Dipankar Ghose
Coronavirus (COVID-19): மக்கள் பொதுஇடங்களுக்கு வரும்போது, முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம், பணியிடங்களில் அதிகப்படியான வெப்பம் மற்றும் தனிமனித இடைவெளியை ஏற்படுத்தும் வண்ணம் ஊழியர்களுக்கிடையே திரை உள்ளிட்டவைகளை, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை அம்சங்களாக மத்திய உள்துறை அமைச்சகம், ஏப்ரல் 15ம் தேதி வெளியிட்டிருந்தது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல நெறிமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வகுத்திருந்தது. அத்துடன் இந்த புதிய நெறிமுறைகளும் இணைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வரும் மாதங்களில், கொரோனா வைரஸ் பாதிப்பை முற்றிலும் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு கூடுதல் கவனம் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள், தேசிய வழிமுறைகளாக அங்கீகரிக்கப்பட்டு, நாடெங்குமிலும் உள்ள அலுவலகங்கள், பணியிடங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் கட்டாயமாக அமல்படுத்தப்பட வேண்டும். இந்த வழிமுறைகளை மீறுவோர் மீது, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவின் கீழ், அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள், சுகாதாரம், வெப்பநிலை சோதனை மற்றும் தனிமனித இடைவெளியை வலியுறுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்கள், பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முக கவசத்தை அணிந்திருத்தல், எச்சில் துப்பினால் அபராதம் போன்றவைகளை கட்டாயம் கடைபிடிக்க துவங்கியுள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகள்,நாடு முழுமைக்குமானது என்பதை மாநிலங்கள் மறந்துவிடக்கூடாது. இந்த நெறிமுறைகளை மீறுபவர்கள் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேசிய வழிமுறைகளில் ஒன்றான முக கவசம் கட்டாயம் அணிவது என்பது பொது இடங்களில் மட்டுமல்லாது, அலுவலகம் உள்ளிட்ட பணியிடங்கள், அதிக மக்கள் கூடும் இடங்கள், திருமணம், இறுதிச்சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போதும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கும் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதேபோல், மதுபானங்கள், குட்கா, புகையிலை போன்ற வஸ்துகளின் விற்பனையும் கட்டாயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
அலுவலகங்கள், பணியிடங்கள், தொழிற்சாலைகள் போன்றவைகளில், ஊழியர்கள் அதிகளவில் கூடும்வகையிலான மீட்டிங்குகள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். பணியிடங்களுக்கு செல்வோர் அங்கிருந்து வெளியேறுவோர் என அனைவரும் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
களப்பணியாளர்கள் எனில், அவர்கள் வெளியிடங்களுக்கு செல்ல பொதுப்போக்குவரத்திற்கு பதிலாக அவர்களுக்கு என்று சிறப்பு போக்குவரத்து வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். அந்த சிறப்பு போக்குவரத்து வசதியிலும் அதிகபட்சம் 40 சதவீதம் வரை மட்டுமே ஆட்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
தொழிலாளர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வசதி செய்துதர வேண்டும். 10 மற்றும் அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொள்ளும் வகையிலான மீட்டிங்குகள் தவிர்க்கப்பட வேண்டும். லிப்டுகளில் ஒருசமயத்தில் 2 முதல் 4 வரையிலான ஆட்களே அனுமதிக்கப்பட வேண்டும்.
பணியிடங்களில் உணவு இடைவேளையின் போது ஒரே நேரத்தில் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். மதிய உணவு இடைவேளைகளை, ஊழியர்களின் எண்ணிக்கையை பொறுத்து மாற்றியைமத்து கொள்ள வேண்டும். ஒரு ஷிப்டுக்கும் அடுத்த ஷிப்டுக்கும் இடையில் ஒருமணி நேர இடைவெளி இருக்க வேண்டும். இந்த இடைப்பட்ட நேரத்தில் தூய்மைப்பணியை மேற்கொள்ள வேண்டும்.
65 வயதுக்கும் மேற்பட்டோர் மற்றும் வீட்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதி வழங்க வேண்டும்.
தயாரிப்பு நிறுவனங்கள் எனில், ஊழியர்கள் அடிக்கடி கை கழுவ வேண்டும், பணியிடங்களில் சுத்தம் பேணப்பட அடிக்கடி தரைகள் உள்ளிட்ட இடங்களை டிஸ்இன்பெக்டண்ட் கொண்டு துடைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் தொடர்பான விபரங்கள் அந்தந்த பகுதிகளில் மக்களின் பார்வையில் படும்படி வைக்கப்பட வேண்டும். இந்த மருத்துவமனைகளும், நேரம் காலம் பாராமல், சிகிச்சைக்கு வரும் தொற்று உள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஆரோக்கிய சேது செயலியை, பொதுத்துறை ஊழியர்கள் மட்டுமல்லாது தனியார் நிறுவன ஊழியர்களும் பயன்படுத்தி பயன்பெறும் வகையில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.