சென்னையில் அக்டோபர் 31-ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக இரண்டு பேர் உயிரிழந்தனர். சென்னை நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. வாகன போக்குவரத்து தடைபட்டது. இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 நாட்களுக்கு சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்று கணித்துள்ளது.
சென்னையில் எவ்வளவு மழை பெய்துள்ளது?
சென்னையில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 1) வரலாறு காணாத மழை பெய்துள்ளது; புதன்கிழமை (நவம்பர் 2) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 8 செ.மீ. பெய்துள்ளது.
சென்னையில் உள்ள மற்ற பகுதிகளில் சோழிங்கநல்லூர், எம்.ஜி.ஆர் நகர், நுங்கம்பாக்கம், அயனாவரம் ஆகிய இடங்களில் தலா 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 15 இடங்களில் மிக அதிக மழையும், 21 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ் பாலச்சந்திரன், “இன்று சென்னை நுங்கம்பாக்கம் நிலையத்தில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என்று தெரிவித்தார். இதற்கு முன்பு, 1990 இல் 13 செ.மீ மழையும், 1964 இல் 11 செ.மீ மழையும் ஒரே நாளில் சென்னை நகரில் பதிவாகியுள்ளது.
ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்வு
சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து, மெட்ரோ ரயிலுக்கு குடிநீர் வழங்கும் முதன்மை நீர்த்தேக்கங்களில், புதன்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் இருந்து 100 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
ஏரிகளுக்கு வரும் நீரின் அளவை பொருத்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அக்டோபர் 29-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையால், பூண்டி, சோழவரம், ரெட்ஹில்ஸ், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்த ஏரிகள் 11,757 டிஎம்சி அடி மொத்த கொள்ளளவு கொண்டது. இந்த ஏரிகளுக்கும் மொத்தமாக 3,826 கனஅடி நீர் வரத்தும் 6,986 டிஎம்சி அடி நீர் இருப்பு உள்ளது.
இந்த நேரத்தில் சென்னையில் மழை பொழிவு ஏற்படுமா? இது இயல்பான மழையா?
ஆமாம், இது சென்னையில் மழை பெய்யும் காலம்தான். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழையால் சென்னையில் பெரும்பாலும் மழை பெய்யும். அக்டோபர் நடுப்பகுதியில் இருந்து கிழக்கு திசை காற்று வீசுகிறது. வழக்கமாக அக்டோபர் 10 முதல் 20 வரை பருவமழை தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கியது.
'தமிழகத்தின் முதன்மை பருவமழை' என்று அழைக்கப்படும் வடகிழக்கு பருவமழை தான், மாநிலத்திற்கு போதுமான மழையை தருகிறது. இந்தியாவின் பிற மாநிலங்களில் பெரும்பாலானவை தென்மேற்கு பருவமழையை நம்பியிருக்கின்றன. தென்மேற்கு பருவ மழை மே மாதம் தொடங்கி செப்டம்பர் வரை பொழிகிறது. தென்மேற்குப் பருவமழை, நீண்ட கோடைகாலத்திற்குப் பிறகு, தமிழ்நாடு நிலத்தடி நீர்மட்டத்தை பராமரிக்க உதவுகிறது, அதே நேரத்தில் வடகிழக்கு பருவமழை நீர்மட்டத்தை உயர்த்துகிறது.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் ஆண்டு மழையில் 60% மழையும் உள் மாவட்டங்களில் 40-50% மழையும் வடகிழக்கு பருவமழையால் பெறப்படுகிறது.
முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாலச்சந்திரன் கூறியதாவது: “இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 19-ம் தேதி கடற்கரையை வந்தடைந்தது. முழு பருவத்திற்கும் நிறைய மாற்றங்கள் இருக்கும். இந்த மாதத்திற்கான முன்னறிவிப்பை செய்துள்ளோம்” என்று அவர் கூறினார். அக்டோபர் 1ம் தேதி முதல் மண்டல வானிலை ஆய்வு மையத்தில் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்றும் அவர் கூறினார். “இந்த நேரத்தில் சராசரியாக 28 செ.மீ. பதிவாகியுள்ளது. அதனால் -29% (பற்றாக்குறை) மழை பெய்துள்ளது” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வட தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அச்சத்துக்கு மழை காரணமா?
இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய பாலச்சந்திரன் கண்டிப்பாக அச்சப்படத் தேவை இல்லை என கூறினார். “அக்டோபர் முதல் டிசம்பர் வரை சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பருவமழை காலம் என்பதால் இந்த நேரத்தில் மழை பெய்யும் என்பது இயற்கையானது. தற்போது, அக்டோபர் 29-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 5 அல்லது 6-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.” என்று கூறினார்.
ஒவ்வொரு மாதமும் சுறுசுறுப்பான மற்றும் வறண்ட காலநிலை நிலவும். ஆனால், மழையின் தீவிரமும் வேறுபடுகிறது என்று பாலச்சந்திரன் கூறினார். “உதாரணமாக, செவ்வாய்கிழமை போல் இன்று புதன்கிழமை மழை பெய்யவில்லை. தீவிரம் மாறுபடும்” என்று கூறினர்.
இந்த ஆண்டு மழையை நவம்பர் 2021 உடன் ஒப்பிட முடியுமா என்று கேட்டபோது, “இது முதல் கட்ட மழை என்பதால் மழை அளவை ஒப்பிட முடியாது. இந்த மாதம் முழுவதும் பெய்த மழை தரவுகளுடன் மட்டுமே ஒப்பிட முடியும்.” என்று பாலச்சந்திரன் கூறினார்.
அரசின் மழைநீர் வடிகால் திட்டம் வெற்றி பெற்றதா?
2015 ஆம் ஆண்டு மற்றும் சென்னை கண்ட பல தீவிர வானிலை அமைப்புகளின்போது, பெரும்பாலும் தமிழக தலைநகரின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளே அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு, பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) மூலம் மழைநீர் வடிகால் (எஸ்டபிள்யூடி) திட்டம் தொடங்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக நகரில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஐந்து நாட்களாக சென்னையில் பெய்து வரும் மழையால், உழைக்கும் மக்கள் மற்றும் பல தொழில்கள் நிறைந்த நகரத்தின் நெரிசல் மிகுந்த பகுதியான வடசென்னை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, திட்டத்தைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்படும் பல பகுதிகள் மழைநீர் வடிகால் அடிப்படையில் குறிப்பிடத்தக்க வேறுபாட்டைக் கண்டன. கடந்த 24 மணி நேரத்தில் தி.நகர் ஜி.என்.செட்டி சாலை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குறைவாகவே உள்ளது. இருப்பினும், வடசென்னையின் பெரம்பூர் பேரக்ஸ் சாலை (இது 2021 இல் நீரில் மூழ்கியது) உள்ளிட்ட பகுதிகளில், விஷயங்கள் முன்னேறவில்லை.
இந்தியன் எக்ஸ்பிரஸ் புதன்கிழமை அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது, பெரம்பூர் பேரக்ஸ் சாலை மற்றும் பட்டாளம் பகுதிகள் கடும் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதை கவனித்தது. பெரம்பூர், புளியந்தோப்பு, பாந்தியன் லேன், வடபழனி, சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
தமிழக அரசு என்ன செய்துள்ளது?
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தாழ்வான பகுதிகள் மற்றும் கரையோரங்களில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல், சேதமடைந்த மற்றும் வலுவிழந்த சுவர்களை அகற்றுதல், நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுத்தல், பிற துறைகளை ஒருங்கிணைத்து தேவையான உதவிகளை துரிதப்படுத்துதல். மழைக்காலங்களில் மக்களுக்கு எந்தவித நோய் தாக்குதலும் ஏற்படாத வகையில் முகாம்கள் நடத்துதல், மழையின் போது ஏற்படும் மின்கசிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகளுக்கு ஸ்டாலின் வழங்கினார்.
அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை சென்னையில் 205.47 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். “மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்ததால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கவில்லை. கொளத்தூர் மற்றும் திரு.வி.க.நகர் பகுதிகளில் அதிக மழை பெய்து வருவதால், தண்ணீர் தேங்கியுள்ளது,” என அமைச்சர் கே.என். நேரு செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உயர் மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். கிரேட்டர் சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 15 சுரங்கப்பாதைகளில், கணேசபுரம், ரங்கராஜபுரம் மற்றும் மாணிக்கம் நகர் ஆகிய 3 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.