சமூக விலக்கம் அல்ல, தனிநபர் விலகியிருத்தலே முக்கியம்: நிபுணர்

Corona News In Tamil: தனிமைப்படுத்துவது பதற்றத்தையும், மனச்சோர்வையும் அதிகரித்துள்ளது என்பதை ஏற்கனவே ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

By: Published: March 27, 2020, 10:42:34 AM

மயூரா ஜன்வால்கர், கட்டுரையாளர்

வரலாற்றிலே இல்லாத அளவிற்கு செய்யப்பட்டுள்ள இந்தியா முழுவதுக்குமான இந்த ஊரடங்கில், 1.3 பில்லியன் இந்தியர்களும், 3 வாரங்கள் தனிமைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த மிகப்பெரிய மன அழுத்தம் மற்றும் நிச்சயமற்ற தன்மை, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உலகளவில் மன ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக பயம், பதற்றம் மற்றும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்தியாவில் அமலில் உள்ள இந்த ஊரடங்கையொட்டி, ஹாவர்ட் சான் பள்ளியின் உலக மனநல மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் சேக்கர் சக்சேனா ஜெனீவாவிலிருந்து, இந்தியன் எக்ஸ்பிரசிடம் பேசினார்.

இந்த நேரத்தில் மன ஆரோக்கியம் குறித்து பேசவேண்டியது ஏன் முக்கியமாகிறது?

கோவிட் – 19னால் பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்திய மக்கள் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வழக்கமான பணிகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளியில் எதற்கும் செல்வதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதி, உணவு மற்றும் பணமின்றி தங்கள் வீடுகளை சென்று அடைய முடியாமல், பல கிலோ மீட்டர் தொலைவுகளில் பலர் சிக்கித் தவிக்கின்றனர். நாம் தற்போது ஒரு அச்சுறுத்தலை அனுபவித்து வருகிறோம். அது நம்மை துன்பப்படுத்தும் அல்லது கொன்றுவிடும். எல்லோரும் அதுகுறித்து கவலைகொள்கிறோம் மற்றும் அதுகுறித்து தெரிந்துகொள்ள ஆர்வமாகிறோம். சிலர் மற்றவர்களைவிட அதிகமாகவே வருந்துகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.


மனநிலைக்கு பல பரிமாணங்கள் உள்ளது. அந்த பரிமாணங்களின் அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் பிரிக்கப்படுகிறோம். சிலருக்கு மிகச்சிறந்த மன ஆரோக்கியம் உள்ளது. சிலருக்கு மிக மோசமான மன நிலை உள்ளது. தற்போது கற்பனை செய்துகொள்ளுங்கள், இடப்பக்கத்தில் மிகச்சிறந்த மன நலன் உள்ளவர்களை இருக்கிறார்கள். வலப்பக்கத்தில் மிக மோசமான மனநலன் உள்ளவர்கள் இருக்கிறார்கள். சமூதாயமாகிய நாம் தற்போது வலப்பத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். அது நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. பொது சுகாதார பார்வையிலிருந்து பார்த்தால், சிறிய எண்ணிக்கையிலான மக்களுக்கு ஒரு பெரிய பிரச்னையென்றாலும் அது பிரச்னைதான். பெரிய எண்ணிக்கையிலான மக்களுக்கு சிறிய பிரச்னையென்றால், அது ஒட்டுமொத்த மிகப்பெரிய பொது சுகாதார பிரச்னையாகிறது. ஆமாம், வைரஸ்தான் தற்போதுள்ள பிரச்னை. இது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவர்களை கொல்கிறது. ஆனால் பல பில்லியன் மக்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வில் ஏற்படும் சிறிய சீரழிவு கூட, இந்தியாவில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தி, மக்களை வேதனையடையச் செய்யும்.

மனம் மற்றும் உணர்வு ரீதியிலாக ஏற்படும் பிரச்னைகளே, தொற்று ஏற்படுத்தும் வைரசைவிட மிகப்பெரிய வைரஸ் என்று எழுதியுள்ளீர்களே?

ஒட்டுமொத்தமாக பார்த்தால், இந்த அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பதற்றம், மற்றும் மன அழுத்தம், அதனுடன் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்கள், பொருளாதார பிரச்னைகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் உங்களுக்கு அன்பானவர்களிடம் இருந்து விலகியிருக்க வேண்டிய சூழல், இவையெல்லாம் மக்களின் உணர்வு மற்றும் மனநலன் ஆகிய அனைத்திலும் கணக்கில் கொள்ளப்படும். ஒட்டுமொத்தமாக மிகப்பெரிய அளவிலான மக்களுக்கு இது பிரச்னையாகிறது.

சமூக தனிமை மன நலனில் பாதிப்பை ஏற்படுத்துமா?

நாம் தற்போது சமூக தனிமை குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அதைவிட தனிநபர் விலகியிருத்தல், அதாவது ஒருவருடன் ஒருவர் விலகியிருக்கும் அளவே தேவை. சமூக தனிமை என்பது தேவையற்ற ஒன்றுதான். ஏனெனில் அது தவறான தகவலை பரப்புகிறது. உண்மையில் இதுபோன்ற மனஅழுத்தம் நிறைந்த நாட்களில் நமக்கும் அதிகளவிலான சமூக கூடுகை நிகழ்வுகளும், சமுதாய ஆதரவும் , சமூக தனிமையைவிட மிகத்தேவை. அது சாத்தியமாகும்போது, எவ்வித சமரசமுமின்றி நாம் வைரசை எதிர்த்து போராடுவதற்கு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும். நாம் எப்போது தனிநபர் விலகல் அதாவது ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக இல்லாமல் இருத்தல் என்பதை வலியுறுத்த வேண்டும். அது சமூக கூடுகை நிகழ்வுகளில் கூட நாம் ஒவ்வொருவருக்கும் இடையில் போதிய இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படவேண்டும். அதுவே சிறந்த பாதுகாப்பு நடவடிக்கையாகும். நீங்கள் மக்களிடம் போன் அல்லது மற்ற மீடியாக்கள் வழியாக தொடர்புகொள்கிறீர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கும் அவர்களின் துன்பங்களை கடந்து வருவதற்கு ஆதரவாக பேசுங்கள். அதுதான் தற்போது சேர்ந்து போராடுவதற்கு, சமுதாயத்திற்கான தேவையாக உள்ளது. சமூக தனிமை, அதாவது நீங்கள் மட்டும் தனியாக இருக்கிறீர்கள் என்று பொருள். அது உங்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. சர்வதேச நிறுவனங்களும், தேசிய அதிகாரிகளும் சமூக தனிமையை கடைபிடிக்க வலியுறுத்துகிறார்கள். உண்மையில் சமூக கூடுகை நிகழ்வுகளில் தனிநபர் விலகியிருத்தல் மட்டுமே வேண்டும் என்றுதான் அவர்கள் கூறவேண்டும்.

இதுபோன்ற தொற்று ஏற்பட்டுள்ள காலத்தில், மனநல பிரச்னைகளை தடுக்க அரசுகள் செய்ய வேண்டியது என்ன?

பொதுக்கல்வி மற்றும் தகவல்கள் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். முதல் அடிப்படை கோட்பாடு என்னவெனில், அரசு அதிகாரிகள் மக்களிடம் துல்லியமான, நேரத்திற்கு ஏற்ற தகவல்களை கொடுக்க வேண்டும். ஒரு வெற்றிடம் நிறைய பதற்றத்தை ஏற்படுத்தும். அதை இந்தியா நன்றாகவே செய்துவருகிறது. பிரதமரே தொடர்ந்து மக்களிடம் பேசி வருகிறார்.

அடுத்ததாக, சமூக வலைதளங்களில் அதிகளவிலான தவறான தகவல்கள் பரவிவருகின்றன. வாட்சப் குரூப்களிலும், செய்தித்தாள்களிலும், அடிப்படை ஆதாரமின்றி தவறான தகவல்களாகவே உள்ளன. இதை உலக சுகாதார நிறுவனம் இன்போடெமிக் (infodemic) என்று அழைக்கிறது. அதாவது தொற்றுநோய் தொடர்பான தவறான தகவல்கள் என்பது இதன் அர்த்தமாகும். இந்தியா, அதற்கு மிக மோசமான உதாரணம் ஆகும். ஏனெனில் அதிகளவிலான மக்கள் இணைய சேவையை பெறுகிறார்கள். குறிப்பாக நகர்புறத்தில் இருப்பவர்களுக்கு இவை எளிதாக கிடைக்கிறது. தற்போது இந்த ஊரடங்கால், அனைவரும் வீட்டில் இருப்பதால், அவர்களுக்கு நேரம் கிடைக்கிறது. எனவே அவர்கள், அது மற்றவர்களை எப்படி பாதிக்கும் என்று எண்ணிக்கூட பார்க்காமல், அவற்றை மற்றவர்களுக்கும் பரப்புகிறார்கள். இது பதற்றத்தையும், கவலைகளையும் அதிகரிக்கும். இதை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தேவை. அதை அரசு மட்டும் தனியாக செய்துவிட முடியாது. நாம் அனைவரும் சேர்ந்துதான் செய்ய வேண்டும். அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை நாம் பரப்பாமல் இருப்பதன் மூலம் அதை நாம் செய்ய முடியும்.

மூன்றாவது நாம் ஒரு இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் 24 மணி நேரமும் நாம் தொலைக்காட்சி செய்திகளை பாரத்துக்கொண்டே இருக்கக்கூடாது. ஏனெனில் அது பதற்றத்தை மேலும் கூட்டிக்கொண்டே செல்லும். வீட்டில் இருந்தாலும் கூட நாம் நன்றாக தூங்கி, நல்ல சத்துள்ள உணவை உட்கொண்டு, மனதிற்கு இதமளிக்கும் செயல்களை செய்துகொண்டு இருக்க வேண்டும்.

நீண்ட நாட்கள் தனிமைபடுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

நம் வாழ்வில் வரும் சிறிய மாற்றங்கள் கூட பதற்றத்தை ஏற்படுத்தும். இது ஒரு பெரியளவிலான, எதிர்மறையான மாற்றமாகும். தினமும் காலையில் வாகனங்களை எடுத்துக்கொண்டு நாம் பணிக்கு செல்வதற்கு பதிலாக வீட்டிலேயே அமர்ந்திருக்கிறோம். நாம் நம் நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள், மேலும் சிலருக்கு குடும்பத்தினருடன் இருந்து தனித்து இருக்கிறோம். அது அதிக பதற்றத்தை கொடுப்பதாக இருக்கிறது. நாம் தொடர்பில் இருப்பவர்களுடன் மேலும் நன்றாக பேச முடியும். அப்போது, அவர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வது முக்கியம், அவர்களுக்கு உங்களின் ஆதரவு தேவையா என்று அறிந்து, நீங்கள் அவர்களின் துன்பங்களில் பங்கெடுக்க முடியும். அதற்கு நீங்கள் அவர்களுடன் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் பேசுவதை கேட்பதன் மூலம் நீங்கள் அவர்களுக்கு உதவலாம். இதை நாம் மிக தீவிரமாக செய்யலாம். நமக்கு தெரியவில்லை, இது எத்தனை வாரங்கள் அல்லது மாதங்கள் தொடரும் என்று. ஆனால் இது மிக நீண்ட நாட்கள் தொடரலாம்.

தனிமைப்படுத்துவது, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அதிகம் பாதிக்குமா?

நிச்சயமாக, நமக்கு ஏற்கனவே தெரியும் முதியவர்கள் எப்போதுமே ஒரு தனிமையை உணருவார்கள். மனிதர்கள் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையை தீர்மானிக்கும் காரணிகளில் தனிமை மிக முக்கியமானது. வயதானவர்களால், புதிய தொலைதொடர்பு சாதனங்களை வேறு பயன்படுத்த முடியாது. அவர்கள் மக்களுடன் நெருங்கியும் பழக மாட்டார்கள். இது அவர்களுக்கு கூடுதல் பதற்றத்தையும், மனஅழுத்தத்தையும் ஏற்படுத்தும். அதேபோல், குழந்தைகளும் தங்கள் நண்பர்களுடன் விளையாடி பழகிவிட்டார்கள். கூட்டுக்குடும்பங்களில் பெரியவர்கள் சூழவே இருந்து அவர்களும் பழகிவிட்டார்கள். பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. இது ஒரு பெரிய மாற்றம், ஆனால், இளம் குழந்தைகள் ஏன் இவ்வாறு நடக்கிறது என்பதை புரிந்துகொள்ளமாட்டார்கள். அது அவர்களின் பதற்றத்தை அதிகரிக்கும். மாற்றுத்திறனாளிகள், இவர்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் இவர்களுக்கு அதிக பிரச்னைகள் ஏற்படும். மற்றவர்களோடு தொடர்கொண்டு தேவையான செய்திகளை பெறுவதில், இவர்களுக்கு கடும் சிக்கல் ஏற்படும். மற்றவர்களுடன் தொடர்புகொள்வதில் சிக்கல் ஏற்படும். அவர்களுக்கு மிகத்தேவையான சமூக ஆதரவின்றி தவிப்பார்கள். மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவிலான பதற்றத்திற்கு ஆளாவார்கள். அவர்களுக்கு அவர்களின் பாதிப்புகளுக்கான அறிகுறிகள் அதிகரிக்கும். உடல் மற்றும் மனக்குறைபாடுகளுடன் ஏற்கனவே போராடிக்கொண்டிருப்பவர்கள் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் கிடைக்காமல் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.

பார்க்குகளை திறந்து வைக்க வேண்டும். அவற்றில் மக்கள் உடற்பயிற்சி செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று நீங்கள் கூறினீர்கள். அது மக்கள்தொகை அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் எந்தளவு சாத்தியமானது?

அதிக கூட்டத்தை அனுமதிப்பது நிச்சயம் ஆபத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். அதை நாம் அனுமதிக்கக்கூடாது. திறந்தவெளி பார்க்குகளை மூடுவது, நடைபயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகள் செய்வதை தடுப்பதாகும். ஆனால் இந்த நேரத்தில் அவை மிக அவசியம். ஒரு சரியான ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் அவர்களை அனுமதிக்கலாம். மில்லியனுக்கும் அதிகமானவர்கள் குடிசைகளிலும் வசிக்கிறார்கள். ஒரே அறையில் 8 பேர்கள் வரை தங்குவார்கள். அவர்களை அங்கேயே கட்டுப்படுத்துவதும் குற்றமாகும். வெறும் தடையை மட்டும் விதிக்காமல், மாறாக அவர்களுக்கும் உதவும் வகையில் ஒரு இணக்கமான முறையை கண்டுபிடிப்பது அவசியம் என்று நான் நினைக்கிறேன்.

இந்த தொற்றுநோயால் நாம் என்ன மாதிரியான மனநிலை கோளாறை நாம் சந்திக்க நேரிடும்?

மூன்று கோளாறுகள் ஏற்படும். அவை பதற்றம், மன சோர்வு மற்றும் மன அழுத்தம் தொடர்பான கோளாறுகளான தூக்கமின்மை போன்றவையாகும். தனிமைப்படுத்துவது பதற்றத்தையும், மனச்சோர்வையும் அதிகரித்துள்ளது என்பதை ஏற்கனவே ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இதனால் புகை பிடித்தல், மது அருந்துதல், போதை பழக்கம் ஆகியவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மக்கள் அவர்களின் வழக்கமான பொழுதுபோக்குகள் கிடைக்கப் பெறாதபட்சத்தில் இதுபோன்ற மாற்று விஷயங்களில் மனதை செலுத்துவார்கள்.

இக்கட்டுரையை எழுதிய மயூரா ஜான்வால்கர். அவரிடம் ஹாவர்ட் சான் பள்ளியின் உலக மனநல மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் சேக்கர் சக்சேனா ஜெனீவாவிலிருந்து பேசினார்.

தமிழில் : R. பிரியதர்சினி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Explained News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Corona tamil news expert explains on corona social distancing

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X