இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில், புதிதாக 3,500 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் பங்கு மட்டும் 10 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில், கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொட ஒன்றரை மாதங்கள் ஆன நிலையில், நாலே நாட்களில், பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரம் என்ற அளவிலிருந்து 50 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில், இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்துள்ளது. பெரு நாட்டில் 55 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், இந்தியாவை பெருவை பின்னுக்கு தள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.
நாட்டில், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கும் மேலாக உள்ளது. நாட்டில் தற்போதைய நிலையில் மொத்தம் 52,800 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 7 மாநிலங்களில் உள்ள பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை ஒன்றிணைத்தாலே 43 ஆயிரம் என்ற நிலையை எட்டிவிடுகிறது.
நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் இது 80 சதவீதம் ஆகும். ஆந்திர பிரேசம், பஞ்சாப், மேற்கு வங்கம் மாநிலங்களிலும் பாதிப்பு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது.
மே 4ம் தேதி ஒரேநாளில் 3800 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில், அதற்கடுத்த அதிகபட்சமாக, மே 6ம் தேதி 3,469 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சோதனைக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளதாலேயே, பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக கண்டறியப்பட்டுள்ள 3469 தொற்றுகளில், 2 ஆயிரம் பேர் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களை சேர்ந்தவர்கள் எனவும், 800 பேர் குஜராத் மற்றும் டெல்லி பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்ட புதிய 1233 தொற்றுகளில், 769 பேர் மும்பையை சேர்ந்தவர்கள். மும்பையில் சோதனை செய்யப்பட்ட மக்களில் 15 சதவீதத்தினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய அளவில் இது 3 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் 12.75 லட்சம் மக்களுக்கு கொரோனா சோதனை நிகழ்த்தப்பட்டதில், 53 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில், 73 ஆயிரம் பேருக்கு சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளதில், 10 ஆயிரம் பேருக்கு மேலாக கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.