George Mathew கொரோனா தொற்று காரணமாக, மக்களின் பொருளாதா நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கம் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 9 ஆண்டுகளுக்குப்பிறகு, 10 கிராம் தங்கம் விலை ரூ. 50 ஆயிரம் என்ற அளவை எட்டியுள்ளது. சர்வதேச அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் தங்கம் பயன்பாடு அதிகளவில் உள்ளது. கொரோனா தொற்று, அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு, வங்கிகளில் குறைவான வட்டி விகிதம் உள்ளிட்ட காரணிகளால், மக்களிடையே, தங்கம் குறித்த மோகம் அதிகரித்துள்ளதால் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் தங்கம் வாங்கும் கனவை சிதைப்பதாக உள்ளன.இதேநிலை தொடருமா அல்லது தங்கம் விலை குறையுமா என்பதே, மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தங்கம் விலை இந்தளவிற்கு அதிகரிப்பு ஏன்?
2020ம் ஆண்டின் முற்பகுதியில் அதாவது மார்ச் மாதத்தில், தங்கத்தின் விலை சற்று குறைந்த நிலையில் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தங்கத்தை அதிகம் வாங்க முற்பட்டதால், கிட்டத்தட்ட 25 சதவீத அளவிற்கு தங்கம் வர்த்தகம் அதிகரித்திருந்தது. தேவை அதிகரித்ததன் காரணமாக, விலையும் கணிசமான அளவில் உயரத்துவங்கியது.
2011 செப்டம்பர் மாதத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,920 டாலர்களாக இருந்தநிலையில் 9 ஆண்டுகளில் இல்லாத அளவில் தற்போது ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் விலை 1,856.60 டாலர்கள் என்ற அளவை எட்டியுள்ளது.
ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் என்பது 31.1034768 கிராம் ஆகும்
கொரோனா தொற்று, அதன் காரணமாக வங்கிகள் அதிரடியாக குறைத்த வட்டிவிகிதம், பணப்பரிமாற்றத்தின் விகிதம் குறைவு உள்ளிட்ட காரணங்களால், மக்கள் அதிகளவில் தங்கத்தில் சேமிக்க துவங்கினர். தங்கத்தில் முதலீடு செய்வதால் அவர்களுக்கு குறைந்த அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டதால், பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்ய துவங்கினர். அவர்கள் தங்கத்தை தங்க கட்டிகளாக வாங்காமல், தங்கம் தொடர்பான பரிவர்த்தனை வர்த்தக நிதி பத்திரங்களாக வாங்கிக்கொண்டனர். இந்தியாவில், தங்கம் விலை சர்வதேச சந்தைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பு குறிப்பிடத்தக்க வகையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அதிக பாதிப்பு மற்றும் அமெரிக்க - சீன நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களினாலும், சர்வதேச அளவில் தங்கத்தின் விலை கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக கோடக் செக்யூரிட்டிஸ் நிறுவன கமாடிட்டி ஆய்வு துறை இயக்குனர் ரவீந்திர ராவ் தெரிவித்துள்ளார்.
தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?
இந்தியாவில் திருமணம் உள்ளிட்ட அனைத்து விழாக்களிலும் தங்கத்தின் பங்கு இன்றியமையாததாக உள்ளது.அசாதாரண சூழல்களில், தங்கத்தின் மீதான முதலீட்டை பலர் பாதுகாப்பானதாக கருதி இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றனர். பங்குவர்த்தகம், ரியல் எஸ்டேட், பத்திரங்கள் உள்ளிட்டவைகளில் முதலீடு செய்வதைக்காட்டிலும், தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது ஆகும். இதில் ரிஸ்க் குறைவாக உள்ளதே பலரும் தங்கத்தில் அதிகம் முதலீடு செய்ய காரணமாக அமைந்துள்ளது.
கொரோனா வைரஸ் பங்குவர்த்தகம், ரியல் எஸ்டேட் உள்ளிட்டவைகளை அதிகளவில் பாதித்ததனால், தங்கத்தில் முதலீடு செய்வது கணிசமான அளவில் அதிகரிக்க காரணமாக அமைந்தது ஏனெனில், நாம் வைத்திருக்கும் தங்கம், 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே, 1.6 சதவீதம் அளவிற்கு மாற்றம் அடையும். பணத்தில் முதலீடு செய்தால்,அது சர்வதேச பொருளாதார அடிப்படையில் அடிக்கடி மாற்றம் பெற்று ஒரு கட்டத்தில் அதன் மதிப்பை விரைவில் இழக்கத்துவங்குவதால் இதில் ரிஸ்க் அதிகம் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
தங்கத்தின் விலையுயர்வு இன்னும் தொடருமா?
10 கிராம் தங்கத்தின் விலை தற்போதைய அளவில் ரூ.50 ஆயிரம் என்ற அளவில் உள்ள நிலையில், அடுத்த 18 முதல் 24 மாதங்களில் இதன் விலை ரூ. 65 ஆயிரம் என்ற அளவு வரை அதிகரிக்கும் என்று தங்கநகை வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வங்கிகளில் குறைவான வட்டி விகிதம், சில பொருளாதார பிரிவுகளில், எதிர்மறை மதிப்புகள், பணப்புழக்கத்தின் நிலையில் மாற்றம் உள்ளிட்ட காரணங்களினால் விலையுயர்வு அதிகரிக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
சர்வதேச நாடுகளில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டாலோ அல்லது விரைவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படின் இந்நிலை மாறி தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாக மில்வுட் கானே இன்டர்நேசனல் நிறுவன தலைமை செயல் அதிகாரி நிஷ் பாட் தெரிவித்துள்ளார்.
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, முதலீட்டாளர்கள் 2020ம் ஆண்டின் சிறந்த தேர்வாக தங்கத்தை தேர்வு செய்து அதில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். கொரோனா தொற்று குறையும்பட்சத்தில் தங்கத்தை மிக விரைவில் பணமாக மாற்றிக்கொள்ளலாம் என்பதால் இதனை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். பொருளாதார சுருக்கத்தின் விளைவாகவே, தங்கத்தில் அதிகம் பேர் முதலீடு செய்து வருவதாக உலக கோல்ட் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தில் முதலீடு நல்ல பலனை தருமா?
இந்தியாவை பொறுத்தவரை, தங்கத்தில் முதலீடு செய்வதால் நிறைய பலன்கள் கிடைக்கும் என்பது மக்கள் காலங்காலமாக தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ள நம்பிக்கை ஆகும். 1973ம் ஆண்டு முதல் தங்கத்தின் விலை ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 14.1 சதவீதம் அதிகரித்து வருகிறது. பிரெட்டன் வுட்ஸ் காலம் முடிவடைந்ததில் இருந்து கரன்சியில் முதலீடு செய்வது குறைந்து தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்தது. கடந்த ஓராண்டில் மட்டும் பங்குவர்த்தகத்தில் 0.41 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து தங்கம் விலையில் 40 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தங்க சந்தை எவ்வளவு பெரியது?
இந்திய மக்களிடம் மட்டும் 24 ஆயிரம் முதல் 25 ஆயிரம் டன் அளவிற்கு தங்கம் உள்ளாக உலக தங்க கவுன்சில் நிர்ணயித்துள்ளது.பல்வேறு கோயில்களில் உள்ள கடவுள் சிலைகளுக்கு கிலோ கணக்கில் தங்கத்தால் ஆன கவசங்கள் உள்ளன. 2019-20ம் நிதியாண்டில், ரிசர்வ் வங்கியிடம் 40.45 டன் தங்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு மொத்தமாக அதனிடம் 653.01 டன் தங்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முடக்கத்தின் காரணமாக தங்கத்தின் விலை இந்தளவிற்கு அதிகரித்துள்ளது. 2019ம் ஆண்டின் ஜனவரி - மார்ச் வரையிலான முதல் காலாண்டில் 159 டன் தங்கத்தை மக்கள் வாங்கியிருந்த நிலையில், நடப்பு ஆண்டின் இதே காலகட்டத்தில் 36 சதவீதம் சரிவடைந்து 101.9 டன்களாக சரிவடைந்தது.
நாட்டின் முழு ஆண்டு தங்கம் தேவை 2018ம் ஆண்டில் 760.4 டன்களாக இருந்தநிலையில், 2019ம் ஆண்டில் இது 690.4 டன்களாக சரிவடைந்ததாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இருந்தபோதிலும், இந்தியாவில் ஆண்டுதோறும் 120 முதல் 200 டன் தங்கம் கள்ளத்தனமாக கடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு, கடந்தாண்டு தங்கத்துக்கான இறக்குமதி வரியத 12.5 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.