Corona Virus Tamil News: கோடை மற்றும் பருவமழையைத் தொடர்ந்து, குளிர்காலத்தில் SARS-CoV-2 எவ்வாறு செயல்படும்? உலக சுகாதார அமைப்பு (WHO) குளிர்ந்த காலநிலை கொரோனா வைரஸை அழிக்கும் என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை என்று எச்சரித்தாலும், நடுவர் குழு கொரோனா வைரஸில் வெப்பநிலையின் துல்லியமான தாக்கத்தை இன்னும் கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
ஆண்டின் குளிர் மாதங்களில் பெரும்பாலான பருவகால வைரஸுகள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாக வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். உதாரணமாக, உலகின் பல பகுதிகளில், இன்ஃப்ளூயன்ஸாவிற்கு குளிர்கால பருவநிலைதான் ஏற்றது. இந்தியா மற்றும் இதே போன்ற காலநிலை உள்ள பிற பகுதிகளில், பருவமழை மற்றும் குளிர்காலங்களில் இதன் தாக்கம் அதிகரிக்கும். இருப்பினும், கோவிட்-19 -க்கு இன்னும் திட்டவட்டமான தீர்வு இல்லை என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாவல் கொரோனா வைரஸ் இதுவரை எந்த வகையான பருவநிலையைக் காட்டியுள்ளது?
வைரஸ் நோய்கள், குறிப்பாக சுவாச நோய்கள், உலகளவில் குளிரான வெப்பநிலையில் அதிகரிக்கும். இதற்கு உதாரணம் குளிர்காலத்தில் அதிக இறப்புகளை ஏற்படுத்தும் ஃப்ளூ காய்ச்சல் என்று இந்திய மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர்.ஷஷாங்க் ஜோஷி கூறுகிறார். "குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், வெப்பமண்டல புவியியலில், பருவங்களுடன் சம்பந்தப்பட்ட எந்தவொரு ஆதாரமும் இல்லை" என்று டாக்டர் ஜோஷி குறிப்பிடுகிறார்.
"இன்ஃப்ளூயன்ஸா போன்ற பிற சுவாச நோய்களைப் போல, கோவிட்-19-க்கு வலுவான பருவநிலை இருப்பதாகத் தெரியவில்லை" என்று இன்ஃப்ளூயன்ஸா பற்றிய குறிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான WHO ஒத்துழைப்பு மையத்தின் துணை இயக்குநர் பேராசிரியர் Ian Barr தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.
"இருப்பினும், இந்தியா போன்ற இடங்களில் இன்ஃப்ளூயன்ஸாவுக்கு மிகவும் மாறுபட்ட பருவங்கள் உள்ளன. குளிர்காலத்தை விட மழை / பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) இங்கு நோய் பரவல் அதிகரிக்கும். இந்த கட்டத்தில், கோவிட்-19 க்கு இது முக்கியமானது என்று நான் நினைக்கவில்லை. தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கும்போது இது மாறக்கூடும். குளிர் / மழைக்காலங்களில் மற்ற சுவாச நோய்க்கிருமிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த வழக்கத்திற்கு கோவிட் -19 இன்னும் பொருந்தவில்லை”என்று பேராசிரியர் பார் கூறினார்.
பொதுவாகக் குளிர்காலம் வைரஸ் தொற்றுநோய்களின் அதிகரிப்புடன் ஏன் தொடர்புடையது?
மேற்கத்திய நாடுகளில், குளிர்காலம் கடுமையாக இருக்கும். அதனால், மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க முனைகிறார்கள். ஒருமுறை பரவிய வைரஸ், அந்த வளாகத்தில் வசிக்கும் அனைவர்க்கும் பரவுவதற்கு இதுவே காரணமாக அமைகிறது.
வைராலாஜிஸ்ட்டுகளின் கூற்றுப்படி, இது இந்தியச் சூழலில் சாத்தியமில்லை. இந்தியாவில் மக்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டிய அவசியமில்லை, இது காற்றோட்டம் அதிகம் உள்ள இடம் என்று தேசிய வைராலஜி நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குநர் டாக்டர் எம் எஸ் சதா கூறுகிறார். "வட மாநிலங்களில் உள்ள மக்களும் சூரிய ஒளியைப் பார்க்கமுடியும். அதனால் அவர்கள் சுதந்திரமாகவே வெளியில் நடமாடுகின்றனர்" என்று மேலும் டாக்டர் சாதா கூறினார்.
2009-ம் ஆண்டு முதல் H1N1(பன்றிக் காய்ச்சல் வைரஸ்) அதிகம் பரவும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், வழக்கமாக இரண்டு எழுச்சிகள் உள்ளன. அது மழை மற்றும் குளிர் காலங்கள். மகாராஷ்டிரா கண்காணிப்பு அதிகாரி டாக்டர் பிரதீப் அவதே கூறுகையில், குளிர்கால எழுச்சி பருவமழையின் எழுச்சியை விடக் குறைவானது என்கிறார்.
மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுதல் எப்படி இருந்தன?
இன்ஃப்ளூயன்ஸா ஓர் குளிர்கால நோய் என்பதால், தெற்கு அரைக்கோளம் பகுதிகளில், மே-ஜூலை குளிர்கால மாதங்களில் அதிகப்படியான வழக்குகளைக் கண்டிருக்க வேண்டும் ஆனால், அது இந்த ஆண்டு நடக்கவில்லை. இன்ஃப்ளூயன்ஸா வழக்குகள் கூட அதிகரிக்கவில்லை. மக்களுக்கிடையேயான தொடர்புகள் குறைந்ததால் இன்ஃப்ளூயன்ஸாவிற்கான பரிமாற்றச் சங்கிலியை உடைத்திருக்கலாம் என்றும் கோவிட்-19-க்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு இது சாத்தியமானதாக அமைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்தியர்கள் கவலைப்பட வேண்டுமா?
குளிர்காலத்தில் இந்தியா இரண்டாவது உச்சத்தைப் பெறக்கூடும், குறிப்பாக நாட்டின் வடக்கு பகுதியில் அதிகரிக்கும் என டாக்டர் ஷஷாங்க் ஜோஷி கூறினார்.
கடந்த சில மாதங்களாகக் கட்டம் வாரியாக லாக்டவுன் திறக்கப்படுவதால், குளிர்காலத்தில் வைரஸ் பரவுதல் அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானியும் தடுப்பூசி ஆராய்ச்சியாளருமான டாக்டர் ககன்தீப் காங் கூறுகிறார். “ஆனால் மாஸ்க் பயன்பாடு அதனைக் குறைக்கும்” என்றும் குறிப்பிடுகிறார் டாக்டர் காங்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.