கொரோனா நோயாளிகள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளபோது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மும்பையில் உள்ள இந்திய மருத்துவர்கள் கல்லூரியின் டீன் டாக்டர் சஷாங்க் ஜோஷி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளிலேயே இதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளின் தட்டுப்பாடு பெரிய பிரச்சனையாக உருவாகியுள்ளது. வரும்நாட்களில் இந்த பிரச்சனை மேலும் தீவிரமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துமனைகளில் தேவையான வசதிகள் கிடைக்காதபோது, அவர்கள் வீட்டிலேயே சிகிச்சை மேற்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
வீட்டிலேயே சிகிச்சை என்பது தனிமைப்படுத்திக்கொள்ளளுதல் மட்டுமல்ல. சில முக்கிய நடைமுறைகளை மேற்கொள்வதும் ஆகும். தனிமைப்படுத்திக்கொள்ளுதல் நிகழ்வு, விரைவில் குணம்பெறுவதற்கான நடைமுறையே ஆகும். சரியான சரிவிகித உணவு, 8 மணிநேர உறக்கம், தேவையான நீர்ச்சத்து, நேர்மறை எண்ணங்கள் உள்ளிட்டவைகளும் விரைவாக குணமடைய உதவிபுரியும்.
கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு 14 நாட்கள் வீட்டிலேயோ அல்லது கொரோனா கேர் மையங்களிலோ தனிமையில் இருக்க பரிந்துரைக்கப்படுகின்றனர். 28 நாட்கள் தனிமையில் இருந்தால் மிகச்சிறந்தது ஆகும். நாம் அந்த தொற்றிலிருந்து விடுபடுவது மட்டும் முக்கியமல்ல, நம்மை சார்ந்தோருக்கும் அந்த தொற்று ஏற்படாமல் இருக்க தம்மால் முடிந்த உதவியே இந்த தனிமைப்படுத்துதல் நிகழ்வு ஆகும். வீடுகளில் அதிகப்படியான தனிமைப்படுத்துதல் நிகழ்வு என்பது சாத்தியமே. ஆனால், மையங்களிலோ இது நடைமுறைக்கு ஒவ்வாதது எனவே, மையங்களில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள், வீடுகளில் தங்களை சுயதனிமைப்படுத்திக் கொள்ளுதல் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
55 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர்ரத்த அழுத்தம், உடற்பருமன், நீரிழிவு, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் உள்ளவர்கள், சிறுநீரகம் அல்லது கல்லீரல் குறைபாடு கொண்டவர்கள், நோயெதிர்ப்பு மருந்துகள், ஸ்டீராய்டுகள் உட்கொள்பவர்கள் உள்ளிட்டோர்கள் மருத்துவர்களின் தகுந்த ஆலோசனைகளோடு சிறப்பு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களின் உடலில் ஆக்சிஜன் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். மற்றவர்களை விட இவர்களுக்குத்தான், ஆக்சிஜன் அளவு கண்காணிப்பு மிக அவசியம். மேற்குறிப்பிட்டவர்கள், பல்ஸ் ஆக்ஸிமீட்டரை வாங்கி, தங்களாகவே, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சரிபார்த்துக்கொள்ளலாம். ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு 92 சதவீத அளவிற்கு குறைந்து சுவாசிப்பதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தியை இந்நேரத்தில் அதிகரிப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். சரியான முறையில், உறங்க வேண்டும். மழைக்காலங்களில், இவர்களுக்கு தொண்டை பிரச்சனைகள் ஏற்படும் என்பதால், ஐஸ்கிரீம், துரித உணவுகளை தருவது தவிர்க்க வேண்டும். மதுப்பழக்கம் இருந்தால், அதை உடனே கைவிட வேண்டும், மதுப்பழக்கம், நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும். யோகா உள்ளிட்ட எளிமையான உடற்பயிற்சிகள் அதிக பலனளிக்கும்.
சீரான இதயத்துடிப்பு உள்ளவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்துடன், அஜித்ரோமைசின், வைட்டமின் சி, டி மற்றும் ஜிங்க் உடன் இணைத்து 5 நாட்களுக்கு தரவேண்டும். நோயாளிகள் சுய மருத்துவம் செய்துகொள்ளக்கூடாது. மருத்துவர்களின் அறிவுரைப்படியே மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாற்று மருத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், ஆயுர்வேதா, ஹோமியோபதி டாக்டர்களை கலந்தாலோசித்து சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
குடும்ப உறுப்பினர்கள், பாதுகாப்பாளர்களுக்கான விதிமுறைகள்
கொரோனா தொற்று உடையவர்களிடமிருந்து அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், பாதுகாப்பாளர்கள் நேரடி தொடர்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஐசிஎம்ஆர் பரிந்துரையின்பேரில், டாக்டர்களின் ஆலோசனைப்படி, இவர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை என்ற அளவில் 3 வாரங்களுக்கு ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்து, மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சையளிக்கும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா அறிகுறி இல்லாதவர்களாலும், இந்த வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், குடும்ப உறுப்பினர்கள், பாதுகாப்பாளர்களும் தகுந்த தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
கொரோனா நோயாளிகள் பயன்படுத்தும் உணவு பாத்திரங்களை மற்றவர்கள் பயன்படுத்தாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் வகையிலான உணவு பாத்திரங்களை நோயாளிகளின் பயன்பாட்டிற்கு அளிப்பது உத்தமம்.
நோயாளியின் உடலில், கொரோனா வைரஸ் பல்கிப்பெருவது பத்து நாட்களுக்கு பிறகே நிற்கும், அதுவரை அது மற்றவர்களிடம் தொடர்ந்து பரவிக்கொண்டே தான் இருக்கும். இதன்காரணமாகவே, கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்கள், 10 நாட்களுக்கு பிறகே டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். ஆனால், இதோடு அவருக்கு சிகிச்சை முடிந்துவிடுவதில்லை. அவர் வீட்டிற்கு சென்று குறைந்தது 2 வாரங்கள் சுயதனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இந்த தனிமைப்படுத்துதல் காலத்தில் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவில் ஏதாவது மாற்றம் தெரிந்தால் உடனடியாக மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.
பயப்பட தேவையில்லை
இரத்தத்தில் ஆக்சிஜன் அளவை, பல்ஸ் ஆக்சோமீட்டரின் உதவியால் நாமே எளிதாக பரிசோதித்துக்கொள்ளலாம். குறைந்தது 14 நாட்கள் தினமும் நாம் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். தினமும் 6 நிமிட நேர்த்தியான நடைப்பயிற்சிக்குப்பின் இந்த சோதனை செய்ய வேண்டும். 6 நிமிட நடைப்பயிற்சிக்குபின், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 92 சதவீதத்திற்கு கீழ் இருப்பின் அவர்கள் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. மருத்துவமனைகளில் தகுந்த காற்றோட்ட வசதி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சர்வதேச நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது, இந்நிலையில், நாம் அந்த வைரஸ் உடன் வாழவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இருந்தபோதிலும், நாம் கவலைப்படத்தேவையில்லை. தொற்று உள்ளவரை தனிமைப்படுத்தி, நாமும் முடிந்த அளவு தனிமைப்படுத்திக்கொண்டாலே, இந்த தொற்றிலிருந்து விரைவில் குணமடைய முடியும்
தேவையில்லாத பயத்தை தவிர்த்து, கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக நாம் விடுபட்டு இனிய நல்வாழ்க்கை வாழ்வோமாக....
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.