது, பின்னர் அது மீதமுள்ள லட்டுகளுடன் கலந்து பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
கோவிலில் இருந்து சாமி கும்பிட்டு வரும் போது அனைவருக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது, மேலும் பெரிய அளவிலான ஒரு லட்டு ரூ.50க்கு வாங்கலாம்.
2014 ஆம் ஆண்டில், காப்புரிமைகள், வர்த்தக முத்திரைகள் மற்றும் புவியியல் குறியீடுகள் பதிவாளர் திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு அந்தஸ்தை வழங்கினார். அதாவது திருப்பதி லட்டு என்று பெயரிட்டு யாரும் லட்டு விற்க முடியாது.
நெய் மற்றும் பிற பொருட்கள்
லட்டு தயாரிப்பில் ஈடுபடும் 10 பொருட்களில் தூய, நறுமணம் மிகுந்த, உயர்தர நெய் ஒன்றாகும். நெய் தவிர, கொண்டைக்கடலை மாவு, சர்க்கரை, சிறிய சர்க்கரை க்யூப்ஸ், முந்திரி, ஏலக்காய், கற்பூரம் மற்றும் திராட்சை ஆகியவை லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு நாளும் குறைந்தது 400-500 கிலோ நெய், 750 கிலோ முந்திரி, 500 கிலோ உலர் திராட்சை, 200 கிலோ ஏலக்காய் ஆகியவை லட்டுகள் மற்றும் இதர பிரசாதங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை லட்டுக்கான நெய்யை தேவஸ்தானம் கொள்முதல் செய்கிறது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் கிலோ நெய்யை கொள்முதல் செய்கிறது.
"ஆன்லைன் ஏல முறை மூலம் நெய் கொள்முதல் செய்யப்படுகிறது, இந்த ஏலத்தில் பல தூய நெய் உற்பத்தியாளர்கள் பங்கேற்கின்றனர். தேவஸ்தான நிர்வாக குழுக்கள் புதிய உற்பத்தியாளர்கள் அல்லது சப்ளையர்களை சந்தித்து தொழிற்சாலை மற்றும் வளாகத்தை சரிபார்த்து, சுகாதாரமான நிலையில் நெய் தயாரிக்கப்படுவதை உறுதி செய்கிறது. நெய்யின் தரம் மற்றும் புதிய பால் கிடைக்கும் இடத்தில் தொழிற்சாலை அமைந்துள்ளதா என்பதையும் அவர்கள் சரிபார்க்கிறார்கள்,” என்று ஒரு அதிகாரி ஆகஸ்ட் 2023 இல் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
இந்த அதிகாரியின் கூற்றுப்படி, நெய்யின் தரம் ஈரப்பதம், நறுமணம், கொழுப்பு அமிலங்கள், மினரல் ஆயில், கூடுதல் நிறங்கள், உருகும் நிலை மற்றும் கெட்டுப்போன தன்மை உள்ளிட்ட பல அளவுருக்கள் மூலம் சோதிக்கப்படுகிறது.
“இந்த அளவுருக்களில் ஏதேனும் ஒன்றில் நெய் தோல்வியுற்றால், அது நிராகரிக்கப்படுகிறது. ஜூலை 2022 முதல் ஜூலை 2023 வரை, தரத்தை பூர்த்தி செய்யத் தவறியதற்காக பல்வேறு சப்ளையர்களிடமிருந்து குறைந்தது 42 டிரக் நெய்யை தேவஸ்தானம் நிராகரித்தது,'' என்று அதிகாரி கூறினார்.
சமீபத்திய ஆண்டுகளில் ஆந்திராவிற்குள் நுழைந்த அமுல், நெய்யின் முக்கிய சப்ளையர்களில் ஒன்றாகும் என்று அந்த அதிகாரி கூறினார். கர்நாடக பால் கூட்டமைப்பால் விற்பனை செய்யப்படும் கர்நாடகாவின் புகழ்பெற்ற நந்தினி பிராண்ட் நெய் நிறுத்தப்பட்டது தொடர்பாக கடந்த ஆண்டு அரசியல் சர்ச்சை ஏற்பட்டது. கோயில் சமையலறைக்கு நெய் சப்ளை செய்யும் பல நிறுவனங்களில் நந்தினியும் ஒன்று என்பதாலும், 2014, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே ஏலம் எடுத்துள்ளதாலும், நந்தினி நெய் நிறுத்தப்பட்டதால், பிரசாதத்தின் சுவை பாதிக்கப்படாது என்று தேவஸ்தான அதிகாரிகள் உறுதியளித்தனர்.
சமையலறையில் கடுமையான தரக் கட்டுப்பாடுகள்
தேவஸ்தானத்தில் ஒரு அதிநவீன உணவுப் பரிசோதனை ஆய்வகம் உள்ளது, அது ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் ஒரு லட்டுவின் தரச் சோதனைகளை நடத்துகிறது. ஒவ்வொரு லட்டுவிலும் துல்லியமான அளவு முந்திரி, சர்க்கரை மற்றும் ஏலக்காய் இருக்க வேண்டும், மேலும் லட்டுவின் எடை 175 கிராம் இருக்க வேண்டும். (துல்லியமான அளவீடுகள் புவிசார் குறியீட்டிற்கும் தேவை.)
"எங்கள் அதிநவீன ஆய்வகத்தில் கடுமையான தரக்கட்டுப்பாட்டு சோதனைகளுக்குப் பிறகுதான் அனைத்து பொருட்களும் சமையலறைக்கு கொண்டு வரப்படுகின்றன. லட்டு தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற 600 சிறப்பு சமையல்காரர்கள் இரண்டு ஷிப்டுகளில் லட்டுகளை தயார் செய்கின்றனர். தினசரி சராசரியாக 3.5 லட்சம் லட்டுகள் வரையிலும், விசேஷ நாட்கள் அல்லது திருவிழா நாட்களில் 4 லட்சம் லட்டுகள் வரையிலும் நாங்கள் தயார் செய்கிறோம்,'' என்று தேவஸ்தான சமையலறை தலைவர் ஆர்.ஸ்ரீநிவாசுலு, கடந்த ஆண்டு தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்திருந்தார்.
"கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாக, சமையலறையில் விறகு பயன்படுத்தப்பட்டது, ஆனால் கடந்த சில தசாப்தங்களாக நாங்கள் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தத் தொடங்கினோம், இப்போது அது ஒரு முழுமையான நவீன சமையலறை. சமையல்காரர்களுக்கு அடிக்கடி கடுமையான உடல்நலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமையலறையின் ஒவ்வொரு அங்குலமும் சி.சி.டி.வி கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறது. மூன்று கன்வேயர் பெல்ட்கள் லட்டுகளை சமையலறையில் இருந்து விநியோகிக்க தேவையான இடங்களுக்கு நகர்த்துகின்றன,'' என்று ஸ்ரீநிவாசுலு கூறினார்.
லட்டு மாதிரிகள் பெரும்பாலும் ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்படுகின்றன. தேவஸ்தானம் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஹைதராபாத்தில் உள்ள தடுப்பு மருத்துவ நிறுவனத்தை ஆலோசனை செய்கிறது மற்றும் மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.