/tamil-ie/media/media_files/uploads/2020/07/image-1-2.jpg)
இந்தியாவில் இதுவரை 1.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சத்தீவைத் தவிர, இந்தியாவின் அனைத்து மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு உள்ளது. இதில், சுமார் 27 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 1,000க்கும் மேற்பட்ட நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. நாட்டில் மிகக் குறைந்த பாதிப்பை சந்தித்த அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் கூட தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை 150-ஐத் தாண்டியுள்ளது.
எவ்வாறாயினும், கொரோனா நோய்த் தொற்று இன்னும் சமூகப் பரவல் கட்டத்தை எட்டவில்லை என்று அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய பல விஞ்ஞானிகள், சுகாதார வல்லுநர்கள், சமூகப் பரவல் குறித்த அரசின் நிலைப்பாட்டை முற்றிலும் 'ஏற்றுக்கொள்ள முடியாதது' என்றும், சமூகப் பரிமாற்றம் நடைபெறுகிறது என்பதில் சந்தேகமில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அது எந்த விஷயத்திலும் ஒரு பொருட்டல்ல என்றும் கூறினார்.
சமூகப் பரவல் என்றால் என்ன, ஏன் முக்கியமானது?
சமூகப் பரவல் என்பது சமூகத்தில் நோய்த் தொற்று மிகவும் பரவலாகிவிட்டது என்பதனைக் குறிக்கிறது. இந்த கட்டத்தில், யார் மூலம் யாருக்கு நோய்த் தொற்று ஏற்படுகிறது என்பதைத் தீர்மானிப்பது கடினம். கொரோனா வைரஸ் பரவல் இணைப்புச் சங்கிலியை கண்டறிவது கடினம். இதனால், தொடர்பு தடமறிதல், அதிகம் ஆபத்தான மக்களை அடையாளம் காணல், சந்தேகிக்கும் நபர்களை தனிமைப்படுத்தல் போன்ற நமது முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காமல் போய்விடும் .
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலமாக கொரோனா நோய்த் தொற்று பரவிய ஆரம்ப நாட்களில், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஒவ்வொரு நபரின் பயண வரலாறு அல்லது பயண வரலாற்றைக் கொண்ட ஒருவருடனான தொடர்பு குறித்து சோதிக்கப்பட்டனர். அந்த நாட்களில், ஒவ்வொரு புதிய கொரோனா நோய்த் தொற்றும் வெளிநாடுகளுக்குச் சென்ற ஒருவரின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தொடர்போடு இணைக்கப்பட்டனர். அந்த சமயம், சமூகப் பரவல் எட்டவில்லை என்ற மத்திய அரசின் தொடர்ச்சியான அறிக்கைகள், ஒரு சிறிய பகுதியினர் மட்டுமே ஆபத்தில் இருக்கக்கூடும் என்பதை பொதுமக்களுக்கு உறுதியளிக்கும் நடவடிக்கையாகவும் காணப்பட்டது.
ஆனால், கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 1,118,107-ஐத் தாண்டிய பின்பும், சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை என்று கூறுவது "சிரிக்கக்கூடிய" மற்றும் "உண்மையற்ற" மதிப்பீடாய் உள்ளது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
முன்னதாக, மத்திய சுகாதார அமைச்சகம் இது குறித்து கூறுகையில்"8 மாநிலங்களில் மட்டுமே சுமார் 90 சத தொற்றுள்ளவர்கள் உள்ளனர். அதேபோன்று, இந்தியாவின் 80 சதவீத கொரோனா பாதிப்புகள் 49 மாவட்டங்களில் இருந்து காணப்படுகிறது. இதுவரை ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 86 சத வீத இறப்புகள் 6 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. மொத்த இறப்புகளில் 80 சத இறப்பு 32 மாவட்டங்களில் நிகழ்ந்துள்ளது.எனவே, இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரவல் நிலையை அடைந்தது என்பதை நியாயப்படுத்தமுடியாது" என்று தெரிவித்தது.
எனவே, சமூகப் பரவல் உள்ளதா?
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய விஞ்ஞானிகளும், சுகாதார வல்லுநர்களும் சமூகப் பரவல் நிலையை மறுப்பதற்கு இல்லை என்று தெரிவித்தனர். "அரசின் கைப்பாவையாக இல்லாத எந்தவொரு தொற்றுநோயியல் நிபுணரும் இதனைத் தான் கூறுவார். சமூகப் பரவல் இல்லை என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத கூற்று. கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டிய நிலையில் என்ன சொல்வது என்று கூட எனக்குத் தெரியவில்லை,”என நோயெதிர்ப்பு நிபுணரும், புனே இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் (IISER) வருகை பேராசிரியருமான வினீதா பால் கூறினார்.
ஒரு மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கும் மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறுகையில் ,"சமூகப் பரவலுக்கான ஆதாரங்களும், தரவுகளும் உள்ளன. நீண்ட காலமாக இந்தியாவில் சமூக அளவில் கொரோனா நோய்த்தொற்று நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.
இந்தியாவில் சுகாதார ஆராய்ச்சிக்கு நிதியளிக்கும் வெல்கம் டிரஸ்ட்-டிபிடி இந்தியா அலையன்ஸ் அமைப்பின் தலைமை நிர்வாகி ஷாஹித் ஜமீல், அரசின் நிலைப்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறினார்.
“அறிவியல் தொடர்பான விஷயங்களில் நேர்மையாக இருப்பது எப்போதும் நல்லது என்று நான் நினைக்கிறேன். பாருங்கள், இன்று கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை எட்டியுள்ளது, இது இன்னும் அதிகரிக்கும். இது யாருடைய தவறும் இல்லை. நிலப்பரப்பு, மக்கள் தொகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தாக்கம் மோசமாக உள்ளது என்று நான் கருதவில்லை. ஆனால், தொற்று எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டிய பின்பும், சமூகப் பரவல் நடக்கவில்லை என்று சொல்வது… அது எப்படி சாத்தியமாகும்? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) கடுமையான சுவாச பிரச்சனைகள் உள்ளவர்களை ஒரு கணக்கெடுப்பை நடத்தியது உங்களுக்கு நினைவிருக்கிறதா? இதில், 40% க்கும் அதிகமானோருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்று கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. சமூகப் பரவல் இல்லையென்றால், இந்த 40% என்ன கணக்கு? இது அரசாங்கத்தின் சொந்த தரவுகள்,”என்று தெரிவித்தார்.
ஒப்புக் கொள்வதில் ஏன் இந்த தயக்கம்?
சமுகப் பரவலை ஒப்புக்கொள்வதில் அரசுக்கு ஏன் இந்த தயக்கம் என்பதை புரிந்து கொள்ள முடிய வில்லை என்று விஞ்ஞானிகள் கூறினர்.
“சமூகப் பரவலை ஒப்புக் கொள்வதன் மூலம் அனைத்து முதன்மை மற்றும் இரண்டாம்நிலை தொடர்புகளை கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தும் முயற்சிகள் தோல்வி அடைந்ததாக கருதப்படும் என்று அரசாங்கம் நம்புகிறதா? எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. வேறு எந்த காரணத்தையும் பற்றி என்னால் சிந்திக்க முடியாது, ”என்று வேலூர் சி.எம்.சிமுன்னாள் தலைவரும், இந்தியாவின் சிறந்த தொற்றுநோயியல் நிபுணர்களில் ஒருவருமான ஜெய்பிரகாஷ் முலில் கூறினார்.
“சமூக அளவில் கொரோனா பரவல் இருப்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால், நோய்த் தாக்குதல் அதிகம் உள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகளாகக் கருதப்படும் சிவப்பு மண்டலம், மிதமான பாதிப்பு உள்ள ஆரஞ்சு மண்டலங்கள், நோய் பாதிப்பு இப்போது இல்லாதிருக்கும் பசுமை மண்டலங்கள் என்ற வகைப்படுத்தல் அர்த்தமற்று போய்விடும். சமூக விலகல், ஊரடங்கு போன்றவற்றை ஏன் பின்பற்ற வேண்டும் என்று பொது மக்களிடமிறிந்து கேள்வி எழலாம். எனவே, அந்த மாதிரியான சூழ்நிலையைத் தவிர்க்க அரசாங்கம் விரும்புகிறது. ஆனால், எதையும் உறுதியாக சொல்ல முடியாது,”என்றும் அவர் தெரிவித்தார்.
இப்போது அது முக்கியமா?
ஜெய்பிரகாஷ் முலிலும், பிற விஞ்ஞானிகளும் சமூகப் பரவலுக்கு அரசாங்கம் ஒப்புக் கொண்டார்களா? என்ற கேள்வியே முக்கியமற்றது என்று வாதிட்டனர்.
“தொற்றுநோயியல் பாடப்புத்தகங்களில் சமூகப் பரவலுக்கு என்று எந்தவித வரையறையும் குறிப்பிடபடவில்லை. மிகவும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், "இந்த நோய் எனது நாட்டில் (அ) எனது சமூகத்தில் காலூன்றியதா என்பதுதான் பொருள். மற்ற அனைத்தும் தேவையற்ற விவாதம்”என்று ஜெய்பிரகாஷ் முலில் தெரிவித்தார்.
சமூக பரவல் நிலையை அடைந்து விட்டோம் என்பதை ஏற்றுக்கொண்டாலும், அரசின் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் பெரிய மாற்றம் இருக்காது என்று ஷாஹித் ஜமீல் தெரிவித்தார்.எதுவும் மாறாது. அதே செயல்முறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பரிசோதனை, தனிமை, சிகிச்சை. பொது மக்களுக்கும், எதுவும் மாறாது. அதே பாதுகாப்பு நடைமுறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும், ”என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.