/tamil-ie/media/media_files/uploads/2020/10/image-14-3.jpg)
இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்றுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் போக்கு நிலவுவதால், கடந்த ஒன்றரை மாதத்தில் முதல் முறையாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. இதற்கு முன் செப்டம்பர் 1 அன்று தான் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்திற்கு குறைவாக (7,85,996) இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில், 62,212 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இது கடந்த நான்கு நாட்களில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைவான பாதிப்பாகும். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 70,816 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. கடந்த 14 நாட்கள் தொடர்ச்சியாக, கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை புதிய பாதிப்புகளை விட அதிகமாக உள்ளன.
செப்டம்பர் 17 அன்று உச்சத்தை எட்டிய கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, அதன்பிறகு சீரான நிலையில் குறைந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கையில் 2.25 லட்சம் குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 29,800 ஆக பதிவாகின. இது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் 13 சதவீத குறைப்புக்கு காரணமாக அமைந்தது. புதிய பாதிப்புகளை விட குணடைபவர்களின் சராசரி விகிதம் அதிகமாக இருக்கும் காரணமாக, மீதமுள்ள 87 சதவிகித குறைப்பு காணப்படுகிறது.
இந்த வீழ்ச்சியில் பாதிக்கும் மேற்பட்டவை மகாராஷ்டிராவில் மட்டும் நிகழ்ந்துள்ளன. 3 லட்சத்திருக்கும் அதிகமாக இருந்த, கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தற்போது 1.9 லட்சமாக குறைந்துள்ளது. மகாராஷ்டிராவைத் தவிர்த்து, 1 லட்சத்திற்கும் அதிகமாக சிகிச்சை பெறுபவர்களை கொண்ட மாநிலமாக கர்நாடகா விளங்குகிறது.
இந்த நேரத்தில் பல குறிகாட்டிகளும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டி வருகின்றன. கொரோனா பாதிப்பு விகிதம் இந்தியாவில் சீரான அளவில் குறைந்து வருகிறது என்பதும் தெரிய வருகிறது. புதிய தொற்றுகளின் எண்ணிக்கையில் தேசிய அன்றாட சராசரி விகிதம், 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் (positivity rate) தேசிய விகிதம் 8 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. ஜூலை நடுப்பகுதியில் இருந்த விகிதத்தை விட தற்போது குறைந்து காணப்படுகிறது. நோய் தொற்றால் இறப்பு விகிதம் 1.52 சதவீதமாக உள்ளது. இது, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த இறப்பு விகிதங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
உலகிலேயே 10 லட்சம் மக்கள் தொகையில் குறைவான இறப்புகளை காணும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அக்டோபர் 2 முதல் கடந்த 14 நாட்களாக 1,100-க்கும் குறைவான உயிரிழப்புகளே இந்தியாவில் நிகழ்ந்துள்ளன. 22 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் தேசிய சராசரியை விட குறைவான இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
தேசிய குணமடைதல் விகிதம், 90 சதவீதத்தை நெருங்குகிறது.
கொரோனா நோய்த் தொற்றில் அதிகப்படியான பாதிப்பைக் கண்டறிந்த கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் தற்போது பாதிப்பு விகிதம் சீரான நிலையில் குறைந்து வருவதற்கான. டெல்லியில் மட்டுமே கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கிட்டத்தட்ட இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு, தினசரி புதிய நோய்த்தொற்றுகள் 3,000க்கும் அதிகமாக உள்ளன.
இருப்பினும், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் கொரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை உயரத் தொடங்கியது. கடந்த 24 மணி நேரத்தில், அமெரிக்காவில் 59,000 க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதற்கு முன், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தான் இத்தகைய போக்கு காணப்பட்டது. யுனைடெட் கிங்டம் மற்றும் ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் மீண்டும் எழுச்சி காணப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.