Amitabh Sinha
புலம்பெயர் தொழிலாளர்களால், பீகார் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை போன்று, அசாம் மாநிலத்திலும், கொரோனா பாதிப்பு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.
அசாம் மாநிலத்தில், மே 25ம் தேதி மட்டும் புதிதாக 148 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 526 ஆக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு, புலம்பெயர் தொழிலாளர்களாலும், அவர்களோடு நேரடி தொடர்பில் இருந்தவர்களாலேயே பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு அமல்படுத்தியிருந்த ஊரடங்கு உத்தரவு, மே 4 ம்தேதி சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. வெளிமாநிலங்களில் சிக்கியிருந்த பல்வேறு மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதன்விளைவாகவே, கேரளா, பீகார், ஒடிசா மாநிலங்களை தொடர்ந்து அசாம் மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்ததற்கான காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்களாலேயே, அசாமில் முதல்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அந்த நேரத்தில், 42 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. அதில் ஒருவர் மரணமடைந்தார். பின் அங்கு புதிதாக தொற்று கண்டறியப்படாத நிலையில், தற்போது அங்கு இரண்டாம் கட்டமாக கொரோனா தொற்று பரவ துவங்கியுள்ளது.
அசாம் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களிலும் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. நாகாலாந்தில் முதல்முறையாக 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் சமீபத்தில் தான் சென்னையிலிருந்து நாகாலாந்துக்கும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.முன்னதாக சென்னையிலிருந்து நாகாலாந்து திரும்பிய ஒருவர் சிகிச்சைக்காக கவுகாத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார். அவர், அப்போது நாகாலாந்து கொரோனா பாதிப்பு கணக்கில் சேர்க்கப்படவில்லை.
மணிப்பூர் மாநிலத்தில் 2 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. தற்போது அங்கு பாதிப்பு 36 ஆக அதிகரித்துள்ளது. சென்னை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 30க்கும் மேற்பட்டோராலேயே, மணிப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிபுரா மாநிலத்தின் தலாய் மாவட்டத்தில் உள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமில் உள்ள 150 வீரர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில், தற்போது திரிபுராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.
மேகாலயா மாநிலத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அவர்களும் குணமடைந்திருந்த நிலையில், வெளிமாநிலத்திலிருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
உத்தர்காண்ட் மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 330 என்ற அளவை கடந்துள்ளது.
தேசிய அளவில், கடந்த 24ம் தேதி புதிதாக 7 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருந்த பரபரப்பு அடங்குவதற்குள், 25ம் தேதி 6 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 24ம் தேதி 3 ஆயிரம் பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டிருந்த நிலையில், 25ம் தேதி 2436 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டிருந்தது. இதில் மும்பையின் பங்கு 60 சதவீதத்திற்கும் மேல் ஆகும். மும்பை நகரில், இதுவரை கொரோனா பாதிப்பிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநிலத்தில், 25ம் தேதி, புதிதாக 163 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில், பீகார், ஆந்திர மாநிலத்தை பின்னுக்குத்தள்ளி, அதிக பாதிப்பு உள்ள மாநிலங்களின் பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil