Advertisment

சீனாவில் கோவிட்-19 தொற்று அதிகரிப்பு… இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?

சீனாவின் ஷாங்காய் நகரத்தின் பாதி பகுதிக்கு பொதுமுடக்கம் விதித்துள்ளது. ஷாங்காயில் தொற்று எண்ணிக்கை எவ்வளவு? தொற்று பரவல் தடுப்பில் சீனாவின் தீவிர உத்தி தோல்வியடைந்ததா? சீனாவின் நிலைமை இந்தியாவுக்கு ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்துமா?

author-image
WebDesk
New Update
சீனாவில் கோவிட்-19 தொற்று அதிகரிப்பு… இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?

சீனாவின் சர்வதேச நிதி மற்றும் வர்த்தகத்திற்கான உலகளாவிய மையமான ஷாங்காய் நகரத்தின் பாதி பகுதிக்கு பொதுமுடக்கம் விதித்துள்ளது. ஷாங்காயில் தொற்று எண்ணிக்கை எவ்வளவு? தொற்று நோய் பரவல் தடுப்பில் அந்நாட்டின் தீவிர உத்தி தோல்வியடைந்ததா? சீனாவின் நிலைமை இந்தியாவுக்கு ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்துமா?

Advertisment

கோவிட் -19 தொற்றுநோய் முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான அந்நாட்டின் சமீபத்திய முயற்சியில், சீனா அதன் நிதி மூலதனம் மற்றும் சர்வதேச நிதி மற்றும் வர்த்தகத்திற்கான உலகளாவிய மையமான ஷாங்காய் நகரத்தின் பாதி அளவுக்கு கடுமையான பொதுமுடக்கம் விதித்துள்ளது. முழு நகரத்துக்கும் ஒரே நேரத்தில் பொதுமுடக்கம் விதிப்பது சரியாக இருக்காது என கருதப்படுவதால், பொதுமுடக்கம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திங்கட்கிழமை (மார்ச் 28) தொடங்கிய முதல் கட்ட பொதுமுடக்கத்தில், பரபரப்பான ஷாங்காய் பெருநகரத்தின் கிழக்குப் பகுதி ஐந்து நாட்களுக்கு முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்படுகின்றன. அதன் பிறகு, நகரத்தின் மற்ற பாதியும் இதேபோன்ற பொதுமுடக்கத்துக்கு உட்படுத்தப்பட உள்ளது. இந்த நேரத்தில், ஷாங்காய் நகரத்தில் வசிக்கும் 25 மில்லியன் மக்கள் அனைவரும் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஷாங்காயில் கோவிட்-19 தொற்று எண்ணிக்கை எவ்வளவு?

ஷாங்காயில் உள்ளூர் அதிகாரிகள் புதன்கிழமை (மார்ச் 30), 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 6,000 புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாகத் தெரிவித்தனர். சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தித்தாள், இந்த எண்ணிக்கை ஒரு புதிய உச்சம் என்றும் இது ஒரு வாரத்திற்கு முன்பு, கடந்த புதன்கிழமை கண்டறியப்பட்ட 326 தொற்றுகளைவிட கணிசமாக அதிகம் என்று தெரிவித்துள்ளது. ஷாங்காய் நகரில் ஞாயிற்றுக்கிழமை 2,678 தொற்றுகளும் திங்கள்கிழமை 3,500 தொற்றுகளும் செவ்வாய்கிழமை 4,477 தொற்றுகளும் பதிவாகியுள்ளன.

ஆனால், ஷாங்காய் மட்டுமின்றி சீனா முழுவதிலும் தினசரி புதிய தொற்றுகளின் எண்ணிக்கை அமெரிக்கா அல்லது ஐரோப்பாவின் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாக உள்ளது. ஆனால், இப்போது மூன்று மாதங்களாக ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கில் தொற்றுகள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், இந்தியா மற்றும் தென் கொரியாவில், இந்த ஆண்டு வெவ்வேறு நேரங்களில், ஒரே நாளில் பல லட்சம் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மறுபுறம், சீனா, புதன்கிழமை 8,655 தொற்றுகளைப் பதிவுசெய்துள்ளது என்று சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. மேலும் இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் பதிவான அதன் மிக அதிகமான தொற்று எண்ணிக்கையாகும் என்று தெரிவித்துள்ளது.

சீனாவில் ஒட்டுமொத்த கோவிட்-19 தொற்று எண்ணிக்கை குறைவாக இருந்தால், என்ன பிரச்சனை?

கோவிட்-19 தொற்று அதிகரிப்பது சீனாவின் ஜீரோ-கோவிட் உத்தியை தீவிரமாக குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்துகிறது. மேலும் மோசமாகி, இது ஹாங்காங் வழியில் செல்லும் என அச்சுறுத்துகிறது. ஹாங்காங், அதன் கோவிட்-19 உத்தி கடந்த ஆண்டு டிசம்பர் வரை சீனாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து மிகவும் வேறுபட்டதாக இல்லை. கடந்த இரண்டு மாதங்களில் தொற்றுகளின் அதிகரிப்பைக் கண்ட ஹாங்காங் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கில் தொற்றுகளையும் நூற்றுக்கணக்கான இறப்புகளையும் பதிவு செய்தது.

நகரின் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன, மேலும் இறந்தவர்களின் உடல்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் பிணவறைகளும் சமாளிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, கோவிட் -19 தொற்றுகளை மிகவும் திவிரமான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் நாடு மூடி வைத்திருக்க முடிந்ததால் சீனாவில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. கண்டறியப்பட்ட ஒவ்வொரு தொற்றுநோயாளியும் அறிகுறியற்றவர்களாக இருந்தாலும், கட்டாயமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிறிய தொற்று பரவல் கடுமையான உள்ளூர் ஊரடங்குகளை சந்தித்தன. வெளிநாட்டுப் பயணிகள் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டனர். தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால் அவர்கள் நீண்ட தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டனர்.

சீனாவின் இந்த முயற்சி அதன் மக்கள்தொகையிலிருந்து கொரோனா வைரஸை முற்றிலுமாக அகற்றுவதாகும். இது உலகின் பெரும்பாலான நாடுகளில் மேற்கொள்ளப்படும் உத்தியைப் போல இல்லாமல், தொற்றுநோய்களின் விகிதத்தை நிர்வகிக்கக்கூடிய அளவில் வைத்திருக்க முயற்சிக்கிறது. அதே நேரத்தில் மக்கள் கோவிட்-க்கு முந்தைய இயல்புநிலையை அணுக அனுமதிக்கிறது.

சீனாவின் மிகத் தீவிர உத்தி தோல்வியடைந்ததா?

சீனாவின் வியூகம் இதுவரை வெற்றி பெறாமல் இல்லை. மார்ச் 2020 முதல் இரண்டு ஆண்டுகளில், சீனாவில் 30,000 கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இப்போதுகூட, தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை சுமார் 1.5 லட்சம் மட்டுமே என்று உலக புள்ளிவிவரங்கள் கூறுகிறது. இந்த எண்ணிக்கை பல நாடுகள், வெவ்வேறு காலங்களில், ஒரே நாளில் பதிவு செய்ததைவிடக் குறைவான எண்ணிக்கை ஆகும்.

இதற்கு நேர்மாறாக, அமெரிக்காவில் கிட்டத்தட்ட 80 மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில், இந்தியாவில் 43 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடுகளில்கூட - பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி - என ஒவ்வொரு நாடும் 20 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுகளைப் பதிவு செய்துள்ளன.

குறிப்பிடத்தக்க வகையில், சீனாவில் தொற்றுகளின் அதிகரிப்பு இதுவரை கோவிட் -19 இறப்புகளில் எந்த அதிகரிப்புக்கும் வழிவகுக்கவில்லை. கடந்த வாரம், சீனா 2 கோவிட் இறப்புகளைப் பதிவுசெய்தது. இது இந்த ஆண்டில் முதல் கொரோனா வைரஸ் இறப்புகள் ஆகும். சீனாவில் பதிவான மொத்த இறப்பு எண்ணிக்கை 4,638 ஆகும். தரவுகளில் உள்ளபடி, இந்த இறப்புகளில் 6 இறப்புகள் ஏப்ரல் 2020 இன் நடுப்பகுதிக்குப் பிறகு நடந்தவை.

சீனாவின் இந்த உத்தி பற்றி ஏன் சந்தேகம் எழுகிறது?

சீனாவின் நீண்ட கால உத்தியின் நிலைத்தன்மை குறித்து சந்தேகம் அதிகரித்து வருகிறது. பதிவாகியுள்ள காலகட்டங்களின்படி தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தியது உட்பட, உலக நாடுகளின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், இந்த வைரஸ் அகற்றப்படவில்லை. எதிர்காலத்தில் இது மிகவும் ஆபத்தான அளவில் உருமாற்றம் அடையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

தற்போதைய தடுப்பூசிகள் தீவிர நோய் மற்றும் இறப்பு அபாயத்தைக் கணிசமாகக் குறைத்தாலும், தொற்றுநோயைத் தடுப்பதில் பெரிதும் பயனற்றவையாக உள்ளன. சீனாவில்கூட சில கட்டுப்பாடுகள் மெதுவாக தளர்த்தப்பட்டன. பிபிசியின் கருத்துப்படி, அறிகுறி இல்லாத மற்றும் லேசான தொற்றுகள் இனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதில்லை. மேலும், மையப்படுத்தப்பட்ட வசதிகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மட்டுமே கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட கால விதிகளும் குறைக்கப்பட்டுள்ளன என்று பிபிசி தெரிவித்துள்ளது. கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறுகிய கால பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம். மேலும், ஹாங்காங் போன்ற ஒரு சூழ்நிலை உருவாகும் என்ற அச்சம் நிராகரிக்கப்படவில்லை. குறிப்பாக ஹாங்காங்கில் சமீபத்திய தொற்று அதிகரிப்புக்கு காரணமான சில காரணங்கள் சீனாவிலும் உள்ளன.

ஹாங்காங்கில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுகு நகரத்தின் முதியோர்கள் குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டதே என குற்றம் சாட்டப்பட்டது. நேச்சர் இதழின் அறிக்கையின்படி, ஹாங்காங்கில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். மேலும் நகரத்தில் இறந்தவர்களில் 90 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள் என்று தெரிவித்துள்ளது.

சீனாவில் ஒட்டுமொத்த தடுப்பூசி விகிதம் 85 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தாலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர் என்று நேச்சர் இதழ் தெரிவித்துள்ளது. சீனாவில் பயன்படுத்தப்படும் முதன்மை தடுப்பூசியான சினோவாக், பூஸ்டர் டோஸ் பெற்ற பின்னரே 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிக அளவிலான பாதுகாப்பை வழங்க முடியும் என்று ஒரு ஆய்வை மேற்கோள்காட்டியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் பல நாடுகளில் நடந்ததைப் போல, சீனாவில் மொத்த தொற்றுகளில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு நோயாளிகளைக் கொண்ட ஷாங்காய் நகரத்தின் நிலைமை கையை மீறிச் சென்றால், ஹாங்காங்கில் காணப்படுவது போல் அது அதிக எண்ணிக்கையிலான வயதானவர்களின் இறப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் உள்ளது.

ஷாங்காயில் பொதுமுடக்கம் விதிப்பது ஒரு பெரிய பொருளாதாரத் தாக்க ஆபத்தாக இருந்தாலும்கூட, இது அத்தகைய சூழ்நிலையைத் தடுக்க சீனாவின் கடுமையான முயற்சியாகும்.

சீனாவின் நிலைமை இந்தியாவுக்கு ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்துமா?

மூன்றாவது அலைக்குப் பிறகு இந்தியாவில் தொற்றுநோய் சீரான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் புதன்கிழமை, 1,233 தொற்றுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இந்த தொற்றுநோயைப் பற்றி எதுவும் கணிக்க முடியாது என்றாலும், குறைந்தபட்சம் எதிர்காலத்தில், வைரஸின் புதிய உருமாற்றம் எதுவும் இல்லாவிட்டால், இந்தியாவில் புதிய தொற்று உயர்வுக்கான ஆபத்து மிகக் குறைவாகவே தெரிகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Coronavirus China Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment